பொதுமக்களுக்குாிய தினம்
திங்கட்கிழமை 8:30am - 4:15pm
புதன்கிழமை 8:30am - 4:15pm
Registrar and Notary public
திட்டமிடப்பட்டுள்ள நிகழ்வுகள்
April 2017
S M T W T F S
26 27 28 29 30 31 1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 1 2 3 4 5 6
இணைய பயனாளர்
எங்களிடம் 60 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்
சுற்றுலா இடம்
No images

 

புகைப்படத்துறை  பயிற்சிப்பட்டறை

புகைப்படத் துறையை  மேம்படுத்துதல்  மற்றும் அபிவிருத்தி  செய்யும் நோக்கில்  ஏற்பாடு  செய்யப்படுகின்ற  அரச  புகைப்பட  விழாவை முன்னிட்டு 2017 மார்ச்  மாதம் 30 ஆம்  திகதி மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.00 மணி வரை வடக்கு மாகாணத்தை உள்ளடக்கியதாக  யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு நாள் புகைப்பட பயிற்சிப்பட்டறையை நடாத்துவதற்கு கலாசார அலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு  செய்துள்ளது.

புகைப்படத்துறையில் ஆர்வமுள்ளவர்கள் சங்கானை கலாசார மத்திய நிலையத்தில்  இடம்பெறவுள்ள   இந்நிகழ்வில்  கலந்து கொள்ளலாம்.
தகவல் : கலாசார  அலுவல்கள் திணைக்களம் , மாவட்ட செயலகம் யாழ்ப்பாணம்.

உள்ளுர் ஏற்றுமதியாளர்கள் தோற்றுவிப்பதை இலக்காகக் கொண்ட தேசிய நிகழ்ச்சித்தி￰ட்டம்

2020ஆம் ஆண்டளவில் 2000 உள்ளுர் ஏற்றுமதியாளர்களை தோற்றுவிப்பதை இலக்காக கொண்ட தேசிய நிகழ்ச்சித்தி￰ட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது

பிராந்திய மட்டங்களில் 2000 புதிய ஏற்றுமதியாளர்களை அதிகரித்து நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சியடைய வைக்கும் முகமாக உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சு மற்றும் மூலோபாய அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சினால் இந்த செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது

இன்று யாழ் மாவட்டச் செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான முதலாவது தேசிய செயலமர்வு மற்றும் வர்த்தக கண்காட்சி ஆகியவற்றினை சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க மற்றும் மூலோபாய அபவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்

முதற்கட்டமாக உள்ளுர் முதலீட்டாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் உற்ட்பத்தி பொருட்களை உள்ளடக்கி யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  உற்பத்திசார் கண்காட்சியையும் அமைச்சர்கள் ஆரம்பித்துவைக்கப்பட்டது

மேலும் வடமாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட சுமார் 500 உள்ளுர் முதலீட்டாளர்களின் வாண்மை விருத்தியை அதிகரிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செயலமர்வும் இதற்கிணைவாக இடம்பெற்றது 

வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் கூரே, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஏற்றுமதி அபிவிருத்தி சபை பணிப்பாளர் இந்திராணி, வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்

 

 

 

 

அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல்

கனேடிய வெளிவிவகாரங்கள் (வெளிநாட்டு அலுவல்கள் வியாபாரம் மற்றும் அபிவிருத்திப் பிரிவு) ஆய்வாளர் மக்லாரன் மற்றும் கனேடிய அரசியல் உயர் ஆலோசகர் அலுவலகத்தின்  ஆய்வாளர் ஜவாத்க குரேஷி ஆகியோர் இன்றைய தினம் (2016.11.09)  யாழ்மாவட்ட அரசாங்க  அதிபர் நா.வேதநாயகன் அவர்களை யாழ்மாவட்ட செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

யாழ் மாவட்டத்தில்  தற்போது மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் மீள்குடியேற்றம் தொர்பில் இச்சந்திப்பின் போது கலந்துரையாடினர்.


யாழ் மாவட்டக் கரையோரப்பகுதிகளில்   கரையோர மூலவள முகாமைத்துவ  திணைக்களத்தின்  முன் அனுமதியின்றி எந்த  வகையான அபிவிருத் தி செயற்பாடுகளிலும்  ஈடுபடலாகாது

யாழ் மாவட்டக் கரையோரப்பகுதிகளில் கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களத்தின் முன் அனுமதியின்றி எந்தவகையான அபிவிருத்தி செயற்பாடுகளிலும் ஈடுபடலாகாது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் தற்போது அதிகளவான கட்டுமான நடவடிக்கைகள் நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும் அமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலான கட்டடங்கள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளன.

கரையோர வலயம் என கருதப்படும் கடற்கரைப்பகுதியில் இருந்து தரைநோக்கிய 300 மீற்றர் தூர எல்லையும் மற்றும் கடலை நோக்கிய 2 கிலோமீற்றர் வரையான எல்லையையும் உள்ளடக்கிய பிரதேசங்களில் கடற்றொழில் தேவைகருதியோ வேறு எந்த தேவை கருதியோ நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ கட்டுமாணங்களை அமைத்தல், புனரமைத்தல் , மற்றும் கடற்றொழில் சார்ந்த கட்டமைப்புக்களை(வான்தோண்டுதல், வாடிஅமைத்தல், ஓய்வுமண்டபம், மற்றும் இதர கட்டமைப்புக்கள்) நிர்மாணிப்பதற்கும் கரையோரம்பேணல் மற்றும் கரையோரமூலவள முகாமைத்துவ திணைக்களத்தின் முன் அனுமதியினை பெறுவது அவசியமானதாகும்.

கரையோர வலயத்தில் கட்டுமாணங்கள் தொடர்பில் உரிய முன் அனுமதியினை யாழ்மாவட்ட செயலகத்தில் இயங்கிவரும் கரையோரம்பேணல் மற்றும் கரையோரமூல வள முகாமைத்துவ திணைக்களத்தின் ஊடாக பெற்றுக் கொள்ளமுடியும். மேலும் சட்டவிரோதமாக கரையோரவலயத்தினுள் அமைக்கப்பட்டு வருகின்ற கட்டமைப்புகளுக்கு எதிராக 1988ஆம் ஆண்டின் 64 ஆம் இலக்க மற்றும் 2011ஆம் ஆண்டின் 49 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் திருத்தியமைக்கப் பெற்ற 1981 ஆம் ஆண்டின் 57 ஆம் இலக்க கரையோரம் பேணல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த நடவடிக்கையை பின்பற்றுவதனூடாக எமதுகடல்சார் சூழலையும், வளங்களையும் எமது எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாக்கும் பணியில் நாம் ஒன்றிணைய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்

 

அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் பொதுவான கொள்கைகள் அமுலாக்கம் தொடர்பான பொதுமக்கள் கருத்து அறிதல்

அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பொதுவான கொள்கைகள் அமுலாக்கம் தொடர்பான விடயங்களில் பல தரப்பினரையும் இணைத்துக் கொள்ளும் நோக்கத்துடன் யாழ் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் நகர அபிவிருத்தித் திட்டம் மற்றும் ஏனைய உத்தேச அபிவிருத்தித் திட்டங்கள், அரச கொள்கை அமுலாக்கங்கள் தொடர்பாக பொதுமக்களில் உரிய துறைகளில் ஆர்வமும் புலமையும் தகுதிகளையும் கொண்டுள்ளவர்களின் கருத்துக்கள் அவ்வப்போது அறிவதற்கும் சகலரும் ஏற்றுக்கொள்ளப்பாலதானவற்றை உள்வாங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஒவ்வொரு துறையிலும் அபிவிருத்தியிலும் கொள்கை அமுலாக்கலிலும் பங்குபற்றி ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைப்பதற்கு விருப்பமும் தகுதியும் துறைசார் அனுபவமும் உடையவர்கள் தங்களது விண்ணப்பங்களை இரண்டு பக்கங்களிற்கு மேற்படாமல் சுயமாக தயாரித்து 05.11.2016 ஆம் திகதிக்கு முன்னதாக அரசாங்க அதிபர், மாவட்டச் செயலகம் யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் இது போன்று பல்துறைகளிலும் ஆர்வமும் தகுதியும் கொண்டிருந்து தற்போதும் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு மக்கள் ஆலோசனை கலந்துரையாடல்களில் கலந்துகொண்டு தங்களது ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கிவரும் புலமையாளர்கள், ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்கள், வங்கியாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட இன்னோரன்னவர்கள் பாராட்டுக்குரியவர்கள் என்பதுடன் அவர்களது சமூக பொறுப்பும் மெச்சப்படக்கூடியதாகும் என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

நா.வேதநாயகன்

அரசாங்க அதிபர்

வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் உதவி

பாதிக்கப்பட்டபிரதேசசெயலகபிரிவுகளின்எண்ணிக்கை

:

04

பாதிக்கப்பட்டகிராமஅலுவலர்பிரிவுகளின்எண்ணிக்கை

:

28

பாதிக்கப்பட்டகுடும்பங்களின்எண்ணிக்கை

:

4,260

பாதிக்கப்பட்டஅங்கத்தவர்களின்எண்ணிக்கை

:

13,841

நிவாரணத்திற்குதேவையானநிதி

:

-

நீர்விநியோகத்திற்குதேவையானநிதி

:

Rs.3,501,020.00

தற்போதுள்ளபவுசர்களின்எண்ணிக்கை

:

3

தேவையானபவுசர்களின்எண்ணிக்கை

:

05

கிடைக்கப்பெற்றுள்ளநிதி

:

Rs.300,000.00

அடுத்தஇருவாரங்களுக்குதேவையானநிதி

:

Rs.2,261,077.33

 

மூத்த பிரஜைகளுக்கான தேசிய கொள்கையினைத் தயாரித்தல் தொடர்பான நிகழ்வு

எமது நாட்டின் மூத்த பிரஜைகளுக்கான தேசிய கொள்கையினை தயாரிக்கும் நிகழ்வு 19.10.2016 அன்று காலை 10.00- பி.ப.1.00 மணி வரை யாழ் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது


அரசியலில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல்

அரசியலில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல் தொடர்பான கலந்துரையாடலொன்று 17.10.2016 காலை மு.ப. 9.00 மணி வரை யாழ் மாவட்டச் செயலகக் கேடபோர் கூடத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின்போது  உரையாற்றிய யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், எமது நாட்டிலேயே உலகின் முதல் பெண் பிரதமர் காலம் சென்ற ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க அவர்கள் இருந்தார். ஆனால் உள்ளூராட்சி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் பெண்களின் பங்களிப்பு  குறைவாகக் காணப்படுகிறது. அதிலும் தமிழ் பகுதிகளில் மிகவும் குறைவாகும். தற்போது நிர்வாகசேவை உட்பட  அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துக் காணப்படுகிறது. அதேபோல அரசியலிலும் பெண்கள் குரல் வீதத்திற்கேற்ப ஒலிக்க வேண்டும். இவ்விழிப்புணர்வு அனைத்துப் பெண்களையும் சென்றடைய வேண்டும் எனத் தெரிவித்தார்.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் ஶ்ரீயானி விஜேசுந்தர, ஓய்வுபெற்ற மேல்மாகாண உள்ளூராட்சித் திணைக்கள ஆணையாளர் தர்மசிறி நாணயக்கார, மாவட்டப் பெண்கள் அபிவிருத்தி இணைப்பாளர் என். உதயனி, மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், சிவில் அமைப்பு  மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.


யாழ் மாவட்டத்தில் பால்நிலைசார் வன்முறைகள்

யாழ் மாவட்டத்தில் பால்நிலைசார் வன்முறைகளுக்கான முறைப்பாட்டு சம்பவங்கள் கடந்த வருடத்தினை ஒத்த அளவிலேயே காணப்படுவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் அவர்கள் நேற்றைய தினம் இடம்பெற்ற பால்நிலைசார் வன்முறைக்கு எதிரான செயற்பாட்டுக்குழுக் கூட்டத்தின்போது தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பால் நிலைசார் வன்முறைகள் கடந்த வருடத்தினை ஒத்த அளவிலேயே காணப்படுகிறது.. இவ்வாறான பால்நிலை வன்முறைகள் அதிகமாக இடம்பெறும் கிராமங்களை பிரதேச  செயலக ரீதியாக இனங்கண்டு அவற்றிற்கு தொடர்ந்து விசேட திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இச்செயற்பாட்டுக்குழுக் கூட்டம் மாவட்ட மட்டத்திலும் தவறாது நடாத்தப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.


யாழில் வீதிவிபத்துதொடர்பில் விழிப்புணர்வு நடவடிக்கை

வீதிவிபத்துக்களைத் தவிர்க்கும் நோக்கிலும் அதுதொடர்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உயிர்காப்போம் எனும் கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது

யாழ்போதனா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கோரிக்கைக்கமைவாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்தகவனயீர்ப்பு நடவடிக்கை யாழ் போதனாவைத்தியசாலை, யாழ்மாவட்டச்செயலகம், யாழ்மாநகரசபை மற்றும் யாழ்பிராந்திய பாடசாலைகளில் இடம்பெற்றது

காலை பத்துமணி முதல் பதினொரு மணிவரையில் குறித்த அலுவலகங்களின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் வீதிவிபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வு பதாதைகளைத் தாங்கியவாறு இந்நடவடிக்கைகளை மேற்கொண்டனர்

வீதிவிபத்துக்களைக் கட்டுப்படுத்த சட்டதிட்டங்களை முறையாக அமுல்படுத்த வலியுறுத்தி இதன்நிறைவில் வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் மகஜர் ஒன்றும் யாழ்மாவட்ட அரசாங்கஅதிபர் நா.வேதநாயகனிடம் கையளிக்கப்பட்டது

குறித்த மகஜர்களை உரியவர்களிடம் கையளித்து இதுதொடர்பில் சட்டநடவடிக்கைகளை தீவிரப்படுத்த தாம் நடவடிக்கை எடுப்பதாக மகஜரைப் பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவித்தார்

 

 

மீள்குடியேற்றம்  தொடர்பான கலந்துரையாடல்

யாழ் பலாலி விமானநிலைய விஸ்தரிப்பு காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் மயிலிட்டி மீன்பிடிதுறைமுக புனரமைப்பு தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ்மாவட்ட அரசாங்கஅதிபர் என்.வேதநாயகன் தலைமையில் யாழ்மாவட்டச்செயலக கேட்போர் கூடத்தில் 18.09.2016 அன்று இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் திருமதி.விஜயகலா மகேஸ்வரன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறிதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், அங்கஜன் இராமநாதன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்கள் பிரதேச செயலாளர்கள் துறைசார் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

மேற்படி பலாலி விமானநிலைய புனரமைப்பு மற்றும் துறைமுக அபிவிருத்தி தொடர்பில் கடந்தமாதம் 15ம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ்பலாலி படைத்தளத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிற்கு அமைவாக மேற்படி விடயங்களில் மாவட்ட மட்டத்திலான தீர்மானத்தை எடுக்கும் நோக்கில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேசசெயலாளர்கள், மீள்குடியேற்ற குழுவின் தலைவர்கள் மற்றும் இடம்பெயர்ந்த வலிவடக்கு மற்றும் கிழக்கு பகுதிமக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டு தமது கருத்துக்களை இதில் முன்வைத்தனர்.

 

வனரோப்பா தேசிய மரநடுகை நிகழ்ச்சித் திட்டம்

 

வனரோப்பா தேசிய மரநடுகை நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான மாவட்டமட்டக் கலந்துரையாடலொன்று 03.10.2016 அன்று யாழ் மாவட்டச் செயலகத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் அவர்களின் ்தலைமையில் இடம்பெற்றது.

மரநடுகை மாதமாக குறிப்பிடப்பட்டுள்ள இம்மாதம் மட்டுமன்றி தொடர்ந்து மரநடுகை மேற்கொள்ள வேண்டும். அழிக்கப்படும் பனை மரங்களின் அளவில் பத்து மடங்கு மரங்களை நட வேண்டும். இளம் சந்ததியினருக்கு மரம் வளர்ப்பது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பசுமைக் கிராமங்களை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அனைத்து அரச நிறுவனங்கள், பொது அமைப்புக்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களையும் இணைத்து இத்திட்டத்தினை வெற்றிகரமாக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இக்கலந்துரையாடலின்போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில்நந்தன், பிரதேச செயலாளர்கள், வனவளப் பாதுகாப்பு அலுவலர்கள், அரச மரக்கூட்டுத்தாபன அலுவலர்கள் பங்குபற்றியிருந்தனர்.

 

யாழ்மாவட்டத்தில்  பாவனையாளர் அலுவல்கள் தொடர்பிலான  வழக்குகள்

யாழ்மாவட்டத்தில் கடந்த ஒன்பது மாதங்களில் பாவனையாளர் அலுவல்கள் தொடர்பிலான 672 வழக்குகள் பாவனையாளர் அதிகாரசபையினால் பதியப்பட்டுள்ளதுடன் இதற்கான தண்டப்பணமாக 43 இலட்சத்து  34 ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் அறவிடப்பட்டுள்ளது.

சரியான நிறையில் பொருட்களை விற்பனை செய்யாமை, விலை உற்பத்தி மற்றும் காலாவதி திகதிகளைக் காட்சிப்படுத்தாமை,  சிறியளவிலான நுகர்வோர் மோசடிகள்,  காலாவதியான தரமற்ற பொருட்களை விற்பனை செய்தல் போன்றவற்றிற்காக பதியப்பட்டுள்ள இவ்வழக்குகளில் ஜனவரி மாதம் 62 வழக்குகளுக்கு தண்டப்பணமாக 7 இலட்சத்து 16 ஆயிரத்து ஐந்நூறு ரூபாயும் பெப்ரவரிமாதம் 86 வழக்குகளுக்கு தண்டப்பணமாக 8 இலட்சத்து 94 ஆயிரம் ரூபாயும் மார்ச் மாதம் 65 வழக்குகளுக்கு தண்டப்பணமாக 4 இலட்சத்து 17 ஆயிரத்து ஐந்நூறு ரூபாயும் ஏப்ரல்மாதம் 68 வழக்குகளுக்கு தண்டப்பணமாக 3 இலட்சத்து 70 ஆயிரம்  ரூபாயும் மே மாதம் 64 வழக்குகளுக்கு தண்டப்பணமாக 2 இலட்சத்து 92 ஆயிரத்து ஐந்நூறு ரூபாயும் ஜூன்மாதம் 85 வழக்குகளுக்கு தண்டப்பணமாக 3 இலட்சத்து 36 ஆயிரம் ரூபாயும் ஜூலை மாதம் 71 வழக்குகளுக்கு தண்டப்பணமாக 2 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாயும் ஓகஸ்ட் மாதம் 86 வழக்குகளுக்கு தண்டப்பணமாக 6 இலட்சத்து 6 ஆயிரத்து ஐந்நூறு ரூபாயும் செப்டம்பர் மாதம் 85 வழக்குகளுக்கு தண்டப்பணமாக 4 இலட்சத்து 11 ஆயிரம் ரூபாயும் அறவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

யாழில் கரையோர சூழல் பாதுகாப்பு தினம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலுக்கமைவாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுவரும் தேசிய கரையோர மற்றும் கடல் வளங்களை பாதுகாக்கும் வாரத்தின் வடமாகாணத்திற்கான பிரதான நிகழ்வு இன்று (20)யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது

கடல்சார் சூழல் பாதுகாப்புச்சபை  கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திணைக்களம் ஆகியவற்றின் இணை அனுசரணையுடன் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இந்நிகழ்வு குருநகர் தொடர்மாடி குடியிருப்பை அண்மித்த கடற்கரையில் இடம்பெற்றது.
கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் ரோஹன பெரேரா மற்றும் அரச அலுவலர்கள் பாடசாலை மாணவர்கள், படையினர் மற்றும் பொதுமக்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டு குறித்த கடலோரப் பகுதிகளை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்


 

 

பிரதமர் யாழ் விஜயம்

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழ் மவாட்டச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நிர்வாகக் கட்டடத்தொகுதியை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலில் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் 800 மில்லியன் ரூபா நிதியில் நான்கு மாடிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள இக்கட்டடத்தின் மூலம் யாழ் மாவட்டச் செயலகத்தில் இதுவரை நிலவிவந்த இடப்பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட்டு விரைவான அரச சேவையை வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது

உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தலைமையில் நடைபெற்ற இன்றைய நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அமைச்சர்களான டி.எம்.சுவாமிநாதன் மற்றும் திருமதி விஜயகலா மகேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், மஸ்தான், டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்


வடமாகாணத்தில் சட்ட ஒழுங்குகள் தொடர்பான கலந்துரையாடல்

வடமாகாணத்தில் சட்ட ஒழுங்குகள் தொடர்பாக உள்ள 4 பிரதான பிரச்சனைகள் தொடர்பில் சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையில்  மக்கள் பிரதிநிதிகள் மற்றும்  சிவில் சமூகத்தினருடனான கலந்துரையாடல் 17.09.2016 சனிக்கிழமை அன்று  யாழ் மாவட்டச்செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

வடமாகாணத்தில் தற்போதுள்ள பிரச்சினைகளான சட்டவிரோத செயற்பாடுகள், போதைப்பொருள், தமிழ் மொழி மூலமான பொலிஸாரின் பயன்பாடு மற்றும் பொலிஸ் நிலையங்களை அமைத்தல் தொடர்பாக இதில் கலந்துரையாடப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா,சுமந்திரன், சார்ல்ஸ், யாழ் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகள், வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாணசபை உறுப்பினர்கள், பொலிஸ் அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும், சிவில் சமூகத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


யாழ் மாவட்ட புதிய நிர்வாக்க கட்டடத்தொகுதி மக்கள் பாவனைக்குக் கையளிக்கும் நிகழ்வு

யாழ் மாவட்ட புதிய நிர்வாக கட்டடத்தொகுதி மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு இம்மாதம் 17ம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு யாழ் மாவட்டச் செயலக வளாகத்தில்  நடைபெறவுள்ளது.

கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் உள்நாட்டலுவல்கள்  அமைச்சர் கௌரவ. வஜிர  அபேவர்த்தன, உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சர் கௌரவ நிமல் லங்ஸா, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன், சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ திருமதி. விஜயகலா மகேஸ்வரன், யாழ் மாவட்ட இணைப்புக்குழு அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.


யாழ் மாவட்ட அரச அதிபர் வெற்றிக்கிண்ணம் யாழ் பிரதேச செயலக அணியினர் வசம்

யாழ் பிரதேச செயலக அணியினர் வசமானது. இவ்வருடத்திற்கான அரச அதிபர் வெற்றிக்கிண்ணம் இரண்டாம் இடத்தினை யாழ் மாவட்டச் செயலகம் பெற்றுக் கொண்டது.

அரச அதிபர் வெற்றிக்கிண்ணம்  விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வுகள் நேற்றைய தினம் (13.09.2016) பி.ப. 1.00 மணியளவில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

யாழ் மாவட்டச்செயலக நலன்புரி கழகத்தின் ஏற்பாட்டில் நலன்புரி கழகத்தலைவர் செ.ரகுநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெண்களுக்கான துடுப்பாட்டம், உதைபந்தாட்டம், கயிறு இழுத்தல் மற்றும் பாரம்பரிய போட்டிகள் போன்றவற்றின் இறுதிநிகழ்வும் பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றன.

பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் அவர்களும் யாழ் மாட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில்நந்தனன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக தெல்லிப்பழை பிரதேச செயலாளர் க. ஶ்ரீமோகனன் மற்றும் மகாஜனாக் கல்லூரி அதிபர் திரு.ம.மணிசேகரன்  ஆகியோர் கலந்து கொண்டதுடன் பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலக மற்றும் பிரதேசசெயலகங்களின் உத்தியோகத்தர்களும் இந்நிகழ்வில் இணைந்திருந்தனர்.


2016 ஆம் ஆண்டு தேருநர்களைக் கணக்கெடுத்தல்

கணக்கெடுக்கும் அலுவலரால் (கிராம அலுவலர்) நீக்கப்படுவதற்காக சிபார்சு செய்யப்பட்டுள்ள பெயர்களும், தேருநர் இடாப்பில் பதிவு செய்வதற்கு சிபார்சு செய்யப்பட்டுள்ள பெயர்களும் அடங்கிய பட்டியல்கள் 2016.09.01 ஆம் திகதியிலிருந்து 2016.09.28 ஆம் திகதி வரை மாவட்ட தேர்தல்கள் அலுவலகம்/ பிரதேச செயலகம்/ கிராம அலுவலர் அலுவலகம்/ உள்ளூராட்சி அலுவலகங்கள் ஆகிய இடங்களில் பார்வைக்கு வைக்கப்படுமென யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில்நந்தனன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உரிமைக் கோரிக்கைகள், ஆட்சேபனை தெரிவித்தல்கள் மேற்கூறப்பட்ட பட்டியல்கள் பார்வைக்கு வைக்கப்படும் காலப்பகுதியினுள் குறிப்பிட்ட மாவட்டத்தின் பதிவு அலுவலருக்கு (மாவட்டச் செயலாளர்) அல்லது மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தின் உதவிப் பதிவு அலுவலருக்கு சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.

2016 ஆம் ஆண்டு தேருநர் இடாப்பில் பெயர் சேர்க்கப்படுவதற்காக இருக்கும் இறுதி சந்தர்ப்பம் இதுவாதலால் உடனடியாக பொதுமக்கள்   தங்களைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அவர் மேலும் தெரிவித்தார்.

சுயதொழில் கண்காட்சி மற்றும் விற்பனை

புனர்வாழ்வு அதிகாரசபையின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டச்செயலகமும் இணைந்து நடாத்தும் இச்சுயதொழில் கண்காட்சி மற்றும் விற்பனை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ம் திகதிவரை நடைபெறும்.உள்ளுர் உற்பத்திப்பொருள் கண்காட்சியொன்று 25.08.2016 அன்று பி.ப2.00 மணியளவில் நல்லூர் சைவபிரகாச மகாவித்தியாலயத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

சீன நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மற்றும் யாழ் அரச அதிபருக்கிடையிலான சந்திப்பு

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் சீன நாட்டின் இலங்கைக்கான தூதுவர் இ.சியான்லியாங் அவர்கள் தலைமையிலான குழுவிற்குமிடையிலான சந்திப்பொன்று 14.06.2016 அன்று யாழ் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

யாழ் மாவட்டத்தில் தற்போது நடைபெறுகின்ற மீள்குடியேற்றம் சம்பந்தமான திட்டங்கள், அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் நல்லிணக்கம் சம்பந்தமாக நடைமுறையிலுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக அரசாங்க அதிபரிடம் இச்சந்திப்பின்போது கேட்டறிந்து கொண்ட சீன தூதுவர் இ.சியான்லியாங் யாழ் மாவட்டத்திற்கு உதவ தாம் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.


பிரித்தானிய தூதுவர் யாழ் அரச அதிபருக்கிடையில் சந்திப்பு

பிரித்தானியாவின் இலங்கைக்கான தூதுவர் ஜேம்ஸ் டொரிஸ் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகனை யாழ் மாவட்டச் செயலகத்தில் 10.06.2016 அன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்
மத்திய அரசினால் யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி தொடர்பாகவும் யாழ் மாவட்டத்தில் அண்மையில் மீள்குடியேறிய மக்களின் தேவைகள் மற்றும் அவர்களிற்கான வாழ்வாதார தேவைகள் தொடர்பாக பிரித்தானிய தூதுவர் தம்மிடம் கேட்டறிந்ததாக அரசாங்க அதிபர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்

 

யாழில் போசாக்கை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்

யாழ் மாவட்டத்தில் காணப்படுகின்ற போசாக்கு குறைபாடுகளை நிவர்த்தி செய்து போசாக்கை மேம்படுத்துவது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று(10) இடம்பெற்றது
இக்கலந்துரையாடல் தொடர்பில் அரசாங்க அதிபர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதியின் பணிப்புரையில் நாட்டில் போசாக்கு மட்டத்தை அதிகரித்து போசாக்கற்றவர்களின் சதவிகிதத்தை குறைப்பதை அடிப்படையாக கொண்டு இவ்வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது
சுகாதார அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில்  நடைமுறைப்படுத்தப்படும் இச்செயற்திட்டத்தின்கீழ் யாழ் மாவட்டத்திற்கான போசாக்கு குறைபாடுகள் மற்றும் தேவைகள் தொடர்பாக ஆராயும்பொருட்டு இக்கலந்துரையாடல் இன்று இடம்பெற்றுள்ளது
ஜனாதிபதி செயலகம் மற்றும் சுகாதார அமைச்சிலிருந்து வருகை தந்திருந்த இத்திட்டத்திற்கு பொறுப்பான  வளவாளர்களினால் இத்திட்டத்தின் செயன்முறை தொடர்பில் விரிவுரைகள் இடம்பெற்றது என்று அவர் தெரிவித்தார்


வாக்காளர் தினத்தை முன்னிட்டு யாழ் மாவட்ட தேர்தல் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வுப்பேரணி

வாக்காளர் தினத்தை முன்னிட்டு யாழ் மாவட்ட தேர்தல் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வுப்பேரணி ஒன்று யாழ்ப்பாணத்தில் நேற்று (01) காலை இடம்பெற்றது.

தகைமையுடைய அனைத்து பிரைஜைகளையும் உள்ளடக்கிய தேருநர் இடாப்பொன்று எனும் தொனிப்பொருளில் யாழ் மத்திய பேருந்து நிலையைத்தில் வைத்து குறித்த விழிப்புணர்வுபேரணியை மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹம்மட் ஆரம்பித்து வைத்தார்.

வாக்காளர் பதிவுகள் தொடர்பில் துண்டுப்பிரசுரங்களை வழங்கியவாறு  வைத்தியசாலை வீதியூடாக யாழ் மாவட்ட செயலகத்தில் சென்று இப்பேரணி நிறைவு பெற்றது.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் அகிலன் மற்றும் அரச அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் என பலரும் இப்பேரணியில் இணைந்திருந்தனர்.

அனர்த்த பாதிப்புக்குள்ளானவர்களுக்கான நிவாரணப் பொருட்கள் சேகரித்தலும் விநியோகித்தலுக்குமான நிலையத்திற்கு யாழ் புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் சார்பில் நிவாரணப் பொருட்களைப் பிராந்திய சுரங்கங்கள் பொறியியலாளர் அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளரிடம் இன்று கையளித்தார்

 

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான தூதுவர் டேவிட்டலி யாழ் மாவட்டச் செயலகத்திற்கு விஜயம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான தூதுவர் டேவிட்டலி அவர்களுக்கும்  யாழ் மாவட்ட அரச அதிபர் நா. வேதநாயகன் அவர்களுக்கும் இடையேயான சந்திப்பொன்று 18.05.2016 அன்று இடம்பெற்றது.

யாழ் மாவட்டச் செயலகத்திற்கு விஜயம் செய்த ஐரோப்பிய  ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைத் தீவுகளிற்கான தூதுவர் டேவிட்டலி மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்து கலந்துரையாடினார். யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தித் திட்டங்கள், வாழ்வாதார உதவித்திட்டங்கள் மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அனர்த்த பாதிப்புக்குள்ளானவர்களுக்கான நிவாரணப் பொருட்கள் சேகரித்தலும் விநியோகித்தலும்

அனர்த்த பாதிப்புக்குள்ளானவர்களுக்கான நிவாரணப் பொருட்கள் சேகரித்தலும் விநியோகித்தலுக்குமான பொறிமுறை  யாழ்மாவட்டச் செயலகத்தில்  உருவாக்கப்பட்டுள்ளதாக  யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் அதிமேதகு ஜனாதிபதியின்  செயலாளரினால் எமக்கு அறிவுறுத்தப்பட்டதற்கு அமைவாக நிவாரணப் பொருட்களை சேகரித்தல், விநியோகித்தலுக்கான நிலையம் யாழ் மாவட்டச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனவும் நன்கொடைகளை வழங்க முன்வரும் நலன்விரும்பிகள் அது தொடர்பான விடயங்களை அறிந்து கொள்ள மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளருடன் 0773957894 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்வதற்கு ஏற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

யாழ் மாவட்டக் கிராம அபிவிருத்தித் திணைக்கள செயற்பாடுகள் தொடர்பாக அரசாங்கஅதிபர், மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் திணைக்களப் பணிப்பாளர் ஆகியோர் இணைந்து திணைக்கள உத்தியோகத்தர்களுடன் ஆராய்வு

யாழ் மாவட்ட கிராம அபிவிருத்தி அலுவலகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட கிராம அபிவிருத்தித் திணைக்கள செயற்பாடுகளின் முன்னேற்றங்களை ஆய்வுசெய்வதற்கான கலந்துரையாடல் அரசாங்கஅதிபர் தலைமையில் 10.05.2016 செவ்வாய்க்கிழமை பி.ப 2.00 மணியளவில் அரசாங்கஅதிபரின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் அரசாங்கஅதிபர் திரு.நா.வேதநாயகன், மேலதிக அரசாங்கஅதிபர் திரு.பா.செந்தில்நந்தனன் மற்றும் கிராமஅபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் ஜெ.ஜெ.சி.பெலிசியன் ஆகியோர் இணைந்து மாவட்ட கிராமஅபிவிருத்திஉத்தியோகத்தர், 15 பிரதேசசெயலர் பிரிவுகளிலும் கடமையாற்றுகின்ற கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் தையல் போதனாசிரியர்கள் ஆகியோருடன் ஆரய்ந்தனர்.

இதன்போது 2016ம் ஆண்டில் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் அனைத்து கிராம, மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களினை கணக்காய்வு செய்து அனைத்து சங்கங்களும் ஒரே கணக்கு நடைமுறைக்கு மாற்றும் செயற்றிட்டம், திணைக்கள செயற்பாடுகளை e-government முறைமைக்கு மாற்றும் செயற்றிட்டம், மாதர் கிராம அபிவிருத்திசங்கங்களின் மாவட்ட இணையம் உருவாக்கும் செயற்றிட்டம் போன்ற விடயங்களை அரசஅதிபர் பணிப்பாளரிடமிருந்து கேட்டறிந்து அதனை வரவேற்றதுடன் கிடைக்கப்பெறும் நிதி மத்தியமாகாண நிதி என தனித்து வேலை செய்யாது மாவட்டத்திற்கு கிடைத்த நிதி எனும் நோக்கில் தொடர்புடைய அனைத்து மத்தியமாகண உத்தியோகத்தர்களும் இணைந்து குழுவாக வேலை செய்ய வேண்டுமென வலிறுத்தினார். மேலும் இக்கலந்துரையாடலினை ஒழுங்கமைத்த மாவட்ட கிராமஅபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.நா.பஞ்சலிங்கம் அவர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் இக்கலந்துரையாடல் மிகவும் தேவையான ஒன்று எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து ஒவ்வொரு விடயங்களாக தனித்தனியாக அரசஅதிபரினால் ஆராயப்பட்டன. கிராம, மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் மீள்சூழற்சி கடன்நிதி அறவீடுகளிலுள்ள பிரச்சினைகள் அதற்கான நடவக்கைகள், மீள்சூழற்சி கடன்நிதித்திட்டத்துக்கான பயனாளிகள் தெரிவு, சங்கங்களின் ஒப்பந்த வேலைகளிலுள்ள பிரச்சினைகள், சங்கங்கள் நிதிகளினைக் கையாளும்போது அவற்றினை யாப்புவிதியிலுள்ள நிதிநடைமுறைக்கு முரணாக மேற்கொள்ள தூண்டுகின்ற ஒரு சிலரின் பிழையான வழிகாட்டல்கள் மற்றும் தலையீடுகள், பிரதேசசெயலகங்களில் கிடைக்கப் பெறுகின்ற ஒத்துழைப்புக்கள் போன்ற விடயங்களை தனித்தனியாகவும் விரிவாகவும் ஆராய்ந்து பொருத்தமான ஆலோசனைகளினை வழங்கியதுடன் தன்னாலான முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதாக தெரிவித்ததுடன் பொருத்தமான தகவல்களினை பிரதேசசெயலர்களுக்கு வழங்கி அதிக ஒத்துழைப்பினையும் குழுச்செயற்பாட்டிற்கான வழிவகைகளினையும் பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.

மேலும் மீள்சூழற்சி கடன்திட்டம் மற்றும் ஒப்பந்த வேலை தொடர்பான செயற்பாடுகளில் உத்தியோகத்தர்களின் நெருக்கமான கண்காணிப்பு இருக்க வேண்டுமென வலியுறுத்தியதுடன் பிரதேசசெயலர் பிரிவு ரீதியாக காலாண்டுக்கு ஒருமுறை மீள்சூழற்சி கடன்திட்டம் மற்றும் ஒப்பந்த வேலைகளில் ஈடுபடும் கிராம, மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களினை அழைத்து முன்னேற்றங்கள் ஆராயப்பட வேண்டுமென வலியுறுத்தினார். அத்துடன் பிரதேசசெயலாளர்களையும் கிராமஅபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் ஒன்றாக அழைத்து கலந்துரையாடலொன்று நடாத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அரசஅதிபர் அதற்கான ஒழுங்கினை தன்னுடன் கலந்துரையாடி மேற்கொள்ளும்படி மாவட்ட உத்தியோகத்தரை கேட்டுக்கொண்டார்.

பின்னர் NVQ தரத்தில் மகளிர் அபிவிருத்தி நிலையங்கள் இயங்குவது நலிவுற்ற பெண்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த மிகவும் அவசியமானது என அரசஅதிபர் தெரிவித்தபோது இங்கு பயிலும் மாணவர்கள் மிக நலிவடைந்த குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்படுவதனால் உரிய மூலப்பொருட்களை பெறுவதற்குரிய மேலதிக செலவினை மேற்கொள்ள முடியாதநிலையில் கற்கைநெறியினை தொடர்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் மாகாணசபை உறுப்பினர்களுடன் தொடர்புகொண்டு நிதியினைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துவருவதாகவும் மாவட்டஉத்தியோகத்தர் தெரிவித்தார். இம்முயற்சியினை பாராட்டிய அரசஅதிபர் யாழ்மாவட்டத்தில் 1000 குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தினை வழங்கும் திட்டத்திற்குரிய பயனாளிகள் பட்டியல் இன்னும் இருவாரங்களுக்குள் தயாரித்து முடிக்க இருப்பதனால் மேற்படி தொழிற்பயிற்சி பெற்ற வாழ்வாதாரத்துக்காக தையல்இயந்திரங்கள் தேவைப்படுகின்ற பொருத்தமான பயனாளிகளினை அடையாளம் கண்டு தரும்பட்சத்தில் அப்பட்டியலுடன் சேர்த்துக்கொள்ள முடியுமெனத் தெரிவித்தார். மேலும் பயனாளிகள் தெரிவுகளினை உதவி தேவைப்படுவோருக்கு கிடைக்கக் கூடிய வகையில் சரியாக தெரிவுசெய்யும்படி வலியுறுத்தினார்.

நல்லாட்சி அரசின் கொள்கைகளின் அடிப்படையில் வேலைகளினை மேற்கொள்ளும்போது ஏதாவது பிரச்சினைகள் இருப்பின் எவ்விதத் தயக்கமும் இன்றி தனக்கு தெரியப்படுத்தும்படியும் அதற்கான தீர்வினைத் தான் பெற்றுத்தருவதாகவும் நல்லாட்சி கொள்கைகளுக்கு முரணாக எவரும் செயற்பட அனுமதிக்க முடியாது எனவும் வலியுறுத்திக் கூறினார்.

தேசிய போசாக்கு செயற்திட்ட மாவட்டக்குழுக் கூட்டம்

தேசிய போசாக்கு செயற்திட்டத்தில் 12932 குடும்மபங்கள் யாழ் மாவட்டத்தில் அடையாளப்படுத்தபபட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (17.05.2016)யாழ் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற தேசிய போசாக்கு நிகழ்ச்சித்திட்ட மாவட்டக்குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் அடையாளப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு சமுர்த்தி மற்றும் ஏனைய வாழ்வாதார உதவித்திட்டங்களில் முன்னுரிமை வழங்குமாறும் வழங்கப்பட்ட உதவிகளில் அம்மக்கள் முன்னேற்றம் அடைகின்றனரா என்ற அவதானம் வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் இச்செயல்திட்டத்தின் மூலம் மாவட்ட மக்களின் போசாக்கு மட்டத்தினை உயர்த்துவதற்கு வினைத்திறனான செயற்திட்டமூடாக அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் பா. செந்தில்நந்தனன் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் கே. நந்தகுமரன்  பிரதேச செயலாளர்கள் சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் யாழ் மாவட்டச்செயலக உயர் அதிகாரிகள் இணைந்திருந்தனர்

 

யாழில் வனஜீவராசிகள் அமைச்சின் விசேட கலந்துரையாடல்

வனஜீவராசிகள் அமைச்சின் கீழே வட மாகாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள செயற்றிட்டங்கள் தொடர்பில் ஆராயும் பொருட்டு யாழ் மாவட்டச் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் 29.04.2016 அன்று நடைபெற்றது.

சூழலைப் பாதுகாத்து வரும் சந்ததிக்கு வழங்கும் நோக்கில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் வனஜீவராசிகள் அமைச்சர் கௌரவ காமினி ஜயவிக்ரமபெரேரா கலந்து கொண்டார்.

வடமாகாண சுற்றாடல் அபிவிருத்தி தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் தயாரிக்கப்பட்ட அபிவிருத்தி முன்மொழிவுகள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த கௌரவ அமைச்சர் காமினி ஜயவிக்ரமபெரேரா வடமாகாண சபையுடன் இணைந்து பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை தாம் மேற்கொள்ளவிருப்பதாகவும் அவை தொடர்பில் பரிசீலிக்கும் நடவடிக்கைகள் யாவும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முற்றுப்பெற்று வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ எம்.ஏ.சுமந்திரன், கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், யாழ் கௌரவ குருகுலராஜா, கௌரவ வடமாகாண அமைச்சர்கள், கௌரவ வடமாகாணசபை உறுப்பினர்கள், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் மற்றும் துறைசார் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.


சுவீடன் வௌிவிவகார அமைச்சர் யாழ் விஜயம்

வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஆராயும் பொருட்டு சுவீடன் நாட்டின் வௌிவிவகார அமைச்சர் அடங்கிய குழுவினர்  26.04.2016 அன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தனர்.

சுவீடன் நாட்டின் வௌிவிவகார அமைச்சர் கௌரவ மார்கொட் வால்ஸ்டொம் மற்றும் சுவீடன் நாட்டின் இலங்கை மற்றும் இந்தியாவிற்கான தூதுவர் காரல் சான்பெர்க் தலைமையிலான குழுவினர் யாழ் மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் அவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் மாவட்ட சிவில் சமூக பிரதிநிதிகளுடன் சந்திப்பை மேற்கொண்டனர்.

யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் மீள்குடியேற்ற செயற்பாடுகள் தொடர்பில் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. தொடர்ந்து வடமாகாண கௌரவ ஆளுனர் ரெஜினோல்ட்கூரே அவர்களை அவரது செயலகத்தில் சந்தித்த இக்குழுவினர் மத்திய அரசாங்கத்தினால் வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்.

மேலும் வடமாகாண பேரவைச் செயலகத்திற்கு விஜயம் செய்த இக்குழுவினர் வடமாகாண முதலமைச்சர் கௌரவ சி.வி.விக்கினேஸ்வரனை சந்தித்து ஆட்சிமாற்றம் ஏற்பட்டதன் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லெண்ண செயற்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர். இதேவேளை மீள்குடியேற்ற அமைச்சர் கௌரவ டி.எம். சுவாமிநாதன் அவர்களின் அழைப்பின் பேரில் மீள்குடியேற்ற அமைச்சினால் யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பொருத்து வீட்டுத்திட்டத்தினையும் குறித்த குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.


காங்கேசன்துறை சீமேந்துத் தொழிற்சாலையை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமேந்துத் தொழிற்சாலையை மீளவும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

25.04.2016 அன்று யாழ் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற காங்கேசன்துறை சீமேந்துத் தொழிற்சாலையை மீளவும் ஆரம்பிப்பதில் உள்ள விடயங்கள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேற்படி சீமேந்துத் தொழிற்சாலைக்குத் தேவையான சுண்ணாம்புக்கற்கள் யாழ்ப்பாணத்தின் எந்தவொரு பகுதியில் இருந்தும் எடுக்கப்படாதென்ற வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கமைவாக தொழிற்சாலையை மீளவும் ஆரம்பிப்பதற்கான தீர்மானம்  இன்றைய கூட்டத்தில் சகல தரப்பினரின் ஆதரவுடன் எடுக்கப்பட்டது.

மேலும் தொழிற்சாலைக்குத் தேவையான தொழிலாளர்கள் யாழ் மாவட்டத்திலிருந்து உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் அமைச்சரினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதேவேளை ஆனையிறவு உப்பளம் மற்றும் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையையும் விரைவில் ஆரம்பித்து அதிகளவான வேலைவாய்ப்புக்களை வடக்கில் உருவாக்க தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர். நா. வேதநாயகன் தலைமையில் இடம்பெற்ற  இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சரவணபவன், கௌரவ சித்தார்த்தன், கௌரவ சிறிதரன், கெளரவ அங்கஜன் இராமநாதன் மற்றும் மாகாண அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், விரிவுரையாளர்கள், சூழலியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சினால் மேற்கொள்ளப்படவுள்ள கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம்

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சினால் மேற்கொள்ளப்படவுள்ள கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் யாழ் மாவட்டத்திலும் இடம்பெறவுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கடந்த வருடம் பாராளுமன்றில் சமர்ப்பித்த பிரேரணை அடங்கிய பொருளாதாரக் கொள்கை பிரகடனத்திற்கமைவாக இத்திட்டத்திற்கென இவ்வருடம் அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிற்கும் ஒரு மில்லியன் ரூபா வீதம் தேசிய வரவு செலவுத் திட்டத்தினூடாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இவ்வேலைத்திட்டத்தை யாழ் மாவட்டத்திலும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்டச் செயலகம் எடுத்துள்ளது. அதற்கமைவாக ஒவ்வொரு பிரதேச செயலர் ஊடாக கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் சமூகப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழு உருவாக்கப்பட்டு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பிரதேச செயலாளர்களை மேற்படி அமைச்சினால் கோரப்பட்டுள்ளது.

இத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட்டு எதிர்வரும் ஐப்பசி மாதம் 31ம் திகதிக்குள் பணிகள் பூர்த்தி செய்யப்படுவது அந்தந்த பிரதேச செயலாளர்களினால் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் செயலாளரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

யாழ்மாவட்ட மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல்

யாழ்மாவட்ட மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று மாவட்ட செயலகத்தில் யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் திரு.என்.வேதநாயகன் அவர்களின் தலைமையில் அண்மையில்(05) இடம்பெற்றது.

அரசாங்க அதிபர் இங்கு உரையாற்றுகையில், மீள்குடியேற்ற அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ள விசேடநிதியின் மூலம் பல்வேறு செயற்றிட்டங்கள் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதனடிப்படையில் சுமார் எட்டு இலட்சம் பெறுமதியான மூவாயிரம் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளதுடன், மூவாயிரம் பயனாளிகளுக்கு தலா ஒரு இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிகளும் ஆயிரத்து இருநூறு பயனாளிகளுக்கு தலா 55000 ரூபா செலவில் மலசலகூடங்களும் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளது.

மேலும் 100 மில்லியன் செலவில் குடிநீர் கிணறுகள் அமைக்கப்படவுள்ளதுடன் நீர்வழங்கல் முறைகள் போன்றவற்றை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதுடன் மேலும் 100 மில்லியன் செலவில் வீதிகள் மற்றும் கட்டடங்களும் புனரமைக்கப்படவுள்ளது.

இவற்றிற்கான பயனாளிகளை தெரிவு செய்யம் நடவடிக்கை பிரதேசசெயலாளர்களினூடாக நடைபெறுவதாகவும் விரைவில் இச்செயற்றிட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

யாழ் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற தேசிய உணவுற்பத்தி நிகழ்ச்சித்திட்டம்

தேசிய உணவுற்பத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு அங்கமான வீட்டுத்தோட்ட செய்கை நடவடிக்கை 04.04.2016 அன்று மாவட்டச் செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் முகமாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் வீட்டுத்தோட்டப் பயிர்கள் யாழ் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களினால் மாவட்டச் செயலக வளாகத்தில் நாட்டி வைக்கப்பட்டது.

 

யாழ்ப்பாண விடுமுறை விடுதி திறப்புவிழா

பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சினால் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விடுமுறை விடுதி அண்மையில் (25) திறந்து வைக்கப்பட்டது.

யாழ் அல்லைப்பிட்டி குறிக்கட்டுவன் வீதியில் அமைக்கப்பட்டுள்ள 25 அறைகளுடன் சகல வசதிகளையும் உள்ளடக்கிய இக்கட்டடத்தை பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார உத்தியோக பூர்வமாக திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், சிறுவர் மற்றும் பெண்கள் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் திருமதி. விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டனர். யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் நிகழ்வில் இணைந்திருந்தனர்.

காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள்

காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் எதிர்வரும் 27,28,29ம் மற்றும் மார்ச் மாதம் 1ஆம் திகதகளில் யாழ் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது.

கடந்த வருடம் மார்கழி மாதம் இவ் அமர்வுகளின் இரண்டாம் கட்ட விசாரணைகள் இடம்பெற்றிருந்த நிலையில், யாழ் மாவட்டத்தில் இடம்பெறாத பிரதேச செயலகப் பிரிவுகளில் இவ் அமர்வுகள் இடம்பெறவுள்ளது

அந்தவகையில் எதிர்வரும் சனிக்கிழமை 27 ஆம் திகதி கோப்பாய்,பருத்தித்துறை,கரவெட்டி பிரதேசத்தைச் சேந்தவர்களுக்கு கோப்பாய் பிரதேச செயலகத்திலும், எதிர்வரும் 28 ஆம் திகதி ஞாயிற்றுகிழமை வேலணை, ஊர்காவற்துறை, காரைநகர், நெடுந்தீவு ஆகிய பிரதேசங்களை சேந்தவர்களுக்கு வேலணைப் பிரதேச செயலகத்திலும், எதிர்வரும் 29ஆம் திகதி மருதங்கேணி மற்றும் சாவகச்சேரி பிரதேச பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு சாவகச்சேரி பிரதேச செயலகத்திலும் மறுநாள் மார்ச் மாதம் 01ம் திகதி சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்குட்பட்டவர்களுக்கு சாவகச்சேரி பிரதேச செயலகத்திலும் இந்த அமர்வுகள் இடம்பெறவுள்ளது

27,28,29 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள விசாரணைகள் காலை 8.30 மணிதொடக்கம் 5.30 மணிவரையும், மார்ச் மாதம் 01ம் திகதி காலை 8.30 மணி தொடக்கம் மாலை 3 மணி வரை விசாரணைகள் மேற்கொள்ளப்படும்

அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் கருத்தறியும் செயற்பாட்டின் யாழ்மாவட்டத்திற்கான அமர்வு யாழ்மாவட்டச் செயலகத்தில் அண்மையில் (15,16) இடம்பெற்றது.

அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மீதான பொதுமக்கள் யோசனைகள் கேட்டறிய 20 உறுப்பினர்களை கொண்ட குழுவொன்று உத்தேச அரசியலமைப்புச் சீர்திருத்தங்களுக்கான முன்மொழிவுகளை மக்களிடமிருந்து பெற்றுக் கொள்வதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் நியமிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ரீதியாக இடம்பெற்றுவரும் இக்குழுவின் கருத்தறியும் அமர்வு (15,16) யாழ்ப்பாணத்தில் காலை 9.30மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.30 மணிவரை இடம்பெற்றது.

லால் விஜேநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில் எஸ். தவராசா, எஸ். விஜேசந்திரன், என். செல்வகுமாரன், குமுதுகுசும்குமார, ஹரினி அமரசூரிய, உபிள்அபேரத்ன, சுனில்ஜெயரட்ன உள்ளிட்ட 8 பேர்கொண்ட குழுவினர் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பில் மக்களிடமிருந்து வாய்மொழி மற்றும் எழுத்துமூலச் சமர்ப்பணங்களை பெற்றுக்கொண்டனர்.

இவ் அமர்வில் பலகட்சிகளின் உறுப்பினர்கள், சிவில் சமூகஅமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனபலர் கலந்து கொண்டு அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் தமது கருத்துக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல்

யாழ் பலாலி விமானநிலைய விஸ்தரிப்பு, காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகப் புனரமைப்புத் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ்மாவட்ட அரசாங்கஅதிபர் என்.வேதநாயகன் தலைமையில் யாழ்மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நேற்றுமாலை(18) இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் திருமதி.விஜயகலா மகேஸ்வரன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறிதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், அங்கஜன் இராமநாதன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், துறைசார் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

மேற்படி பலாலி விமான நிலையப் புனரமைப்பு மற்றும் துறைமுக அபிவிருத்தி தொடர்பில் கடந்த மாதம் 15ம் திகதி பிரதமர் ரணில்விக்ரமசிங்க தலைமையில் யாழ் பலாலி படைத்தளத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிற்கு அமைவாக மேற்படி விடயங்களில் மாவட்ட மட்டத்திலான தீர்மானத்தை எடுக்கும் நோக்கில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேசசெயலாளர்கள், மீள்குடியேற்ற குழுவின் தலைவர்கள் மற்றும் இடம்பெயர்ந்த வலிவடக்கு மற்றும் கிழக்குப் பகுதி மக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு தமது கருத்துக்களை இதில் முன்வைத்தனர்.

போக்குவரத்து விதிகளை மீறும் தனியார் பயணிகள் பேருந்து சாரதிகள் மீது எதிர்வரும் காலங்களில் கடுமையான நடவடிக்கை!

போக்குவரத்து விதிகளை மீறும் தனியார் பயணிகள் பேருந்துச் சாரதிகள் மீது  கடுமையான நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தனியார் போக்குவரத்து சங்க தலைவரும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய நா.வேதநாயகன் அவர்கள் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் பேருந்து சாரதிகளால் பாரிய விபத்துக்கள் ஏற்படுவதை அவதானிக்க முடிகிறது. எனவே, இனிவரும் காலங்களில் போக்குவரத்து விதிமுறைகளுக்கு அமைவாக வாகனங்களைச் செலுத்துமாறு சாரதிகளைக் கேட்டுக்கொள்வதுடன் அவ்வாறு விதிகளை மீறிச் செலுத்தும் சாரதிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்து அவர்களின் சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வதுடன் வாகன அனுமதிப்பத்திரமும் எதிர்வரும் காலங்களில் இரத்து செய்யப்படுமென தெரிவித்தார். எனவே யாழ் மாவட்டத்தில் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள் பேருந்துகளின் சாரதிகள் உரிய வீதி போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடித்து பயணிகளுக்கு இடையூறு விளைவிக்காத வண்ணம் தமது பயணங்களை மேற்கொள்ள வேணடும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தூதுவர்குழு யாழ் விஜயம்

வடக்கின் நிலைமைகளை பார்வையிடும் நோக்கில் இலங்கையில் தூதரகங்கள் கொண்டிராத நாடுகளின் தூதுவர்களும் தூதுவராலய உயர்ஸ்தானிகர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அடங்கிய 40 பேர்கொண்ட குழுவினர் 03.02.2016 அன்று யாழ் மாவட்டத்துக்கு வருகை தந்திருந்தனர்.

இலங்கையின் 68 ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்வதற்காக காலி மாவட்டத்துக்கு வருகை தந்திருந்த இவர்கள் வடமாகாணத்தின் தற்போதைய நிலவரம் குறித்து அறிந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் யாழ் மாவட்டத்துக்கு வருகை தந்திருந்தனர்.

இவர்கள் யாழ் மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன், வடமாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், வடமாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன் ஆகியோருடன் வடமாகாணத்தின் நிலவரம் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

யாழில் சுதந்திரதினம் அனுஷ்டிப்பு

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 68வது சுதந்திர தினத்தையொட்டி யாழ் மாவட்டத்திலும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றது.

மாவட்டத்தின் பிரதான சுதந்திரதின நிகழ்வு யாழ் மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் திரு.என். வேதநாயகன் தலைமையில் இடம் பெற்றது.

இதன்போது தேசியக்கொடியை அரசாங்க அதிபர் ஏற்றி வைக்க தேசிய கீதம் இசைக்கப்பட்டு சுதந்திரதினம் அனுஷ்டிக்கப்பட்டதுடன் தேசிய சுதந்நதிர தினத்தை முன்னிட்டு மரநடுகை நிகழ்வும் மாவட்டச் செயலக வளாகத்தில் இடம்பெற்றது.

மேலதிக அரசாங்க அதிபர் செந்தில் நந்தனன் மற்றும் அரசாங்க அலுவலர்கள் உள்ளிட்ட பலர்  இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

யாழ்மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று முன்தினம் (30) இடம்பெற்றது.

யாழ் மாவட்டச்செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கணைப்புக்குழுக் கூட்டத்தில் இணைத்தலைவர்களாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான  மாவை சேனாதிராஜா அங்கஜன் இராமனாதன் ஆகியோருடன் யாழ் மாவட்ட அரச அதிபரும் பங்குபற்றியிருந்தார்.

இதில் விசேடமாக 2015ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக மீளாய்வு செய்யப்பட்டதுடன் கல்வி, விவசாயம், சுகாதாரம், மீன்பிடி, மீள்குடியேற்றம், போக்குவரத்து, உள்ளூராட்சி மற்றும் நகர அபிவிருத்தி போன்ற துறைகளில் இவ்வருடம் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக இக்கூட்டத்தில் பதினோராயிரத்து இருநூற்று இருபது மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படவுள்ள ஆயிரத்து எழுநூற்றுப் பதின்நான்கு வேலைத்திட்டங்கள் முன்மொழியப்பட்டு விவாதிக்கப்பட்டது.

மேலும் தேசிய வேலைத்திட்டங்களான உணவு உற்பத்தி, போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சிறுநீரக வேலைத்திட்டங்களும் ஒருங்கிணைப்புக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்டது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், ஈஸ்வரபாதம் சரவணபவன் மற்றும் மாகாண அமைச்சர்கள், அரச துறைசார் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

யாழில் மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல்

அதிமேதகு ஜனாதிபதி சிறிசேன அவர்களின் பணிப்புரைக்கமைய வடக்கில் முப்படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் தொடர்பான தகவல்களை திரட்டுவதற்கான உயர்மட்டக் கலந்துரையாடலொன்று யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் (27.01.2016) இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தலைமையில் யாழ் மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் மற்றும் யாழ்ப்பாண முப்படைகளின் தலைமை அதிகாரிகள்,பிரதேச செயலர்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில் வடக்கில் முப்படையினர் வசமுள்ள காணிகளின் விபரங்கள் மற்றும் மீள்குடியேற்றப்பட வேண்டியவா்கள் தொடர்புடைய விபரங்களை சேகரிப்பது தொடர்பில் இங்கு சகல அதிகாரிகளுடனும் கலந்துரையாடப்பட்டது.

இன்றைய கலந்துரையாடலின் அடிப்படையில் முப்படையினர் வசமுள்ள விடுவிக்கப்பட வேண்டிய காணிகள் மற்றும் முகாம்களில் வாழும் மக்களின் காணிகள் போன்ற தகவல்கள் விரைவில் சேகரிக்கப்பட்டு ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் அதன் பின்னர் காணிகள் விடுவிப்பது மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும். என்று யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்

தேசிய வாரத்தினை முன்னிட்டு உடல்நல மேம்பாட்டு நிகழ்வுகள்

தேகாரோக்கிய மேம்பாட்டுத் தேசிய வாரத்தினை முன்னிட்டு இன்றைய தினம் (25) யாழ் மாவட்டச் செயலகத்தில் காலை 8.45 மணியளவில் உடல்நல மேம்பாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இந் நிகழ்வில் தேகாரோக்கியத்தினை மேம்படுத்தல் தொடர்பில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் அவர்களினால் உரையாற்றப்பட்டதனைத் தொடர்ந்து பழைய பூங்காவில் மாவட்டச்செயலக விளையாட்டு அலுவலர்களின் வழிகாட்டலில் மாவட்டச் செயலக அலுவலர்கள் பல்வேறு வகையான உடற் பயிற்சிகளை  மேற்கொண்டனர்.