கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்
வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (07.02.2025) காலை 09.30 மணிக்கு மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது .
இக் கலந்துரையாடல் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், கடந்த ஆண்டு நடைபெற்ற திருவிழா சிறப்பாக நடைபெற்றமைக்கு உயர்ந்த ஒத்துழைப்பினை வழங்கிய
கடற்படை மற்றும் துறைசார்ந்த திணைக்களங்களுக்கு தமது நன்றியினைத் தெரிவித்து, எதிர்வரும் மார்ச் மாதம் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவுக்கு இலங்கை கடற்படையினரின் ஒத்துழைப்பு பிரதானமானதெனவும் குறிப்பிட்டதுடன், இத் திருவிழாவுக்கு சிறப்புற நடைபெற அனைவரின் ஒத்துழைப்புக்களையும் வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
இக் கலந்துரையாடலில் இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கான தங்குமிட வசதிகள், கூடாரங்கள், உணவு வசதிகள், பாதுகாப்பு, சுகாதாரத் தேவைகள், மலசல கூட வசதிகள், குடிநீர் தேவைகள், பாதுகாப்பு, ஒலி, ஒளி வசதிகள், கடல் மற்றும் தரைப் போக்குவரத்து ஒழுங்குகள், தனியார் கடற்போக்குவரத்து படகுகளின் கட்டண நிர்ணயம் மற்றும் கழிவு முகாமைத்துவம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேற்படி கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
1.இலங்கையைச் சேர்ந்த 4000 யாத்திரிகர்களும் இந்தியாவைச் சேர்ந்த 4000 யாத்திரிகர்களுக்கு என 8000 யாத்திரிகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் மேலதிகமாக உத்தியோகத்தர்கள், ஏனையோர்கள் உட்பட
9000 பேர் கலந்து கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
2.குறிகட்டுவானிலிருந்து கச்சதீவிற்கு படகுச் சேவைக்கான ஒருவழிக்கட்டணமாக ரூபா 1300.00 அறவிடுவது எனவும், நெடுந்தீவிலிருந்து கச்சதீவிற்கான ஒரு வழிக்கட்டணமாக 1000.00 அறவிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும், இவ்வாறு படகு சேவையில் ஈடுபடுகின்ற படகின் உரிமையாளர்கள் பொதுமக்களின் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் அதற்குரிய சான்றிதழ்களை கடற்படையினரிடம் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
3.போக்குவரத்துக்காக இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் போக்குவரத்து துறையினரின் பேரூந்துக்களும் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் 14 ஆம் திகதி காலை 4.00 மணி முதல் 11.30 வரை யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்திலிருந்து பேரூந்துக்கள் புறப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
4.யாத்திரிகர்களுக்கு 14 ஆம் திகதி இரவு உணவும், 15 ஆம் திகதி காலை உணவும் வழங்குவதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர் ஆயர் வணக்கத்துக்குரிய அருட்தந்தை P.J. ஜெபரட்ணம், அருட்தந்தை பி. பத்திநாதர், இந்திய துணைத் தூதுவர் திரு இ. நாகராஜன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), வட மாகாணப் பிரதி கடற்படை கட்டளை தளபதி, பிரதிப் பொலிஸ்மா அதிபர், 512 வது பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி, திணைக்களத் தலைவர்கள், யாழ் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் (நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்றுறை), கடற்படை, இராணுவப்படை அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள், துறைசார் திணைக்களங்களின் தலைவர்கள், நெடுந்தீவு இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






