நாளை நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் தொடர்பாக, வட்டார உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான முன்னாயத்த கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (05.05.2025) இரண்டு கட்டங்களாக மு.ப 10.30 மணி மற்றும் மு. ப. 11.50 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த தெரிவத்தாட்சி அலுவலர் அவர்கள், நாளை 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் தொடர்பாக, வாக்கெண்ணல் செயற்பாடு வட்டார நிலையங்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், வட்டார உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களே வட்டாரத்தின் பிரதம வாக்கெண்ணும் அலுவலர்களாகவும், பெறுபேறுகளை வெளியிடும் அலுவலர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளதால், வட்டார உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான கடமைகளை சரியான அறிவுறுத்தல்களைப் பின்பற்றி மேற்கொள்ளுமாறும் தெரிவத்தாட்சி அலுவலர் கேட்டுக் கொண்டார். மேலும், இத் தேர்தலை நடாத்தும் பொறுப்பு சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலரை சார்ந்திருப்பதனால் சரியான முறையில் மேற்பார்வைகளை மேற்கொள்ளுமாறும், வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று சரியான முறையில் வாக்களிப்பு நிலையங்கள்தயார்படுத்தப்பட்டுள்ளதா என்பதனையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுடன், தேர்தலில் வாக்களிப்பு வீதங்களையும் குறிப்பிட்ட நேரங்களில் உடனுக்குடன் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இயங்கும் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு அறிக்கையிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் திரு. இ.சசீலன் அவர்களால் வட்டார உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான மேலதிக அறிவுறுத்தல்களை வழங்கப்பட்டதுடன், தேர்தல கடமைக்காக இணைக்கப்பட்ட சுகாதார அமைச்சின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் திரு. பொ. தயானந்தன் அவர்களும் கலந்துகொண்டார்.
இக் கலந்துரையாடலில் 243 வட்டார உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் கலந்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






