யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில், வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கெளரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (30.05.2025) காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் வரவேற்பு ரையாற்றுகையில், கூட்டத்திற்கு வருகை தந்த கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களையும், வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கெளரவ நாகலிங்கம் வேதநாயகன், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்றதுடன், மாவட்டச் செயலகத்தினால் - பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு 56 மில்லியன் ரூபா, மின்சார இணைப்பு செயற்றிட்டத்திற்கு 43 மில்லியன் ரூபா, கிராமிய வீதி அபிவிருத்திக்கு 1000 மில்லியன் ரூபா உள்ளடங்களாக 1113.78 மில்லியன் ரூபா வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுவருவதாகவும், திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக விரிவாக ஆராயாப்படவுள்ளதாகவும் தெரிவித்துடன், ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியினை இவ்வாண்டுக்குள் சரியான முறையில் பயன்படுத்த அனைவரின் ஒத்துழைப்பும் தேவை எனத் தெரிவித்தார். மேலும், அதிமேதகு சனாதிபதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற யாழ்ப்பாண ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அதிமேதகு சனாதிபதி அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான கடவுச் சீட்டு அலுவலகத்தினை ஆரம்பிப்பதற்கான வேலைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கியதற்கமைய விரைவில் ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க வேலைகள் நிறைவடைந்துள்ளதாகவும், உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி, வலையமைப்பு வசதி மற்றும் பொது மக்கள் காத்திருக்கும் கொட்டகை போன்ற வேலைத் திட்டங்களே உள்ளன எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கெளரவ நாகலிங்கம் வேதநாயகன் தமது தொடக்கவுரையில், அதிமேதகு சனாதிபதி அவர்கள் 09 மாகாண ஆளுநர்களுடான கலந்துரையாடலில் இவ்வாண்டு சென்ற ஆண்டைவிட மாகாணங்களுக்கு 03 மடங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, இவ்வாண்டு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டை சரியான முறையில் பயன்படுத்த ஒத்துழைப்பினை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழி்ல் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான கெளரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தலைமையுரையாற்றுகையில், அரசாங்கத்தினால் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு அதிகளவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், சனாதிபதி அவர்கள் இவ்வாண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டதிலும் பார்க்க கூடுதலான நிதி ஒதுக்கீட்டினை அடுத்த ஆண்டு ஒதுக்கீடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்து, திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் பல்வேறு சவால்கள் பிரச்சனைகளை பொறுப்புவாய்ந்த திணைக்கள ங்கள் வினைத்திறனாக கையாண்டு, அபிவிருத்தித் திட்டங்களைவிரைவாக நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு அனைவருக்கும் உள்ளதாகவும், அதற்காக அனைவரினதும் ஒத்துழைப்பினையும் வழங்குமாறும் கெளரவ அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் ஆராயப்பட்ட விடயங்கள் மற்றும் எடுத்த தீர்மானங்களுக்கு அமைய அதன் முன்னேற்ற நடவடிக்கைகளும் ஆராயப்பட்டது. மேலும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அனுமதியை பெறவேண்டிய திட்ட முன்மொழிவுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது. மேலும், மணல் அகழ்வு, தெல்லிப்பளை புற்றுநோய் வைத்திசாலை, தாளையடி குடிநீர் திட்டம், காங்கேசன்துறையில் அமைந்துள்ள சனாதிபதி மாளிகை உள்ளிட்ட விடயங்களும் ஆராயப்பட்டது.
இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ சிவஞானம் சிறீதரன், கெளரவ கருணாநாதன் இளங்குமரன், கௌரவ வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, கெளரவ வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா, கெளரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி எம். தனுஜா, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க. ஸ்ரீமோகனன், மாகாண அமைச்சின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதி பொலிஸ்மா அதிபர், முப்படைகளின் அதிகாரிகள் பிரதிநிதிகள், திணைக்களத்தலைவர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9  10 11