தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையில் (NAITA) பயிற்சி நெறியினைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான தேசிய தொழிற் தகைமை சான்றிதழ் வழங்கும் நிகழ்வு தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் ஆர். திருமுருகன் தலைமையில் இன்றைய தினம் (17.07.2025) பி. ப 03.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட கெளரவ ஆளுநர் தமதுரையில், தொழில் பயிற்சியானது மிகவும் முக்கியமானது எனவும், தனியார் துறையில் பல வேலைவாய்ப்புக்கள் அதிகமாகவுள்ளதாகவும், எதிர்காலத்தில் தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்படும் போது நல்ல தொழில் வாய்ப்பு உள்ளது எனவும், அப்போது இப் பயிற்சி நெறியினை பூர்த்தி செய்தவர்களுக்கு முன்னுரிமையடிப்படையில் தொழில் வாய்ப்பு ஏற்படும் எனவும் தெரிவித்தார். மேலும், பாடசாலைகளில் இடை விலகலில் ஆண்களே அதிகமாகவுள்ளதாகவும், ஆனால் இன்றைய நிகழ்வில் பெண்களின் எண்ணிக்கையே அதிகமாகவுள்ளதாகவும் தெரிவித்து, இப் பயிற்சி நெறியின் முக்கியத்துவத்தினை ஏனையவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் எனவும் கெளரவ ஆளுநர் தெரிவித்தார். மேலும், கிளிநொச்சியில் இயங்கும் தொழில்நுட்பக் கல்லூரிக்கு தென்பகுதியிலிருந்து கற்க மாணவர்கள் வருகின்றார்கள் எனவும், அவர்களுக்கு அப் பயிற்சி நெறியின் முக்கியத்துவம் விளங்குகிறது எனவும் குறிப்பிட்டதுடன், தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நெறியினை பூர்த்தி செய்தவர்கள் தமது சொந்த முயற்சியிலும் முன்னேற வேண்டும் எனவும் கெளரவ ஆளுநர் தெரிவித்து மாணவர்களுக்குதமது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அரசாங்க அதிபர் தமதுரையில், இந் நிகழ்வானது அரிய நிகழ்வு எனவும், மாணவர்களுக்கு அறிவு, திறன் மற்றும் மனப்பாங்கு முக்கியமானது எனவும், தற்போது அறிவு மற்றும் திறனைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும், மனப்பாங்கில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்து, எம் பகுதியில் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துவது குறைவாகவுள்ளதாகவும், வாடிக்கையாளர்களின் திருப்தி முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் இதனால் தொழிற்துறைகளில் முன்னேற்றங்களை அடையலாம் எனவும் தெரிவித்தார். மேலும், இக் பயிற்சி நெறியினை பூர்த்தி செய்தவர்கள் பெற்றோர்களில் தங்கியிருக்காமல் சுயமாக முன்னேற வேண்டும் எனவும், நிறுவனங்களில் பணியாற்றும் போது வாடிக்கையாளர்களின் திருப்தியினை பூர்த்தி செய்வதால் தாங்கள் சார்ந்த நிறுவனம் வினைத்திறனாக விளங்கும் எனவும் குறிப்பிட்டு மாணவர்களின் எதிர்காலம் ஒளிமயமாக சிறக்க தமது வாழ்த்துக்களை அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இன்றைய நிகழ்வில் பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த 191 மாணவர்களுக்கு கெளரவ ஆளுநர், அரசாங்க அதிபர் மற்றும் விருந்தினர்களால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் சமுர்த்திப் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், மாணவர்கள், விரிவுரையாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பெற்றோா்கள் பங்குபற்றினார்கள்.






