தேசிய மொழி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (NILET) நிகழ்நிலை மூலம் 150 மணித்தியால இரண்டாம் மொழி சிங்களப் பாடநெறியினை பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் இறுதிநாள் நிகழ்வு இன்றைய தினம் (05.10.2025) தாதிய பயிற்சி கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் அரச உத்தியோகத்தர்கள் சகோதர மொழியை கற்க வேண்டிய அவசியத்தையும் அதன் மூலமாக அவர்கள் பணியிடங்களில் சிறப்பான மொழியாற்றலை வெளிப்படுத்த முடியும் எனவும் இரண்டாம் மொழியினை பலர் நேரடியாக தமது கடமை நிலையங்களில் இருந்து கடமை விடுப்பில் சென்று கற்றுக் கொண்டிருக்கின்ற அதேவேளையில் இணைய வழி மூலமாகவும் சிறப்பாக பயிற்சி நெறியை முடித்து சான்றிதழ்கள் பெற்ற அரச அலுவர்களை பாராட்டியதோடு அவர்கள் மேலும் இத்துடன் நின்று விடாது தொடர்ந்து மொழி மீதான அறிவினை விருத்தி செய்து தமது மொழியறிவு சார்ந்த ஆளுமைகளை விருத்தி செய்துகொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
மேலும் இந் நிகழ்வில் கற்கைநெறியினை பூர்த்தி செய்த 43 அரச உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இந் நிகழ்வில் கொழும்பில் இருந்து வருகை தந்த தேசிய மொழி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அதிகாரிகள் ,வளவாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.






