ஆசிரியத்துவத்தின் செயற்பாடுகள் பிள்ளைகளின் முழுமையான நன்மை நோக்கியதாக ஆரோக்கியமான முறையில் அமையப்பெற்றால் பள்ளிப் பருவப் பிள்ளைகள் ஆசிரியர்களை தம் மனதிலே நிலையான இடத்தில் வைத்திருப்பார்கள் - அரசாங்க அதிபர் தெரிவிப்புசிறுவர் பாதுகாப்பு தொடர்பாக தேசிய கல்வியற் கல்லூரியின் ஆசிரிய மாணவர்களை விழிப்புணர்வூட்டும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் தேசிய கல்வியற் கல்லூரி பீடாதிபதி திரு. ஆர். லோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (30.10.2025) காலை 8.30 மணிக்கு கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இவ் விழிப்புணர்வின் தொடக்க நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாஙக அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போது தேசிய கல்வியியல் கல்லூரி மிகச் சிறப்பான வகையில் தொடர்ச்சியாக செயற்பட்டு பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை உருவாக்கி சமூகத்திற்கு வழங்கிக் கொண்டிருப்பதாகவும், அந்த வகையில் பீடாதிபதி மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர்களின் அர்ப்பணிப்பான காத்திரமான பங்களிப்பினாலேயே நல்ல தலைவர்களை சமூகத்துக்கு உருவாகிக் கொண்டிருப்பதாகவும், பாராட்டியதுடன், இவ் ஒருங்கிணைந்த செயற்பாட்டின் மூலமாக முன்னாள் ஸ்தாபகர் திருவாளர் கமலநாதன் ஆசிரியர் அவர்களை தான் கற்ற ஆசியராக நினைவு கூறுவதற்காக சந்தர்ப்பத்தை இந் நிகழ்வு அமைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஒரு பிள்ளையினுடைய சமூக மாயமாக்கல் செயற்பாடானது குறிப்பாக முன் பள்ளியிலேயே ஆரம்பிப்பதாகவும் குடும்ப சூழலில் இருந்து வெளிவந்து முதலில் ஆரம்பமாவது முன்பள்ளியிலும் ஆரம்பிப்பதாகவும் பின்னர் பாடசாலையில் மீளுருவாகி சமூகமாக்கல் செயற்பாடு தொடர்சியாக நடைபெற்று சமூகத்தில் ஆசியர்களாக உருவாகி காணப்படுவதாகவும் அத்தகைய சிறப்பான பணியினை ஆற்றுபவர்காளாக ஆசிரியர்கள் உள்ளனர் எனவும் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாண மாவட்டத்திலேயே பயிற்சி பெற்றிருந்தாலும் அனைத்து மாவட்டங்களிலும் கல்வி கற்பிக்க தயாராக இருக்க வேண்டும் எனவும் ஆசிரியத்துவத்தின் செயற்பாடு பிள்ளையின் நன்மை நோக்கியதாக அமைய வேண்டும் எனவும் அத்தகைய செயல்பாடுகளை ஆரோக்கியமான முறையில் மேற்கொள்வதன் ஊடாக பள்ளிப் பருவப் பிள்ளைகள் ஆசிரியர்களை தம் மனதிலே இருத்திக்கொள்ள வாய்ப்பு ஏற்படுவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்து, இவ் விழிப்புணர்வு பயிற்சியின் பயனை முழுமையாக பெற்று பயன் பெறுமாறும் கேட்டுக் கொண்டார். இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களால் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை அடிப்படையாகக் கொண்ட ஆக்க முறையான "சிக் ஷா "ஒழுக்க பயிற்சி கைந்நூல் " வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பாட சாலை மாணவர்களின் நலன்களை அடையாளம் காணுதலும் கையாளுதலும் தொடர்பாக அம்பன் வைத்தியசாலை வைத்தியர் எஸ்.சிவசுதன் மற்றும் சிறுவர் பாதுகாப்பு மற்றும் கட்டுக்காவல் சட்டங்களை தெளிவுத்துதல்" யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் திரு. ஐ. கனகராஜ் அவர்களும் கலந்து கொண்டு தெளிவூட்டல்களை வழங்கினார்கள். இந் நிகழ்வில் உப பீடாதிபதி திரு. த.தனபாலன், தேசிய கல்வியற் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர்கள், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட இணைப்பாளர், தேசிய கல்வியற் கல்லூரியின் ஆசிரிய மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.







