அஸ்வெசும முதல்கட்டத்தரவு மறுசான்றழித்தல் (Re- certification) செயல்முறை தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (11.11.2025) பி. ப 02.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், நலன்புரி நன்மைகள் "அஸ்வெசும" திட்டமானது மாவட்டத்தின் அனைத்து வித செயற்பாடுகளையும் உள்ளடக்கியதான செயற்றிட்டமாக மாறியுள்ளதாகவும் தெரிவித்ததுடன், தேசிய ரீதியாக யாழ்ப்பாண மாவட்டம் சிறப்பாக செயற்படுவதாகதெரிவிக்கப்படுவதாகவும், அதற்கு முன்னின்று செயற்பட்ட உதவி மாவட்டச் செயலாளர், மாவட்ட இணைப்பாளர், பிரதேச செயலாளர்கள் மற்றும் விடய உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு நன்றிகளைத் தெரிவித்தார். மேலும், சில பிரதேச செயலகங்களில் விடய உத்தியோகத்தர்கள் அஸ்வெசும திட்ட செயற்பாடுகளில் ஆர்வத்தடன் செயற்பட்டு வருகிறாா்கள் எனவும் அவர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்ததுடன், இச் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்தலில் பல சவால்களை எதிர்கொண்டதாகவும் பிரதேச செயலாளர்கள் பயனாளிகள் தரவுகளை பதிவேற்றலில் சில மாற்றங்களை மேற்கொள்ள தற்துணிவோடு செயற்பட வேண்டும் எனவும், அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு திட்டத்தின் முதல் கட்டத்திலான பதிவு செய்யப்பட்டவர்களின் தகவல்களை புதுப்பித்தல் தொடர்பாக அந்த நபர்கள் தங்களது தகவல்களில் மாற்றங்கள் ஏதேனும் உள்ளதா என்பதை அறிவிப்பதற்கென 2025 நவம்பர் 10ஆம் திகதி முதல் 2025 டிசம்பர் 10 ஆம்திகதி வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளலாம் எனவும், கட்டம் 1இல் தவறவிட்ட விடயங்களை சரியான பொறிமுறையை பின்பற்றி பதிவேற்றம் மேற்கொள்ளுமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார். இக்கலந்துரையாடலில் அரசாங்க அதிபர் தலைமையில் இத்திட்டத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் கேட்டறிந்து அதற்குரிய தீர்வுகள் தொடர்பில் ஆராயப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இக் கலந்துரையாடலில், அஸ்வெசும முதல்கட்டத்தரவு மறுசான்றழித்தல் விண்ணப்பங்களை கிராம அலுவலகர் பிரிவுகளில் வழங்கி அதனைப் பூரணப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் எனவும் தீர்மானிக்கப்பட்டதுடன்,
பிரதேச செயலகங்களில் அஸ்வெசும தரவுகளை விரைவாக பதிவேற்றல் நடவடிக்கைளை மேற்கொள்ள 15 பிரதேச செயலகங்களக்கும் மாவட்டச் செயலகத்தின்மடிக்கணனிகளை (Laptop) தற்காலிகமாகவழங்குமாறும் அரசாங்க அதிபரினால் அறிவுறுத்தல்கள் சம்பந்தப்பட்ட வர்களுக்கு வழங்கப்பட்டது. இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, அஸ்வெசும மாவட்ட இணைப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள்,மாவட்ட உத்தியோகத்தர்கள் பிரதேசங்களில் இத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் விடய உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5 6 8 9