வட மாகாண முதலீட்டாளர் மாநாட்டை தொடர்புடைய அரச திணைக்களங்களின் ஆதரவுடன் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்துவதற்கான வட மாகாண மாவட்ட ரீதியான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில், இலங்கை மனேஜ்மன்ட் க்ளப் (The Management Club of Sri Lanka) தலைவர் திரு. ஐ. யூ. ராஜபசஷ மற்றும் தேசிய தொழிற் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் (NEDA) தலைவர் திரு. லக்ஷ்மன் அபயசேகர ஆகியோரின் பங்குபற்றுதலுடன் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இன்றைய தினம் (17.11.2025)காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. இதன் போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், அடுத்த ஆண்டு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் ஜனவரி மாதம் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் இலங்கை முதலீட்டு சபை, ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, தேசிய ஏற்றுமதியாளர்கள் சபை, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் உள்ளிட்ட திணைக்களங்களின் ஆதரவுடன் இலங்கை மனேஜ்மன்ட் க்ளப் - (The Management Club of Sri Lanka) நடத்துவதற்கான முன்னாயத்த கலந்துரையாடாக இது அமைந்துள்ளதாகவும், இக் கலந்துரையாடலுக்கு வருகை தந்துள்ள இலங்கை மனேஜ்மன்ட் க்ளப் (The Management Club of Sri Lanka) தலைவர் திரு. ஐ. யூ. ராஜபசஷ மற்றும் தேசிய தொழிற் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் (NEDA) தலைவர் திரு. லக்ஷ்மன் அபயசேகர உள்ளிட்ட குழுவினரை வரவேற்பதாகவும் தெரிவித்தார். மேலும், வடக்கு மாகாண 05 மாவட்டங்களின் உள்ளடக்கி உள்நாட்டு சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்த்து, முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குவதற்கான சந்தர்ப்பமாக இது அமையவுள்ளதாகவும் தெரிவித்தார். இக் கலந்துரையாடலில் அச்சுவேலி கைத்தொழிற் பேட்டையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள், சுற்றுலாத்துறை, பனைவளத் துறை போன்றவை தொடர்பாகவுள்ள வாய்ப்புக்களை அரசாங்க அதிபர் வருகை தந்தவர்களுடன் விரிவாக ஆராய்தார். இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு பா. ஜெயகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, இலங்கை மனேஜ்மன்ட் க்ளபின் தலைவர் திரு. டிபால் அபயசேகரா, உதவித் தலைவர் திருமதி சாந்தி பகீரதன், மாவட்ட இணைப்பாளர் திரு. எஸ். அனுராகவன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு. எஸ். சிவகுமாரன் உள்ளிட்ட மாவட்டச் செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.







