40 ஆண்டுகால அரச சேவையிலிருந்து இன்றுடன் (27.01.2026) இளைப்பாறும் நிர்வாக உத்தியோகத்தர் திரு. ஆறுமுகம் சத்தியமூர்த்தி அவர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழா மற்றும் பிரியாவிடை நிகழ்வு யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் பி. ப. 02.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. திரு. ஆ. சத்தியமூர்த்தி அவர்கள், 1986 ஆம் ஆண்டு தொடக்கம் அரச சேவையில் இணைந்து, மாவட்டச் செயலகத்தில் பல்வேறு காலகட்டங்களில் கடமையாற்றியதுடன், இறுதியாக 02.04.2020 தொடக்கம் இன்றைய தினம் வரை நிர்வாக உத்தியோகத்தராக சிறப்பாக கடமையாற்றி தமது 40 வருட அரச சேவையிலிருந்து ஓய்வுபெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் வரவேற்புரையினை பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன் அவர்களால் ஆற்றப்பட்டது. இந் நிகழ்வில் வாழ்த்துரை வழங்கிய அரசாங்க அதிபர் அவர்கள், முன்கூட்டியே திகதி குறிப்பிடப்பட்டு செய்யப்படும் ஒரே ஒரு தினம் இந்த ஓய்வு தினமாகும் எனவும், மாவட்ட செயலக நிர்வாகம் என்பது பல்வேறு பொறுப்பு மிக்கதும் பல்வேறு இடர்பாடுகளைக் கொண்டதுமாகும் எனவும், இந்த பணியை ஆற்றுவது என்பது பாராட்டுதலுக்கு உரியது எனவும் அந்தவகையில் திரு சத்தியமூர்த்தி நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றி இன்றுடன் அரச சேவையில் ஓய்வுபெறுவது குறித்து வாழ்த்துவதாகத் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாண மாவட்டம் குறித்த அனைத்து விடயங்களையும் அறிந்தவர் என்ற ரீதியிலும் தாபன விதிக்கோவை குறித்த முழுமையான பூரணமான அறிவினை கொண்டவர் என்ற அடிப்படையிலும் மாவட்ட செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தராக இவர் தெரிவு செய்யப்பட்டார் எனவும் தெரிவித்தார்.மேலும், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கோவையோடு சேவையாற்றுவார்கள் என்று கருதாமல் ஒருவருடைய வாழ்க்கையும் அதில் அடங்கியுள்ளது என்ற அடிப்படையில் அவர்தம் கடமைகளை பொறுப்புடன் மேற்கொண்டதாகவும், அந்த வகையில் அவரின் பணி மென்மேலும் போற்றுதலுக்குரியதாகும் எனவும் தெரிவித்தார். மேலும் யாழ் மாவட்டத்தில் உத்தியோகத்தர்களின் வினைத்திறன் தடை தாண்டல் பரீட்சைக்கு இவர் பல்வேறு வழிகாட்டுதல்களையும் பயிற்சிகளையும் வழங்கியுள்ளதுடன் ஏனைய வவுனியா, மன்னார், முல்லைத்தீவு போன்ற வெளி மாவட்ட உத்தியோகத்தர்களும் இவரின் வழிகாட்டுதல் மற்றும் பயிற்சியினை பெற்று சித்தியடைந்தார்கள் என்பது பெருமைக்குரிய விடயம் எனவும், மாவட்ட செயலகத்தில் தாபன விதி கோவை தொடர்பில் ஏதேனும் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்றால் நிர்வாக உத்தியோகத்தரை அழைத்து அது தொடர்பாக கேட்கும் போது மிக துல்லியமான முடிவுகளை மேற்கொள்ள முடியும் எனவும், அதற்காக அவருக்கு நன்றிகளையும் தெரிவித்தார் மேலும், அதிமேதகு சனாதிபதியின் வருகையின் போதான கடமைகளிலும் மற்றும் அண்மையில் ஏற்பட்ட டித்வா புயல் போன்ற காலகட்டங்களில் தன்னாலான உடல், உள சேவைகளை ஆற்றியுள்ளமைக்கும் அவருக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், அலுவலக தடை தாண்டல் பரீட்சை பயிற்சி வகுப்புகளை தொடர்ந்து மேற்கொண்டு தனது சேவையினை மென்மேலும் ஆற்றவேண்டும் என்றும் அவருக்கு துணை நிற்கும் அவரின் பாரியார் அவர்களுக்கு தனது நன்றிகளையும் தெரிவித்து, தம்பதிகளுக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் மாவட்ட செயலக பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், பிரதி புள்ளிவிபர பணிப்பாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பிரதி பதிவாளர் நாயகம், உதவி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்களாலும், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களாலும் வாழ்த்துரைகள் நிகழ்த்தப்பட்டது. நிர்வாக உத்தியோகத்தர் திரு. ஆ. சத்தியமூர்த்தி அவர்களின் கடந்து வந்த வாழ்க்கைப் பாதை தொடர்பான ஒளிப்படம் காட்சிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசாங்க அதிபர் அவர்களினால் நிர்வாக உத்தியோகத்தர் திரு ஆ. சத்தியமூர்த்தி அவர்தம் பாரியார் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன், நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. மேலும் கிளைகள் ரீதியாக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்களாலும் கெளரவிக்கப்பட்டார்கள். இறுதியாக நிர்வாக உத்தியோகத்தர் தமது ஏற்புரையில், இன்று தமக்கு நடைபெற்ற சிறப்பான கெளரவிப்பினை தாம் நினைத்துப் பார்க்க வில்லை என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்து, அதற்காக ஏற்பாடு செய்த அரசாங்க அதிபர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களுக்கு தமது நன்றியினைத் தெரிவித்ததுடன், அரச சேவையில் திறமை மற்றும் நேர்மையிருந்தால் மதிப்பு மரியாதை தேடிவரும் எனவும் தெரிவித்தார். மேலும், அரசாங்க சேவையில் தான் முன்னேறி வந்த அனுபவப் பகிர்வை தெரிவித்து, தம்முடன் கடமையாற்றி ஒத்துழைப்பு நல்கிய அனைத்து உத்தியோகத்தர்களும் தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். இந் நிகழ்வில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 2021 22 23 24 25