இவ்வாண்டு யாழ்ப்பாண நகரத்தினை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை - அரசாங்க அதிபர் யாழ்ப்பாண நகர அபிவிருத்தித் திட்டம் தயாரிப்பதற்கான பங்குதாரர்களின் கருத்துக்களை கேட்டறிந்து கொள்வதற்கான பங்குதாரர் ஆலோசனைக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (2026.01.30) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், நகர அபிவிருத்தித் திட்டங்கள் தயாரிப்பதற்கான கலந்துரையாடல் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் கெளரவ பிமல் ரத்நாயக்க அவர்கள் தலைமையில் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் கடந்தாண்டு இறுதியில் நடாத்தப்பட்டது எனவும், அக் கலந்துரையாடலில் தாமும் கலந்து கொண்டதாகவும், இலங்கையில் 10 நகரங்களையும் அபிவிருத்தி செய்வதற்காக இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்தில் 2000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், வடக்கு மாகாணத்தில் இத் திட்டத்திற்காக யாழ்ப்பாணம்மற்றும் வவுனியா நகரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன எனவும், நகரங்கள் அபிவிருத்தி செய்வதற்கான நடைமுறைகள் தொடர்பில் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது என அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
இதன்போது யாழ்ப்பான மாவட்டம் சார்ந்த துறை சார்ந்த திணைக்கள அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள், சமூக மட்ட பிரதிநிதிகள் ஆகியோருக்கு இத் திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தி ஆலோசனைகளை பெறவேண்டிய தேவைப்பாட்டினை தாம் கூட்டத்தில் தெரிவித்திருந்தாகவும், அதனடிப்படையில் தொடர்புடைய பங்குதாரர்களின் கருத்துக்களை கேட்டறியும் நோக்கிலும், இச் செயற்றிட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை முன்னுரிமை வழங்கவேண்டிய திட்டங்களை அடையாளம் கண்டு திறம்பட பயன்படுத்துவது தொடர்பில் ஆராயும் நோக்கத்துடன் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யபட்டுள்ளது எனவும் தெரிவித்தார். மேலும், இங்கு நிறுவனம் சமூகம் சார்ந்து கருத்துக்கள் பரிமாறுவது அரோக்கியமாக அமையும் எனவும், குறித்த கலந்துரையாடலில் நகரத்தின் வடிக்காலமைப்பு குறித்து தெளிவுபடுத்தியிருந்ததாகவும் தெரிவித்ததுடன், நகர அமைப்பு, போக்குவரத்து நெரிசல், வாகன பாதுகாப்பு உள்ளடங்களாக நகர அமைப்பு சரிவர பேணப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும், நாமும் அதனை கண்கூடாகப் பார்க்கிறோம்எனவும், யாழ் நகரம் அழகுடையதாக அரோக்கியமானதாக அமைவதுடன், அதனை தனித்துவ அடையாளமாக மாற்றியமைக்கும் தேவைப்பாடு அனைவருக்கும் இருக்கிறது எனவும், எனவே அது குறித்து ஆலோசனைகளை தெரிவிக்கவேண்டும் எனவும், இங்கு பெறப்பட்ட கருத்துக்கள் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களை வடிவமைப்பதற்கு பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து யாழ்ப்பான நகர அபிவிருத்தித் திட்டம் தயாரிப்பதற்காக பங்குதாரர்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டன. இதன் போது கலந்து கொண்டிருந்தவர்கள் யாழ் நகர அபிவிருத்தி தொடர்பான திட்ட முன்மொழிவுகளுடன் தங்கள் கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை முன்வைத்தனர். இக் கலந்துரையாடலில் மாநகர சபையின் கெளரவ முதல்வர், நல்லூர் பிரதேச சபையின் கெளரவ தவிசாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் வட மாகாணப் பணிப்பாளர், யாழ் போதனா வைத்தியாசலை பணிப்பாளர், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தின் ஆணையாளர், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளர், யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர்கள், துறைசார்ந்த பல்வேறு திணைக்களங்களின் அதிகாரிகள், வர்த்தக சங்கத்தினர், பிரதிநிதிகள் என உள்ளிட்ட தரப்பினரும் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 8