வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவானது நேற்றைய தினம் (27.02.2026) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அடிகளால் திருவிழாக் கொடி ஏற்றிவைக்கப்பட்டு உற்சவ நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. கொடியேற்றத்தைத் தொடர்ந்து, சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி என்பன இடம்பெற்றிருந்ததுடன் யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெயரட்ணம் தலைமையில், பல பங்குத்தந்தையர்களின் பங்குபற்றலுடன் விசேட ஆராதனைகள் இடம்பெற்றன. தொடர்ந்து இன்றைய தினம் காலை திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெயரட்ணம் தலைமையில், இலங்கை மற்றும் இந்திய அருட்தந்தையர்கள் இணைந்து, திருப்பலி ஒப்புக்கொடுத்தனர்
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்றைய தினம் (28.02.2026)காலை திருப்பலி ஒப்புக்கொடுத்தலுடன் நிறைவடைந்தது. இலங்கை இந்திய பக்தர்களின் உறவுப் பாலமாகவுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் இந்த ஆண்டு 13500ற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவில் இலங்கை மற்றும் இந்திய அருட்தந்தையர்கள், பிரதம நீதியரசர் கொளரவ பிரிதீ பத்மன் சூரசேனன், கெளரவ கடற்றொழில் நீரியல் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், யாழ் இந்திய துணைத்தூதுவர் கெளரவ சாய் முரளி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்ச ன பனாகொட, வடமாகாண கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே, வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன், கடற்படை உயரதிகாரிகள், நெடுந்தீவு பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபை கெளரவ தவிசாளர், பல்வேறு திணைக்களங்களின் அதிகாரிகள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், கடற்படையினர், பிரதேச செயலக மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் இலங்கை மற்றும் இந்திய நாட்டு பக்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.






