சமூக சக்தி (பிரஜாசக்தி) வறுமையை ஒழிப்பதற்கான தேசிய வேலைத் திட்டம் - யாழ்ப்பாணமாவட்டத்திற்கான விழிப்புணர்வு நிகழ்வு கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் கெளரவ கலாநிதி உபாலி பன்னிலகே அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (11.03.2026) ஆந் திகதி பி.ப 1.30 மணி தொடக்கம் பி.ப 4.30 மணி வரை தந்தை செல்வநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ சண்முகநாதன் சிறிபவானந்தராஜா, கெளரவ கருணநாதன் இளங்குமரன், கௌரவ ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும் வட மாகாண சமூக சக்தி இணைப்பாளருமான திரு. எஸ். கபிலன் ஆகியோர் பங்குபற்றினார்கள். இந் நிகழ்வில் வரவேற்புரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க. சிவகரன் அவர்கள், வறுமையை ஒழித்து தேசத்தை கட்டி எழுப்பும் நோக்கில் முன்னெடுக்கப்படுகின்ற பிரஜா சக்தி தேசிய வேலைத் திட்டத்திற்கு வருகை தந்துள்ள அனைவரையும் வரவேற்றதுடன், வறுமையை குறைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கிலான இவ் வேலைத் திட்டத்தின் யாழ்ப்பாண மாவட்ட விழிப்புணர்வு நிகழ்விற்காக அண்ணளவாக 750 இற்கும் மேற்பட்டவர்கள் இங்கு கூடியிருக்கின்றோம் எனவும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 435 கிராமங்களை உள்ளடக்கிய வகையில் 8,700 உறுப்பினர்கள் இவ் வேலைத் திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார். மேலும், வறுமையினை நீக்குவதற்காக
நாம் அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும், இதனூடாக ஒவ்வொரு பிரதேசத்தின் வறுமையை நீக்கக்கூடியதாக இருக்கும் எனவும், இந்த பிரஜா சக்தி வேலைத் திட்டமானது யாழ் மாவட்டத்தில் உள்ள வறுமை நிலையினை குறைத்து யாழ் மாவட்ட அபிவிருத்தி வேலை திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந் நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் திரு. சம்பத் மந்திரிநாயக்க அவர்கள் சமூக சக்தி தேசிய வேலைத் திட்டத்தின் நோக்கங்களை தொடர்பில் விளக்கினார். தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும், வடமகாண சமூக சக்தியின் இணைப்பாளரும், யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினருமான கெளரவ எஸ்.கபிலன் அவர்கள் குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து "சமூக சக்தி” தேசிய செயற்பாட்டுக் குழுவின் தலைவரும், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சருமான கெளரவ கலாநிதி உபாலி பன்னிலகே அவர்கள் சமூக சக்தி தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் சிறப்புரையாற்றினார். நிகழ்வில் "சமூக சக்தி” தேசிய வேலைத் திட்டத்தினை முன்னெடுத்துச் செல்லும் சமூக அபிவிருத்தி சபையின உருவாக்கம், மற்றும் அவர்களின் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் "நமது கிராமத்தை நாமே கட்டியெழுப்புவோம்" விழிப்புணர்வு காணொளி காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்தின் சிரேஸ்ட உதவிச் செயலாளரும்
"சமூக சக்தி” வேலைத் திட்டத்தின் பணிப்பாளர் (கொள்கை உபயோகம்) சாரஞ்சலி மனோகரன் சமூக அபிவிருத்தி சபையின் வகிபாகங்கள் தொடர்பில், நிகழ்வில் கலந்து கொண்டிருந்த சமூக அபிவிருத்தி சபையின் தலைவர், செயலாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளித்தார். குறித்த வேலைத்திட்டம் வறுமையை ஒழித்து நாட்டு மக்களை அனைத்து வகையிலும் வளமான மனிதர்களாக மாற்றியமைக்கும் நோக்கில் “செழுமையான தேசம் பசுமையான வாழ்க்கை” எனும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் இவ் வேலைத் திட்டத்திற்காக யாழ் மாவட்டத்திற்கு 652 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு பா. ஜெயகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன், பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு. எஸ். சிவகுமாரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, அமைச்சின் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், சமூக அபிவிருத்தி சபை அங்கத்தவர்கள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.






