நடப்பாண்டுக்கான யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் வெற்றிக் கிண்ண சுற்றுப் போட்டிகள் இன்றைய தினம் (25.04.2026) சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன்றைய ஆரம்ப போட்டி நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும் நலன்புரிச் சங்கத்தின் போசகருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டு குறித்த போட்டித் தொடரினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இங்கு அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கையில், இவ்வாண்டு க்கான அரசாங்க அதிபர் வெற்றிக் கிண்ணமானது இன்றைய தினம் வேலனை பிரதேச செயலாளர் பிரிவின் வேலனை மத்திய கல்லூரி மைதானத்தில் ஆண்களுக்கான துடுப்பாட்ட போட்டியுடன் ஆரம்பமாகி தொடர்ந்து, ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் சென். அன்ரனீஸ் மைதானத்தில் பெண்களுக்கான துடுப்பாட்ட போட்டியுடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது எனவும், இப் போட்டி ஏற்படுகளில் சிறப்பான பங்காளிப்பினை ஆற்றிவருகின்ற பிரதேச செயலாளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார். மேலும், உண்மையில் உத்தியோகத்தர்களுக்கு இடையிலான பரஸ்பர நட்பினை வளர்த்தல், உடலியல் உளவியல் ரீதியான மாற்றத்தினை ஏற்படுத்துகின்ற வகையில் இப் போட்டித்தொடர் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று வருகின்றதை அவதானிக்க முடிகிறது எனவும், தொடர்ந்து ஏனைய போட்டித் தொடர்களும் பிரதேச செயலர் ரீதியாக இடம்பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன எனவும், உத்தியோகத்தர்கள் அனைவரும் ஆர்வத்துடன் இப்போட்டி தொடர்களில் பங்குபற்றிக் கொண்டிருக்கின்றனர் எனவும், அந்தவகையில் இப் போட்டித் தொடரில் கலந்து கொண்டிருக்கின்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் இதனை ஆரம்பித்து வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.
நடப்பாண்டுக்கான அரச அதிபர் வெற்றிக் கிண்ண தொடரானது ஆண் மற்றும் பெண்களுக்கான துடுப்பாட்ட போட்டியுடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. யாழ்ப்பான மாவட்ட செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறுகின்ற இவ் அரச அதிபர் வெற்றிக்கிண்ண சுற்றுப் போட்டியில் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலக அணிகள் கலந்து கொள்கின்றன. இப் போட்டித்தொடரின் ஊடாக உத்தியோகத்தர்களிடையே பரஸ்பர தொடர்புகளை உருவாக்குதல், அவர்களின் திறமைகளை இனங்காணல், உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தல் போன்ற பல்வேறு நோக்கங்கள் எதிர்பார்க்கப்படுகிறன. இம் முறை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒவ்வொரு போட்டித்தொடர்களும் பிரதேச செயலகங்களிற்கு உட்பட்ட வகையில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், நலன்புரி கழகத்தின் தலைவரும், புள்ளிவிபர பிரதிப் பணிப்பாளருமான திரு. ம. வித்தியானந்தநேசன் பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர் உள்ளிட்ட மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் பதவிநிலை உத்தியோகத்தர்கள், விளையாட்டு பிரிவு உத்தியோகத்தர்கள், ஏற்பாட்டு குழு உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள், போட்டியாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.






