யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும், அரசகரும மொழிகள் திணைக்களமும் இணைந்து, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாண தமிழ் சங்கம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் தமிழ்மொழித் தினமும் சுவாமி விபுலானந்தர் நினைவு தினமும் 2026 ஆம் ஆண்டுக்கான ஒரு தேசிய நிகழ்வாக, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில், இன்றைய தினம் (24.07.2026) வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றன. தமிழ்ப் பண்பாட்டு ஊர்வலத்தைத் தொடர்ந்து விருந்தினர்கள் வரவேற்பு, மங்கல விளக்கேற்றல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசைத்துறையினரின் தமிழ்த்தாய் வாழ்த்து, மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களின் தமிழ் மொழி வாழ்த்து, லாஸ்யமதி நடன மன்ற மாணவிகளின் வரவேற்பு நடனம் ஆகிய நிகழ்வுகளுடன் விழா ஆரம்பமானது.
பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவிருந்த கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தவிர்க்க முடியாத காரணத்தால் சமூகமளிக்க இயலாத நிலையில், அவரின் வாழ்த்துச் செய்தி ஒலிபரப்பப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத் தூதுவர் கௌரவ எஸ். சாய் முரளி, அரசகரும மொழிகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் திரு. திலக் நந்தன கெட்டியாராச்சி, கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் பேராசிரியர் பாரதி கெனடி உள்ளிட்டோர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டனர்.
தகைசார் தமிழ்ப் பேராசிரியர் அருணாசலம் சண்முகதாஸ் அவர்கள் வரவேற்புரையை நிகழ்த்தப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையுரையாற்றினார். தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர், அரசகரும மொழிகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மற்றும் சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் ஆகியோர் சிறப்புரைகளை வழங்கினர். அரசகரும மொழிகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட "தமிழ் மொழி வளர்ச்சியில் இலங்கையர் பங்களிப்பு" என்ற நூலை வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் வெளியிட்டு, அதன் முதல் பிரதியை இந்தியத் துணைத் தூதுவர் கௌரவ எஸ். சாய் முரளி அவர்கள் பெற்றுக்கொண்டார். மேலும் சிறப்புப் பிரதிகள் சிறப்பு அதிதிகளுக்கும் வழங்கப்பட்டன. நூல் வெளியீட்டு உரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மொழியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. சுவாமிநாதன் விமல் அவர்கள் நிகழ்த்தினார். சுவாமி விபுலானந்தர் நினைவஞ்சலியும் ஞாபகார்த்த உரையும் சிவபூமி அறக்கட்டளையின் நிறுவுனர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
நிகழ்வின் கலை அம்சங்களாக யாழ்ப்பாண தமிழ் சங்கத்தின் நாட்டார் இசைமாலை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நடனத்துறையின் நாட்டிய நாடகம் மற்றும் திருநெல்வேலி அனுராகம் கவின்கலை நிலையத்தின் “பல்லியம்” கலைநிகழ்ச்சி என்பன அரங்கேறின. இறுதியாக மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் அவர்கள் நன்றியுரை வழங்கினார். இந் நிகழ்வில் அரசகரும மொழித் திணைக்கள ஆணையாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், ஏராளமான கலைஞர்கள், கலை ரசிகர்கள், மாநகர கெளரவ பிரதி முதல்வர், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.






