முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான செயலமர்வு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் திரு L.C.ஆனந்த் தலைமையில் இன்றைய தினம் (28.07.2026) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இச் செயலமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், இங்கு ஒன்று கூடியிருக்கும் இந் நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனத் தெரிவித்தார். ஒரு குழந்தை தனது குடும்பச் சூழலில் இருந்து வெளியேறி முதன்முதலாக எதிர்கொள்ளும் சமூக நிறுவனம் முன்பள்ளியாகும். சமூகமயமாக்கல் எனும் செயன்முறையின் முதலாவது படியை அமைத்துக் கொடுப்பவர்கள் முன்பள்ளி ஆசிரியர்களே எனவும், ஒரு பிரஜையின் ஆளுமை உருவாக்கத்திலும் பண்பாட்டு வளர்ச்சியிலும் முன்பள்ளிக் கல்வியின் பங்கு மகத்தானது எனவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.
மேலும், சுற்றாடல் பாதுகாப்பு என்பது இன்றைய காலத்தின் மிக அவசியமான தேவையாகும். எமது மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அனைத்து சுற்றாடல் அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் பொதுமக்களின் மனோபாவ மாற்றமே முதன்மையாக வலியுறுத்தப்படுகிறது. அந்த மனோபாவ மாற்றத்திற்கான அடித்தளத்தை அமைப்பவர்கள் சிறுவர்களே என்றும் தெரிவித்தார். வளர்ந்த நாடுகளில், குறிப்பாக ஜப்பானில், சிறு வயது முதலே பிள்ளைகளுக்கு ஒழுக்கம், தூய்மை, பொறுப்புணர்வு போன்ற நல்ல பழக்கவழக்கங்கள் முறையாகக் கற்பிக்கப்படுகின்றன. அதேபோன்று எமது நாட்டிலும் சிறுவர் மட்டத்திலிருந்தே குப்பைகளை தரம் பிரித்து, மக்கும் குப்பை, மக்காத குப்பை, பொலித்தீன், பிளாஸ்டிக் என்பவற்றைத் தனித்தனியாக அகற்றும் பழக்கத்தை உருவாக்குவது அவசியம் என அரசாங்க அதிபர் வலியுறுத்தினார்.
மிகக் குறைந்த கொடுப்பனவிலும் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இப்புனிதமான பணியை அர்ப்பணிப்புடன் முன்னெடுத்து வரும் முன்பள்ளி ஆசிரியர்களின் சேவையை உயர்வாக மதிப்பதுடன், அவர்களுக்கான உரிய அங்கீகாரமும் ஊக்குவிப்பும் வழங்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கமைய, மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் ஊடாக முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விசேட பயிற்சிகளும் சுற்றாடல் கல்விக்கான வளங்களும் வழங்கப்படவுள்ளதாகவும், அவற்றைப் பெற்று பயனுள்ளதாகப் பயன்படுத்துமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார். இச் செயலமர்வில் யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த 110 முன்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

1 2 3 4 5 6 7