சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகமாக பதவியுயர்வு பெற்று கொழும்பு, பத்தரமுல்லையிலுள்ள பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் தலைமையகத்திற்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் திரு. பரஞ்சோதி பிரபாகர் அவர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழாவும் பிரியாவிடை நிகழ்வும், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. க. சிவகரன் அவர்களின் தலைமையில் இன்று (31.07.2026) பிற்பகல் 3.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
திரு. பரஞ்சோதி பிரபாகர் அவர்கள் 1992 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் எழுதுநராக அரச சேவையில் இணைந்தார். பின்னர் காணிப்பதிவாளராகவும், பிரதிப் பதிவாளர் நாயகமாகவும் பணியாற்றிய அவர், 2026 ஆகஸ்ட் 1ஆம் திகதி முதல் சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகமாக பதவியுயர்வு பெற்று கொழும்பு, பத்தரமுல்லையிலுள்ள பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் தலைமையகத்தில் கடமையாற்றவுள்ளார். இந் நிகழ்வில் வாழ்த்துரை வழங்கிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர், திரு. பரஞ்சோதி பிரபாகர் அவர்கள் மாவட்டச் செயலகத்தில் நீண்டகாலம் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியவர் என்றும், தனது பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றியதோடு, சக உத்தியோகத்தர்களுடன் எளிமையாகவும் அமைதியாகவும் பழகும் பண்புடையவராகத் திகழ்ந்தார் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், சவாலான நிர்வாக விடயங்களைக் கூட அமைதியாகவும் துணிச்சலுடனும் கையாளும் திறமை கொண்டவர் என்றும், குறிப்பாக தேர்தல் காலங்களில் ஆளணி, போக்குவரத்து மற்றும் முறைப்பாட்டு பிரிவுகளின் பொறுப்புகளை மிகவும் திறமையாக நிறைவேற்றியமை பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்தார். அவரது புதிய பதவியில் மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகளையும் தெரிவித்தார். இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், பிரதம பொறியியலாளர், பிரதம உள்ளக கணக்காய்வாளர், உதவி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் வாழ்த்துரைகளை வழங்கினர். அதனைத் தொடர்ந்து, மாவட்ட அரசாங்க அதிபரால் திரு. பரஞ்சோதி பிரபாகர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன், நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. இறுதியாக, திரு. பரஞ்சோதி பிரபாகர் அவர்கள் ஏற்புரையாற்றி, தன்னுடன் இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார். இந் நிகழ்வில் மாவட்டச் செயலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
1 2 3 4 5 6 7 8 9 10 12 13