பெரெண்டினா நிறுவனத்தின் அனுசரணையில் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வு, பெரெண்டினா நிறுவனத்தின் வடக்கு மாகாண வலய முகாமையாளர் திரு. ஆர். இராஜேஸ்வரன் தலைமையில் நேற்று (07.09.2026) மாலை 5.00 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் உரையாற்றுகையில், நீண்டகாலமாக யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு சமூக நலச் செயற்பாடுகளில் தனது பங்களிப்பை வழங்கிவரும் பெரெண்டினா நிறுவனம், பாடசாலை மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் உதவ முன்வந்துள்ளமை பாராட்டுக்குரிய விடயமாகும் எனத் தெரிவித்தார். அந்த வகையில், தெல்லிப்பழை மற்றும் உடுவில் பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் கல்வி கற்கும் மாணவர்களில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு, அவர்களின் கல்வித் தேவைகளை நிறைவேற்றும் வகையில் மாதாந்தம் 1,500 ரூபாய் வீதம் கல்வி ஊக்கத்தொகை வழங்குவதற்கு பெரெண்டினா நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன் அடிப்படையில், தெரிவுசெய்யப்பட்ட 13 மாணவர்களுக்கு மூன்று மாதங்களுக்கான கொடுப்பனவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிதியுதவி மாணவர்களின் கல்வித் தேவைகளுக்காகவே வழங்கப்படுகின்றது. எனவே, இதனை பாடசாலை உபகரணங்கள், கற்றல் தேவைகள் உள்ளிட்ட கல்வியுடன் தொடர்புடைய செலவுகளுக்காகப் பொறுப்புடனும் முறையாகவும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார். மேலும், தங்களுடைய பிள்ளைகளை கல்வியில் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்காக பெற்றோர் பல்வேறு சிரமங்களையும் தியாகங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் அர்ப்பணிப்பையும் எதிர்பார்ப்புகளையும் மாணவர்கள் உணர்ந்துகொண்டு, கல்வியில் அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும், பாடசாலைப் பருவம் என்பது வாழ்க்கையில் மீண்டும் கிடைக்காத முக்கியமான காலப்பகுதியாகும். இந்தக் காலத்தில் கிடைக்கும் கல்வி வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி, எதிர்கால இலக்குகளை நோக்கி மாணவர்கள் பயணிக்க வேண்டும். மாதாந்தம் வழங்கப்படும் 1,500 ரூபாய் ஒரு பெரிய தொகையாக இல்லாவிட்டாலும், மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு வழங்கப்படும் சிறியதொரு ஊக்கமாகும். அதனைச் சரியான முறையில் பயன்படுத்தி கல்வியில் சிறந்து விளங்குவதுடன், குடும்பத்தின் பொருளாதாரச் சுமையையும் ஓரளவு குறைக்கக்கூடியவர்களாக மாணவர்கள் வளர வேண்டும் என தெரிவித்தார்.
மாணவர்களின் எதிர்காலக் கனவுகளையும், அவர்களுக்காக பல்வேறு தியாகங்களைச் செய்து வரும் பெற்றோரின் கனவுகளையும் நனவாக்குவதற்கு கல்வியே முக்கியமான அடித்தளமாகும். எனவே, வழங்கப்படும் இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி, கல்வியில் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார். மாணவர்களின் கல்விப் பயணத்தில் பெரெண்டினா நிறுவனமும் மாவட்டச் செயலகமும் தொடர்ந்து துணைநிற்கும் எனத் தெரிவித்த அரசாங்க அதிபர், மாணவர்கள் கல்வியில் உயர்ந்த நிலைகளை அடைந்து, தமது குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என வாழ்த்துத் தெரிவித்தார். இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா. ஜெயகரன், பெரெண்டினா நிறுவனத்தின் வடமாகாண சுன்னாகம் கிளை முகாமையாளர் திரு. தரிசிக ரூபன், சாவகச்சேரி கிளை முகாமையாளர் திரு. ரு. ருசாந் மற்றும் உதவி முகாமையாளர் திரு. கெ. சசிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.






