வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் நிதி அனுசரணையுடன், தீவகம் வடக்கு ஊர்காவற்றுறைப் பிரதேச செயலகமும் கலாசாரப் பேரவையும் இணைந்து நடத்திய பிரதேச பண்பாட்டுப் பெருவிழா பிரதேச செயலாளரும் கலாசாரப் பேரவைத் தலைவருமான திருமதி. வனஜா செல்வரட்ணம் தலைமையில் இன்று (08.09.2026) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு ஊர்காவற்றுறைப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான உயர்திரு. மருதலிங்கம் பிரதீபன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப்பணிப்பாளர் திருமதி. தர்சினி நிதர்ஷன் சிறப்பு விருந்தினராகவும், யாழ்ப்பாண மாவட்ட செயலக சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் (பதில்) திருமதி. மாலினி கிருஷ்ணானந்தன் மற்றும் மூத்த கலைஞர் திரு. ஆறுமுகம் யோகராசா ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.
நிகழ்வுகள்:
நிகழ்வில் விருந்தினர்களை வரவேற்றல், மங்கல விளக்கேற்றல், இறை வணக்கம், தமிழ்மொழி வாழ்த்து, பிரதேச கீதம், ஆசியுரைகள் மற்றும் அரங்கத் திறப்புரை ஆகியன இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து திரு. ச. அசிஸ்குமார் – கவிஞர் (மெலிஞ்சிமுனை) அவர்களின் அரங்கத் திறப்புரையும், காந்திஜீ நாடகமன்றம் (தம்பாட்டி) வழங்கிய வரவேற்பு நடனமும் இடம்பெற்றன. தொடர்ந்து செல்வி. துவாரகா சுந்தரலிங்கம் (உதவிப் பிரதேச செயலாளர்) அவர்களின் வரவேற்புரை நடைபெற்றது. அருணோதயா இயல், இசை நாடக மன்றம் (அனலைதீவு) வழங்கிய கிராமிய நடனமும் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளரின் தலைமையுரையும், காவலூர் கலைக்கழகம் (ஊர்காவற்றுறை) வழங்கிய இசைக்கதம்பமும் இடம்பெற்றன. தொடர்ந்து கிறிஸ்து அரசர் கலை மன்றம் (மெலிஞ்சிமுனை) வழங்கிய நாட்டுக்கூத்தும் அரங்கேற்றப்பட்டது.
மேலும், கலைமன்றங்களுக்கிடையிலான பிரதேச மட்டப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசில்கள் வழங்கப்பட்டன. இதன்போது மகாமேரு கலைமன்றம் (புளியங்கூடல்) வழங்கிய குழு நடனம், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் வழங்கிய கவியரங்கம் மற்றும் காந்திஜீ நாடக மன்றம் (தம்பாட்டி) வழங்கிய அரிச்சந்திரா மயான காண்டம் ஆகியன இடம்பெற்றன. தொடர்ந்து ‘கலை விழுது’, ‘கலை முகிழ்’ எனும் கௌரவிப்புகளின் கீழ் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். இறுதியாக கலாசார உத்தியோகத்தர் செல்வி தக்சாயினி செல்வகுமார் அவர்களால் நன்றியுரை ஆற்றப்பட்டது.








