நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ சாரணர் சேவை - 2026 இல் பங்கேற்றவர்களுக்கான “சான்றிதழ் வழங்கும் விழா” இன்று (12/09/2026) முற்பகல் 10:00 மணிக்கு நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இலங்கை சாரணர் சங்கத்தின் யாழ் மாவட்ட சாரணர் கிளையின் ஏற்பாட்டில், மாவட்ட சாரணர் ஆணையாளர், அரசாங்க அதிபருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இந்த விழா இடம்பெற்றது. இவ்விழாவில் பிரதம விருந்தினராக யாழ். கல்வி வலய வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. மாலதி முகுந்தன் கலந்து சிறப்பித்தார். முன்னாள் உதவி மாவட்ட ஆணையாளரும் சர்வதேச இணைப்பாளருமான திரு. இ. ராஜ்குமார் கௌரவ விருந்தினராகப் பங்கேற்றார். இந்நிகழ்வில் தலைமையுரையாற்றிய மாவட்ட சாரணர் ஆணையாளர், அரசாங்க அதிபருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் யாழ்ப்பாண மாவட்ட சாரணர் கழகம் தனது 110ஆவது ஆண்டை அனுஷ்டித்து வரும் நிலையில், நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தில் தொடர்ச்சியாக 66 ஆவது ஆண்டாக சாரணர் சேவை வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இம்முறை எட்டு பாடசாலைகளில் இருந்து சுமார் 234 ஆண் மற்றும் பெண் சாரணர்கள் சேவையாற்றினர். குறிப்பாக நெடுந்தீவு பிரதேச சாரணர்களும் கலந்து தங்கியிருந்து சேவையாற்றியமை பாராட்டத்தக்கது. புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயத்தின் விமான சாரணர் படையினர் வரவேற்பு நடனம் வழங்கினர்; அப்பாடசாலையில் சுமார் 50 விமான சாரணர்கள் இணைந்திருப்பதும் சிறப்பம்சமாக குறிப்பிடப்பட்டது. அரசாங்க அதிபர் உரையாற்றுகையில், சாரணிய செயற்பாடுகளின் ஊடாக மாணவர்களிடம் தலைமைத்துவம், ஒழுக்கம், உடல் ஆரோக்கியம், சமூகப் பொறுப்பு மற்றும் சேவை மனப்பான்மை போன்ற பண்புகளை வளர்க்க முடியும் என்றார். 2027 ஆம் ஆண்டு இலங்கை சாரணர் சங்க ஜம்போரி கோமாகம பிரதேசத்தில் ஜனவரி 17 முதல் 23 வரை நடைபெறவுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து அதிகபட்சமாக300 சாரணர்கள் பங்கேற்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதில் நல்லூர் உற்சவ சாரணர் சேவையில் அதிக மணித்தியாலங்கள் கடமையாற்றிய முதல் 50 சாரணர்கள், ஜம்போரிக்கான தெரிவில் விசேட அடிப்படையில் உள்வாங்கப்படவுள்ளனர். சாரணர் சங்க செயற்பாடுகள் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்படுவதாகவும், நிதிக் கொடுப்பனவுகள் அனைத்தும் காசோலை மூலம் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். சாரணர் செயற்பாடுகளுக்குத் தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கி வரும் கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் மற்றும் சாரணர்களுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துள்ளார். இந் நிகழ்வில் அதிபர்கள் ,ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 9 10 12 13 14 1516 17 18 19 20 21