28 ஆண்டுகால அரச சேவையிலிருந்து இன்றுடன் (14.09.2026) இளைப்பாறும் கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் மாகாணப் பணிப்பாளர் திரு. சிவசோதி சிவகெங்காதரன் அவர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழா மற்றும் பிரியாவிடை நிகழ்வு இன்றைய தினம் பி. ப. 02.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் வட மாகாணப் பணிப்பாளராகக் கடமையாற்றி ஓய்வுபெறும் திரு. சிவசோதி சிவகெங்காதரன் அவர்கள், 1998 ஆம் ஆண்டு கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் சேவையில் இணைந்தார். அவர் 1998 முதல் 2005 ஆம் ஆண்டு வரை கைத்தொழில் விரிவாக்க உத்தியோகத்தராகவும், 2005 முதல் 2007 ஆம் ஆண்டு வரை பதில் உதவிப் பணிப்பாளராகவும் கடமையாற்றினார். தொடர்ந்து 2007 முதல் 2017 ஆம் ஆண்டு வரை உதவிப் பணிப்பாளராகவும், 2017 முதல் 2022 ஆம் ஆண்டு வரை பிரதிப் பணிப்பாளராகவும் பணியாற்றினார். 2022 ஆம் ஆண்டு முதல் 14.09.2026 வரை இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் மாகாணப் பணிப்பாளராக பொறுப்புடன் கடமையாற்றி, தனது 28 ஆண்டுகால அரசுப் பணியை நிறைவுசெய்து ஓய்வுபெறுகிறார். இந் நிகழ்வில் வரவேற்புரை கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தொழில் முயற்சி ஊக்குவிப்பு முகாமையாளர் திருமதி சிவதாரணி ரமேஷ்குமார் அவர்களால் ஆற்றப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிய அரசாங்க அதிபர் அவர்கள், திரு. சிவகங்காதரன் அவர்களின் நீண்டகால அர்ப்பணிப்புமிக்க அரச சேவையைப் பாராட்டினார். திரு. சிவகங்காதரன் அவர்கள் ஒரு திறமையான அரச உத்தியோகத்தர் என்பதற்கு அப்பால், எளிமை, பணிவு, நேர்மை, நட்புணர்வு மற்றும் மனிதநேயம் கொண்ட சிறந்த பண்பாளர் என அரசாங்க அதிபர் குறிப்பிட்டார். பதவி, வயது அல்லது அதிகார நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாது அனைவருடனும் அன்புடனும் மரியாதையுடனும் பழகும் சிறந்த பண்பு அவரிடம் காணப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், தன்னுடன் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு உரிய வழிகாட்டல்களை வழங்குவதிலும், மேலதிகாரிகளுடன் சிறந்த புரிந்துணர்வுடன் இணைந்து செயற்படுவதிலும் அவர் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் எனப் பாராட்டினார்.
கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் செயற்பாடுகள் தொடர்பில் ஆழமான அறிவையும் நீண்டகால அனுபவத்தையும் கொண்டிருந்த அவர், அச்சுவேலி கைத்தொழில் பேட்டை உள்ளிட்ட பல்வேறு கைத்தொழில் அபிவிருத்தி நடவடிக்கைகளிலும், மாவட்டத்தின் கைத்தொழில் முயற்சியாளர்களின் வளர்ச்சியிலும் அர்ப்பணிப்புடன் பங்களித்துள்ளார் எனக் குறிப்பிட்டார். ஓய்வுபெறும் நாள் நெருங்கியபோதும், இறுதி நாள் வரை அதே அர்ப்பணிப்புடனும் உற்சாகத்துடனும் பணியாற்றியமை அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் ஒரு சிறந்த உதாரணம் என அரசாங்க அதிபர் தெரிவித்தார். திரு. சிவகங்காதரன் அவர்கள் ஓய்வுக்குப் பின்னரும் தனது அனுபவத்தையும் அறிவையும் பயன்படுத்தி கைத்தொழில் மற்றும் சமூக அபிவிருத்திப் பணிகளில் தொடர்ந்து பங்களிக்க வேண்டும் என வாழ்த்திய அரசாங்க அதிபர், அவருக்கும் அவரது துணைவியார் மற்றும் பிள்ளைகளுக்கும் நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை மற்றும் சிறப்பான ஓய்வுக்காலம் அமைய இறைவனைப் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், பிரதி புள்ளிவிபர பணிப்பாளர், கணக்காளர், சமுர்த்தி கணக்காளர், உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்களாலும், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களாலும் வாழ்த்துரைகள் நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசாங்க அதிபர் அவர்களினால் திரு. சிவகெங்காதரன் அவர்தம் பாரியார் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன், நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. மேலும் கிளைகள் ரீதியாக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்களாலும் கெளரவிக்கப்பட்டார்கள். நிகழ்வில் ஏற்புரையாற்றிய திரு. சிவகங்காதரன், தமக்கு வழங்கப்பட்ட இந்த சிறப்பான கௌரவிப்பை தாம் எதிர்பார்க்கவில்லை என நெகிழ்ச்சியுடன் தெரிவித்ததுடன், நிகழ்வை ஏற்பாடு செய்த மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.தமது நீண்டகால அரச சேவைப் பயணத்தில் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அத்துடன், தம்முடன் இணைந்து பணியாற்றி ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கிய அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். இந் நிகழ்வில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.