அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான 2026 ஆண்டுக்கான வலைப்பந்தாட்ட போட்டி தொடர் இன்றைய தினம் (17.09.2026) காலை 8:30 மணிக்கு சாவகச்சேரி வளர்மதி விளையாட்டுக் கழக மைதானத்தில் ஆரம்பமானது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கை.சிவகரன் அவர்கள் கலந்து கொண்டு குறித்த போட்டித் தொடரை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். நிகழ்வில் பாண்ட் வாத்திய இசையுடன் அதிதிகள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றபட்டு தேசியக்கொடி, அரச உத்தியோகத்தர் சங்க கொடி, யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட சங்க கொடி ஆகியன ஏற்றி வைக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து சத்தியப் பிரமாணம் எடுக்கும் நிகழ்வுடன் குறித்த போட்டி தொடர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அரச உத்தியோகத்தர்களிடையே நல்லிணக்கம், குழு உணர்வு, உடல் ஆரோக்கியம் மற்றும் விளையாட்டு ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கில் இப்போட்டித் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் சாவகச்சேரி பிரதேச செயலாளர் திரு. F. C. சத்தியசோதி, யூகே பாடசாலைகள் சங்க உறுப்பினர் திருமதி மளிக் அமரசேகர, அரச உத்தியோகத்தர் வலைப்பந்தாட்ட சங்கத் தலைவர் திரு. றிக்ஷ் நாணயக்கார, யாழ் வலைப்பந்தாட்ட சங்கத் தலைவர், வளர்மதி விளையாட்டுக் கழக தலைவர், வலைப்பந்தாட்ட பயிற்றுனர்கள், விளையாட்டு பிரிவு உத்தியோகத்தர்கள், நடுவர்கள், வளர்மதி விளையாட்டுக் கழக அங்கத்தவர்கள், மற்றும் வீரர்கள் பார்வையாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.






