“அத்தம” நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்த வகையில் - சர்வதேச கரையோரத் தூய்மைப்படுத்தல் தினத்தை முன்னிட்டு (19 செப்டம்பர்) , யாழ்ப்பாணம் பண்ணைக் கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் மாவட்ட நிகழ்வு இன்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் தலைமை உரையாற்றிய யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவில் உருவாக்கப்பட்ட “அத்தம” வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாகவும், சர்வதேச கடற்கரைத் தூய்மைப்படுத்தல் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் கடற்கரைத் தூய்மைப்படுத்தும் நடவடிக்கை அமைந்துள்ளதாக தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் 36 கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கிய 28 கிலோமீற்றர் நீளமான கடற்கரைப் பகுதி இத்திட்டத்தின் கீழ் தூய்மைப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். தூய்மையான கடற்கரை, ஆரோக்கியமான கடல் வாழ்வுகள், நிலையான எதிர்காலம்" எனும் கருப்பொருளின் கீழ், யாழ்ப்பாண மாவட்டச் செயலகம், கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் (MEPA) கொகமர்சியல் வங்கி, முப்படையினர் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ஒருங்கிணைப்பில் இந் நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார். கடற்கரைகளை தூய்மைப்படுத்துவது மட்டுமன்றி, மக்கள் மத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கழிவு முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக அமைய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
பொதுமக்கள் கடற்கரைகளில் கழிவுகளை வீசுவதும், பின்னர் அவற்றை தொடர்ச்சியாக தூய்மைப்படுத்துவதுமான நிலை நீடிக்கக் கூடாது. கழிவுகளை முறையாக அகற்றுவது தொடர்பில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படாவிட்டால், தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சிகள் வெறும் தொடர்ச்சியான நிகழ்வுகளாகவே மாறிவிடும்” என அரசாங்க அதிபர் தெரிவித்தார். “இன்று எமது கண்ணுக்கெட்டிய தூரம் வரை பிளாஸ்டிக், பொலித்தீன் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் காணப்படுகின்றன. இந்நிலையை மாற்றுவதற்கு தேசிய ரீதியில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் மாணவர்களுக்கு கழிவு முகாமைத்துவத்தின் விழிப்புணர்வு அவசியம்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்நிகழ்வில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ தர்சினி, கொமர்ஷல் வங்கியின் வட பிராந்திய முகாமையாளர் திரு. R. கஜதீபன் மற்றும் கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் (MEPA) மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் கடல் சுற்றுச் சூழலாளருமான திரு. M. கேசவன் ஆகியோர் கலந்துகொண்டு கொண்டனர். இப்பாரிய தூய்மைப்படுத்தல் பணியில் இலங்கை கடற்றொழில் பல்கலைக்கழகம் (Ocean University of Sri Lanka), கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA), மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA), கொமர்ஷல் வங்கியின் ஊழியர்கள், இராணுவம் மற்றும் கடற்படைப் பிரிவினர், சிவில் சமூக அமைப்புகள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பல தரப்பினரும் ஆர்வத்துடன் இணைந்து பண்ணைக் கடற்கரைப் பகுதிகளைத் தூய்மைப்படுத்தினர்.
இதேவேளை, அத்தம நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நாவாந்துறை தெற்கு கரையோரப் பகுதி சுத்தப்படுத்தல்! சனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக முன்னெடுக்கப்படும் “அத்தம” நிகழ்ச்சித் திட்டத்தின் செப்டம்பர் மாதத்திற்கான மாவட்ட நிகழ்வு இன்று (19.09.2026) நாவாந்துறை தெற்கு J/84 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட இறங்குதுறை ஆண்டிய கரையோரப் பகுதியில் நடைபெற்றது. இதன்போது கரையோரப் பகுதி தூய்மைப்படுத்தப்பட்டதுடன், அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கடற்றொழில் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர். கரையோரச் சூழலைப் பாதுகாத்து தூய்மையாகப் பேணுவதற்கும், பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இந் நிகழ்வு முக்கியத்துவம் பெற்றதாக அமைந்தது.
 
 
1 3 4 5 6 7 8 9 11 13 14 15 16 18 19 20 22 23 24 25 25 27 28 29 30 31 32 33 34