வடமாகாண சுகாதார சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 336 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துக் களஞ்சியம், பணியாளர் குடியிருப்பு வளாகம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (19.09.2026) சனிக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது. சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கௌரவ மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, அபிவிருத்தித் திட்டங்களுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்து அவற்றை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இதன்போது கெளரவ அமைச்சர் மரக்கன்றொன்றையும் நாட்டி வைத்தார். மேலும், 282.52 மில்லியன் ரூபா செலவில் மருந்துக் களஞ்சியம் மற்றும் பணியாளர் குடியிருப்பு வளாகம் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதன் நிர்மாணப் பணிகள் 2027ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதேவேளை, 53 மில்லியன் ரூபா செலவில் வைத்தியசாலையின் மின்தூக்கி மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அதன் பணிகள் 2027ஆம் ஆண்டு மே மாதத்தில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வைத்தியசாலையின் விடுதிகளுக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட அமைச்சர், வைத்தியசாலையின் தற்போதைய செயற்பாடுகள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் எதிர்காலத் தேவைகள் தொடர்பில் அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார். தொடர்ந்து மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலும் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இதன்போது வைத்தியசாலையின் சேவைகளை மேலும் வலுப்படுத்துவதற்கான தேவைகள், மனித மற்றும் பௌதீக வளத் தேவைகள், தொழில்சார் சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இதன்போது, 2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் மேற்கொள்ளப்படாத சுகாதார சேவையின் உத்தியோகபூர்வ ஆளணி மீளாய்வு (Cadre Revision) பணிகளை இந்த ஆண்டிற்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக கெளரவ அமைச்சர் தெரிவித்தார். மேலும், வடமாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 350 சுகாதாரப் பணி உதவியாளர்களில் 10 பேரை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நிலவும் நோயாளர் நெரிசலுக்கு தற்காலிகத் தீர்வாக, அதன் தாதியர் மற்றும் மகப்பேற்றுப் பிரிவு சேவைகளில் ஒரு பகுதியை கிளிநொச்சி மற்றும் சாவகச்சேரி வைத்தியசாலைகளில் தற்காலிகமாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி கௌரவ எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன், ஆளுநர் செயலாளர் திரு. சத்தியசீலன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ப. ஜெயராணி, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி வி.பி.எஸ்.டி. பத்திரண, சாவகச்சேரி பிரதேச செயலாளர், யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர், துறைசார் அரச அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள், மருத்துவர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், சுகாதார சேவை உதவியாளர்கள், நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.







