கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை2025 இல் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற வடக்கு மாகாண மாணவர்களுக்கான சனாதிபதி நிதியத்தின் உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்று (26.09.2026) சனிக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ (டாக்டர்) ஜகத் விக்கிரமரத்ன கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், வட மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் கூட்டுறவு பிரதியமைச்சர் கௌரவ உபாலி சமரசிங்க, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (டாக்டர்) செல்லத்தம்பி திலகநாதன் கெளரவ கௌரவ மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். 2025ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு பாடத்துறையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று முதல் 20 இடங்களுக்குள் வந்த மாணவர்களுக்கு இவ்வுதவித்தொகை வழங்கப்பட்டது. ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ.100,000 வீதம் உதவித்தொகையும் சான்றிதழும் வழங்கப்பட்டன.
சனாதிபதி நிதியத்தின் இத்திட்டத்தின் கீழ், இவ்வாண்டு ஒவ்வொரு பாடத்துறையிலும் மாவட்ட ரீதியாக அங்கீகரிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 10 இலிருந்து 20 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த 115 மாணவர்கள், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 91 மாணவர்கள், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 102 மாணவர்கள், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 86 மாணவர்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 83 மாணவர்கள் என மொத்தம் 477 மாணவர்களுக்கு ரூ.100,000 வீதம் மொத்தமாக ரூ.47.70 மில்லியன் பெறுமதியான உதவித்தொகை வழங்கப்பட்டது. விருந்தினர்கள் கலாசார முறைப்படி வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, மங்கல விளக்கேற்றப்பட்டு நிகழ்வுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. சனாதிபதி நிதியத்தின் செயலாளர் திரு. ரொஷான் கமகே அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. விமல் சாமிநாதன் சிறப்புரையாற்றினார். மேலும், மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் வட மாகாண பிரதம செயலாளர், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டச் செயலாளர்கள், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வட மாகாண கல்விப் பணிப்பாளர், வவுனியா மாவட்ட மேலதிக மாவட்டச் செயலாளர், கிளிநொச்சி மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட அரச அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12