சிறுவர் பாதுகாப்பு என்பது அனைவரினதும் பொறுப்பு – சமூக மட்ட அமைப்புகள் இணைந்து செயற்பட வேண்டும் – அரசாங்க அதிபர் யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறுவர் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (29.09.2026) முற்பகல் 9.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 70 சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் இவ் விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அரசாங்க அதிபர் அவர்களின் தலைமையுரை :
இன்றைய சமூகத்தில் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளன. சிறுவர் துஷ்பிரயோகம், குடும்ப வன்முறை, போதைப்பொருள் பாவனை, பாடசாலை இடைவிலகல் மற்றும் சிறுவர்களிடையேயான வன்முறை போன்ற பல்வேறு பிரச்சினைகள் தற்போது காணப்படுகின்றன. சிறுவர்கள் ஒரு சமூகத்தின் எதிர்காலமாக இருப்பதால், அவர்களைப் பாதுகாப்பது ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும். சிறுவருக்கான முதலாவது பாதுகாப்பான சூழல் குடும்பத்திலேயே உருவாக வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, சில சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் குடும்பச் சூழலுக்குள்ளேயே இடம்பெறுகின்றன. எனவே, ஆரோக்கியமான குடும்பச் சூழலை உருவாக்குவதில் பெற்றோர்களும் குடும்ப உறுப்பினர்களும் முக்கியப் பொறுப்பை ஏற்க வேண்டும் எனத் தெரிவித்தார். அதேபோன்று, சமூக மட்டத்திலும் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது. கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளாகிய நீங்கள், சிறுவர்களையும் அவர்களது குடும்பங்களையும் நெருக்கமாக அறிந்தவர்களாக இருக்கின்றீர்கள். ஒரு சிறுவர் தவறான பாதையில் செல்கின்றாரா, பாடசாலைக்கு முறையாகச் செல்கின்றாரா, போதைப்பொருள் பாவனை அல்லது துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றாரா என்பதை ஆரம்பத்திலேயே அடையாளம் காண முடியும். சிறுவருக்கு எதிராக ஏதேனும் அநீதி, துஷ்பிரயோகம் அல்லது அசம்பாவிதம் இடம்பெறுவது தெரியவரும் போது, அதனை உரிய அதிகாரிகளுக்கு அறிவிப்பதும் உங்கள் முக்கியப் பொறுப்பாகும். நீங்கள் நேரடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை. ஆனால் பிரச்சினையை அடையாளம் கண்டு, உரிய இடத்திற்கு கொண்டு செல்வது அவசியம்.
சில சந்தர்ப்பங்களில் குடும்பக் கௌரவம், சமூக அந்தஸ்து அல்லது அச்சம் காரணமாக சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் குடும்ப வன்முறை சம்பவங்கள் வெளியில் தெரிவிக்கப்படாமல் இருக்கின்றன. எனவே, பதிவாகியுள்ள சம்பவங்களின் எண்ணிக்கை மட்டுமே சமூகத்தில் இடம்பெறும் உண்மையான நிலைமையை முழுமையாக பிரதிபலிக்காது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதேவேளை, முறைப்பாடுகளை வழங்குபவர்களின் நம்பிக்கையையும் இரகசியத்தன்மையையும் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. பாதிக்கப்பட்ட சிறுவர்களை மீண்டும் மனரீதியாக பாதிக்காத வகையில் அதிகாரிகளும் சமூக அமைப்புகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். இங்கு கலந்துகொண்டுள்ள சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்களது பகுதிகளில் மக்களின் நம்பிக்கையைப் பெற்றவர்களாக உள்ளீர்கள். அந்த நம்பிக்கையை சமூக நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும். சமூகப் பணியில் ஈடுபடும் போது சில சவால்களையும் விமர்சனங்களையும் எதிர்கொள்ள நேரிடலாம். ஆனால் சமூக மட்ட பிரதிநிதிகள் செயற்படுவது தனிப்பட்ட நலனுக்காக அல்ல உங்கள் கிராமம், குடும்பங்கள் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சிறுவர்களிடையே பாடசாலை இடைவிலகல், போதைப்பொருள் பாவனை, துஷ்பிரயோகம் மற்றும் வன்முறை போன்ற பிரச்சினைகள் உருவாகும் போது, அவற்றை ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டு ஆற்றுப்படுத்துவது மிகவும் அவசியம். ஒரு சிறுவரை சரியான பாதைக்கு கொண்டு வருவது அந்த சிறுவரின் எதிர்காலத்தையும், அவரது குடும்பத்தின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதாகும்.
எனவே, மாவட்ட மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நன்னடத்தை உத்தியோகத்தர்கள், பொலிஸ் மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களுடன் சமூக மட்ட அமைப்புகள் நெருக்கமாக இணைந்து செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், சிறுவர் பாதுகாப்பு என்பது ஒரு தனி நிறுவனத்தின் பொறுப்பு அல்ல; குடும்பம், சமூகம், பாடசாலை மற்றும் அரச நிறுவனங்கள் அனைத்தும் இணைந்து ஏற்க வேண்டிய பொறுப்பாகும். சிறுவர்களைப் பாதுகாப்பது அவர்களின் இன்றைய வாழ்க்கையை மட்டுமல்ல, எமது சமூகத்தின் எதிர்காலத்தையே பாதுகாப்பதாகும். எனவே, அனைவரும் ஒன்றிணைந்து சிறுவர்களுக்கு பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க முன்வர வேண்டும் என அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.
வளவாளர்கள்:
கிராம மட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகத்தை அடையாளம் காணுதல் மற்றும் உரிய தரப்பினரிடம் பாரப்படுத்துதல் தொடர்பில் மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி மு. வாசுதேவா அவர்களும், சிறுவர் சட்டங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திரு. வ. கனகராஜ் அவர்களும் வளவாளர்களாகக் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினர். இவ் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்சினி, மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு. இ. செந்தூரன், சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
 1 2 3 4