இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபை மற்றும் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஏற்பாட்டில் சமூகப் பாதுகாப்புக்கான தேசிய விருது விழா இன்றைய தினம் (30.09.2026) காலை 10.30 மணிக்கு வவுனியாவில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபையின் இயக்குநர் சபை உறுப்பினர் திரு. திசன் கோனகல தலைமை தாங்கினார். நிகழ்வின் பிரதம விருந்தினராக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் கலந்துகொண்டார். வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் சிறப்பு அதிதியாகவும், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சர் கௌரவ உபாலி சமரசிங்க கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டனர். மேலும், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் திரு. மருதலிங்கம் பிரதீபன், வவுனியா மாவட்டச் செயலாளர் திரு. பி.ஏ. சரத்சந்திர, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திரு. ஏ. உமாமகேஸ்வரன், மன்னார் மாவட்டச் செயலாளர் திரு. கே. கனகேஸ்வரன், சமூக பாதுகாப்பு உத்தியோகத்தர் (சந்தைப்படுத்தல்) திரு. டி. எஸ். லக்மல் ஆகியோரும் பங்குபற்றினார்கள் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் வரவேற்புரைகள் மற்றும் சிறப்புரைகள் இடம்பெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் உரை :
தேசிய ரீதியில் 12 ஆவது தடவையாகவும் யாழ்ப்பாண மாவட்டம் முதலிடம் - உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்புக்கு கிடைத்த அங்கீகாரம் – அரசாங்க அதிபர் யாழ்ப்பாண மாவட்டம் சமூக பாதுகாப்புச் சபையின் தேசிய விருது வழங்கும் நிகழ்வில் தொடர்ந்து 12ஆவது தடவையாகவும் தேசிய ரீதியாக முதலிடத்தைப் பெற்றுள்ளமை மாவட்டத்தின் அரச உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பான பணிக்குக் கிடைத்துள்ள முக்கியமான அங்கீகாரம் என அரசாங்க அதிபர் தெரிவித்தார். இந்தச் சாதனை தனிநபர் ஒருவருக்கான வெற்றி அல்ல என்றும், மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், சமூக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைத்து உத்தியோகத்தர்களினதும் கூட்டு முயற்சியின் பெறுபேறாகும் என்றும் தெரிவித்தார். கடந்த 12 வருடங்களாக யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றிய அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் விடயம் சார் அனைத்து உத்தியோகத்தர்களின் தொடர்ச்சியான பங்களிப்பும் இந்த வெற்றிக்கான அடித்தளமாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சமூக பாதுகாப்புச் சபையின் திட்டங்கள் எதிர்கால தலைமுறைகளின் சமூக மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முக்கியமான நீண்டகால சேமிப்புத் திட்டங்களாகும் எனத் தெரிவித்த அவர், குழந்தை பிறந்தது முதல் எதிர்காலத்தை நோக்கி மேற்கொள்ளப்படும் சேமிப்பின் மூலம், அந்த நபர் 60 வயதை அடையும் போது ஓய்வூதியப் பயனைப் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படுகின்றது எனவும் குறிப்பிட்டார். மேலும், புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெறுகின்ற மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் சமூக பாதுகாப்புச் சபையின் திட்டங்கள் பயனளிப்பதாக அவர் தெரிவித்தார்.
கடந்த ஒரு வருட காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திற்கான சமூக பாதுகாப்பு சபையின் மாவட்ட அலுவலர் பதவி தொடர்ச்சியாக நிரப்பப்படாத நிலையிலும் மாவட்டம் தனது சாதனையைத் தொடர்ந்துள்ளமை, குறிப்பாக சமூக பாதுகாப்பு சபையின் மாவட்ட பிரதேச உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் அனைத்து அரச உத்தியோகத்தர்களினதும் நிறுவன ரீதியான அர்ப்பணிப்பையும் பொறுப்புணர்வையும் வெளிப்படுத்துகின்றது எனவும் தெரிவித்தார். அதேவேளை, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களும் தமது சனத்தொகை மற்றும் தேவைகளுக்கு ஏற்ப சமூக பாதுகாப்புச் சபையின் செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுத்து வருகின்றன எனவும் அவர் பாராட்டுத் தெரிவித்தார். இத்தகைய விருது வழங்கும் நிகழ்வுகள் மாவட்ட அல்லது மாகாண மட்டத்தில் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், தேசிய மட்டத்திலும் நடத்தப்பட்டு வடமாகாண அரச உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பான பணியும் சாதனைகளும் நாடளாவிய ரீதியில் கௌரவிக்கப்பட வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் கோரிக்கை விடுத்தார். மேலும், சமூக பாதுகாப்புச் சபையின் நோக்கமும் இத்தகைய விருது வழங்கும் நிகழ்வுகளின் நோக்கமும், மக்களுக்கான சேவை சரியான முறையில் வழங்கப்படுகின்றது என்பதையும், மக்கள் நலனை முன்னிறுத்தி அரச உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றார்கள் என்பதையும் வெளிப்படுத்துவதாகும் எனவும் தெரிவித்தார். எமக்குக் கிடைக்கும் விருதுகளும் கௌரவங்களும் எமது உத்தியோகத்தர்களுக்கும், இந்தத் திட்டங்களின் பயனாளிகளான பொதுமக்களுக்கும் உரித்தானவை. விருதுகளைப் பெறுவது எமது இலக்காக இல்லாமல், அதன் மூலம் மக்களுக்கு அர்ப்பணிப்புடனும் நியாயத்துடனும் தேவையான சேவையை வழங்குவதே எமது பிரதான நோக்கமாக இருக்க வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார் .
விருதுகள்:
சமூகப் பாதுகாப்புத் துறையில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கான தேசிய விருதுகள் பல்வேறு அமர்வுகளில் வழங்கப்பட்டன. பணச்சேகரிப்பில் யாழ்ப்பாண மாவட்டம் தேசிய ரீதியில் முதலிடம் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பணச்சேகரிப்பு நடவடிக்கையின் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டம் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது. இதனடிப்படையில், தேசிய மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணச்சேகரிப்பில் சாவகச்சேரி பிரதேச செயலகம் முதலாம் இடத்தையும், கோப்பாய் பிரதேச செயலகம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன. மேலும், நல்லூர், பருத்தித்துறை, உடுவில், வேலணை, ஊர்காவற்றுறை, காரைநகர், கரவெட்டி, தெல்லிப்பழை, சங்கானை, சண்டிலிப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேச செயலகங்கள் தேசிய விருதுக்கான தகுதியைப் பெற்று, இக்கௌரவிப்பு நிகழ்வில் கௌரவிக்கப்பட்டன. அத்துடன், தனிநபர் ரீதியிலான பணச்சேகரிப்பிலும் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தேசிய மட்டத்தில் சிறப்பிடங்களைப் பெற்றுள்ளனர். அதற்கமைய, கோப்பாய் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த திரு. கே. வர்ணதாஸ் முதலாம் இடத்தையும், சாவகச்சேரி பிரதேச செயலகத்தைச் சேர்ந்த திரு. ஆர். சுபேந்திரன் இரண்டாம் இடத்தையும், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த திருமதி. கே. டர்ஷா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். இச்சாதனையானது யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதேச செயலகங்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் மக்கள் பங்களிப்புடன் மேற்கொண்ட பணச்சேகரிப்பு நடவடிக்கைகளின் சிறப்பான பெறுபேறாகக் குறிப்பிடத்தக்கதாகும். இதனைத் தொடர்ந்து கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சிரேஷ்ட இணைப்பதிகாரி திரு. பா. பிரதீபன், மேலதிக அரசங்க அதிபர்கள் ,சமுர்த்திப்பணிப்பாளர்கள், திட்டமிடல்பணிப்பாளர்கள், பிரதேச செயலர்கள், உதவிப் பிரதேச செயலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , கிராம உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,உள்ளிட்டவர்கள் பங்குபற்றி சிறப்பித்தனர்.
 
1 4 5 6 8 9 10 11 12 13 16 17 18 20 21 22 23 24