வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன், தென்மராட்சி பிரதேச செயலகமும் தென்மராட்சி பிரதேச பண்பாட்டுப் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த “பண்பாட்டுப் பெருவிழா தென்மராட்சி பிரதேச செயலாளரும் பிரதேச பண்பாட்டுப் பேரவைத் தலைவருமான திரு. பிரான்சிஸ் சந்திரா சத்தியசோதி தலைமையில் இன்று (02.10.2026) வெள்ளிக்கிழமை பிற்பகல் நட்சத்திர மஹால் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண சபையின் பிரதம உள்ளக கணக்காய்வாளர் திருவாட்டி முருகேசு சிவகுமாரி மற்றும் சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி திரு. பசுபதி அச்சுதன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருவாட்டி மாலினி கிருஷ்ணானந்தன், நட்சத்திர மஹால் உரிமையாளர் திரு. தம்பிராசா பரமானந்தம், மட்டுவிலைச் சேர்ந்த சிற்பக் கலைஞரும் “கலாபூஷணம்” கிருஷ்ணப்பிள்ளை கலாமோகன் உள்ளிட்டோர் கௌரவ விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
நிகழ்வுகள் :
விருந்தினர்கள் 28 பண்பாட்டு ஊர்திகள் மற்றும் பண்பாட்டு ஊர்வலத்துடன் வரவேற்கப்பட்டதையடுத்து, மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது. தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து, இசை, நடனம், கும்மி, அம்மன் கௌத்துவம், புத்தாக்கப்பாடல், தப்பாட்டம், கிராமியப்பாடல், வான்நடனம் மற்றும் நாட்டியநாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. சிவசக்தி சங்கீத நர்த்தனாலய மாணவர்கள், மாயோன் இசைக்கல்லூரி மாணவர்கள், இயல்ச்சேத்ரா நடனப்பள்ளி மாணவர்கள், வரணி கலாசார மத்திய நிலைய மாணவர்கள், லை நாட்டிய நடனப்பள்ளி மாணவர்கள் மற்றும் வரணி மத்திய கல்லூரி மாணவர்கள் தமது கலைத்திறமைகளை வெளிப்படுத்தி விழாவை சிறப்பித்தனர். இந்நிகழ்வில் தென்மராட்சி பிரதேச பண்பாட்டுப் பேரவை உறுப்பினர் திரு. கார்த்திகேசு கமலநாதன் அரங்கத்திறப்புரையையும், உதவி பிரதேச செயலாளர் திருமதி லாகினி நிருபராஜ் வரவேற்புரையையும், பிரதேச செயலாளர் திரு. பிரான்சிஸ் சந்திரா சத்தியசோதி தலைமையுரையையும் ஆற்றினர். சிறப்பு விருந்தினர் உரையையும் பிரதம விருந்தினர் உரையையும் தொடர்ந்து கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
கலைச்சாகரம் மற்றும் இளம் கலைஞர் விருதுகள்
பண்பாட்டுத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டும் வகையில் “கலைச்சாகரம் விருது – 2026” வழங்கப்பட்டதுடன்,
திருமதி. சுபத்திராதேவி சிறீஸ்கந்தராசா – இசை
திரு. ஜெயக்கன் ரவீந்திரன் – இசை
திருமதி. ஜானகி ஆனந்தகிருபன் – ஓவியம்
ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். அதேவேளை, வளர்ந்துவரும் இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் “இளம் கலைஞர் விருது – 2026” வழங்கப்பட்டு,
திரு. விக்னேஸ்வரன் பிரசித்தன் – நாதஸ்வரம்
திருமதி. மகேஸ்வரன் சசிலா – நடனம்
திருமதி. பிரியதர்ஷினி ஸ்ரீபன் – குறும்படம்
ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வின் நிறைவில் கலாசார உத்தியோகத்தர் திருமதி சசிகுமார் சர்மினா நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வில் கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.







