சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் சமுர்த்தி கெக்குலு சிறுவர் கழகங்களின் கலாசார மற்றும் இலக்கிய மாவட்ட மட்டப் போட்டிகள் சமுர்த்தி மாவட்டப் பணிப்பாளர் பொ. ஸ்ரீவர்ணன் அவர்களின் தலைமையில் இன்று (04.10.2026) ஞாயிற்றுக்கிழமை யாழ். கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தில்சிறப்பாக நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் விருந்தினராக கலந்து கொண்டு, போட்டிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
அரசாங்க அதிபர் உரை :
சிறுவர்களின் கலைத் திறமைகளை வளர்க்க தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் – அரசாங்க அதிபர் சிறுவர்களின் கலை, கலாசார மற்றும் பண்பாட்டு திறமைகளை அடையாளம் கண்டு வளர்ப்பதற்கு சமூக மட்டத்திலிருந்து மாவட்ட மட்டம் வரையான போட்டி வாய்ப்புகள் தொடர்ச்சியாக வழங்கப்பட வேண்டும் என அரசாங்க அதிபர் தெரிவித்தார். மாவட்ட மட்டப் போட்டிகளில் தெரிவாகும் சிறுவர்களுக்கு தேசிய மட்டப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். கலை மற்றும் கலாசார நிகழ்வுகளில் சிறுவர்கள் பங்கேற்பது அவர்களின் மனநிலையில் நல்ல மாற்றத்தையும் நேர்மறையான எண்ணங்களையும் உருவாக்குவதுடன், அவர்களின் படைப்பாற்றல் மற்றும் ஆளுமை வளர்ச்சிக்கும் துணைபுரியும் என அரசாங்க அதிபர் தெரிவித்தார். பாரம்பரிய கலைகள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட வேண்டிய நிலையில், அவற்றில் சிறுவர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரிப்பது அவசியம் எனவும் வலியுறுத்தினார். யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு கலை, பண்பாட்டு விழாக்கள் மற்றும் போட்டி நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், இத்தகைய நிகழ்வுகள் சிறுவர்கள் தங்களது தனித்திறமைகளையும் குழுத் திறமைகளையும் வெளிப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாக அமைகின்றன என்றார். மேலும், தங்களது விடுமுறை நாளிலும் நடுவர்களாகப் பங்கேற்று ஒத்துழைத்தவர்களுக்கும், சிறுவர்களை முறையாக வழிநடத்தி போட்டிகளில் பங்கேற்கச் செய்த பெற்றோர்கள், சிறுவர் கழகங்கள் மற்றும் சமுர்த்தி அதிகாரிகளுக்கும் அரசாங்க அதிபர் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார். சிறுவர்கள் புத்தகக் கல்வியில் மட்டும் கவனம் செலுத்தாமல், கலை, கலாசார மற்றும் பண்பாட்டு விழுமியங்களுடன் இணைந்த முழுமையான ஆளுமையுடையவர்களாக வளர வேண்டும் என வலியுறுத்திய அரசாங்க அதிபர், எதிர்காலத்திலும் இத்தகைய போட்டிகளை சிறப்பாக முன்னெடுத்து சிறுவர்களின் திறமைகளை ஊக்குவிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார். நடைபெற்ற போட்டிகளின் விபரங்கள் :
வயதுப் பிரிவுகள்:
07 – 10 வயது
11 – 14 வயது
15 – 18 வயது
போட்டி வகைகள்:
பாடல் – (சாதாரண பாடல்)
நாட்டார் பாடல் – (தனிநபர்)
கிராமிய நடனம் – (கூட்டு / கலவன்
அம்மன் கூத்து
குறவர்
காவடி
கோலாட்டம்)
அறிவிப்பாளர்
பேச்சு
உரையுள்
செய்யுள்
ஓவியம்
சிறுவர்களின் கலை, இலக்கிய மற்றும் கலாசாரத் திறமைகளை இனங்கண்டு, அவற்றை மேலும் வளர்ப்பதற்கான சிறந்த வாய்ப்பாக இம்மாவட்ட மட்டப் போட்டிகள் அமைந்துள்ளன. மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் சிறுவர் கழகங்களைச் சேர்ந்த சிறுவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தமது திறமைகளை வெளிப்படுத்தினர். இன்று முற்பகல் 8.30 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை நடைபெற்ற இந்த மாவட்ட மட்டப் போட்டிகளில், சமுர்த்தி சிறுவர் கழகங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் தங்களது கலை, கலாசார மற்றும் இலக்கியத் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இப் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் சமூர்த்தி கணக்காளர் திரு. இ. முருகதாஸ், யாழ். கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபர், சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர்கள், வங்கி முகாமையாளர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 8 10 11 13 15 16