தேசிய உற்பத்தித்திறன் போட்டி 2025/2026 இல் முதலாம் இடத்தைப் பெற்ற யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் ஒருங்கிணைந்து செயற்பட்ட உத்தியோகத்தர்களைப் பாராட்டும் நிகழ்வு, மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் அவர்களின் தலைமையில் இன்று (05.10.2026) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மக்கள் சேவையை வலுப்படுத்தியமைக்கான அங்கீகாரம் :
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் சிறப்பான நிர்வாகச் செயற்பாடுகள், வளங்களை வினைத்திறனுடன் பயன்படுத்துதல், பணிச் செயல்முறைகளில் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல் ஊடாக மக்கள் சேவையை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கான அங்கீகாரமாக இவ்விருது அமைந்துள்ளது. இவ்விருதானது மாவட்டச் செயலாளர் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுடனும் பணியாற்றி வரும் அனைத்து அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களின் கூட்டு முயற்சி, குழுப்பணி மற்றும் தொடர்ச்சியான பங்களிப்புக்குக் கிடைத்துள்ள முக்கியமான அங்கீகாரமாகும்.
தலைமையுரை :
சிறந்த தலைமைத்துவம் – ஒருங்கிணைந்த குழுச் செயற்பாடு : யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் முதலிடம்
– மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன் யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றிருப்பது, அரசாங்க அதிபரின் சிறந்த தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சிறப்பான செயற்பாடுகளுக்குக் கிடைத்துள்ள முக்கியமான அங்கீகாரமாகும். உற்பத்தித்திறனை உயர்த்துதல், மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரம், வேகம் மற்றும் வினைத்திறனை மேம்படுத்துதல் ஆகிய துறைகளில் மாவட்டச் செயலகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது எனத் தெரிவித்தார். இந்த வெற்றியை அடைவதில் உற்பத்தித்திறன் ஒருங்கிணைப்பாளரான உதவி மாவட்டச் செயலாளர், உற்பத்தித்திறன் உத்தியோகத்தர்கள் மற்றும் அனைத்து பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பான பங்களிப்பும் ஒருங்கிணைந்த குழுச் செயற்பாடும் முக்கிய பங்காற்றியுள்ளன. எனவே, இவ் வெற்றி சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றிணைந்து செயற்பட்ட ஒட்டுமொத்த மாவட்டச் செயலகக் குழுவினரின் அர்ப்பணிப்பு, பொறுப்புணர்வு மற்றும் கூட்டுப்பணிக்குக் கிடைத்துள்ள கௌரவமாகும். தேசிய ரீதியில் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், எதிர்காலத்தில் உற்பத்தித்திறனை மேலும் மேம்படுத்துவதற்கும், பணிச் செயல்முறைகளைத் தொடர்ந்து நவீனமயப்படுத்துவதற்கும், மக்களுக்கு இன்னும் சிறந்த, விரைவான மற்றும் வினைத்திறன்மிக்க அரச சேவையை வழங்குவதற்கும் புதிய உத்வேகம் அளித்துள்ளதாக மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன் தெரிவித்தார்.
உற்பத்தித்திறன் விருது வெறும் போட்டி வெற்றியல்ல; மக்கள் சேவைக்கான அங்கீகாரம் – அரசாங்க அதிபர்
தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றிருப்பது, மாவட்ட மக்களுக்கு வினைத்திறனானதும் தரமானதுமான சேவையை வழங்குவதற்காக அனைத்து உத்தியோகத்தர்களும் மேற்கொண்ட அர்ப்பணிப்புக்கும் உழைப்புக்கும் கிடைத்துள்ள அங்கீகாரம் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உற்பத்தித்திறன் போட்டியில் முதலாம் இடத்தைப் பெறுவது ஒரு சாதனையாகும். ஆனால் அந்த இடத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வது அதைவிடக் கடினமானது. எனவே, தற்போது பெற்றுள்ள இந்த வெற்றியைத் தக்கவைத்துக் கொள்வதுடன், எதிர்காலத்தில் இதற்கும் மேலான நிலையை அடைவதற்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இந்த வெற்றியின் உண்மையான உரிமையாளர்கள் மாவட்டச் செயலகத்தின் அனைத்து மட்டங்களிலும் பணியாற்றுகின்ற ஒவ்வொரு உத்தியோகத்தருமே ஆவர். மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் உதவி மாவட்ட செயலாளரின் வழிகாட்டுதலுடன் உற்பத்தித்திறன் தொடர்பான உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளனர். அதேபோன்று ஒவ்வொரு கிளையிலும் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்பும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கிடையிலான நல்லுறவு, திறந்த தொடர்பாடல், ஒருவருக்கொருவர் வழங்கும் ஒத்துழைப்பு மற்றும் ஒரே நோக்குடன் செயற்படுதல் ஆகியவை எமது வெற்றியின் முக்கிய அடித்தளங்களாகும். உற்பத்தித்திறன் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் அது சிரமமான ஒரு பணியாகப் பார்க்கப்பட்டிருந்தாலும், தற்போது அது எமது அன்றாட அலுவலகப் பணிகளின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. இதன் மூலம் அலுவலகத்தின் செயல்திறனை மட்டுமன்றி பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவையின் தரத்தையும் மேம்படுத்த முடிந்துள்ளது. அலுவலகப் பொறுப்புகளுடன் தங்களது தனிப்பட்ட மற்றும் குடும்பப் பொறுப்புகளையும் சமநிலைப்படுத்திக் கொண்டு உத்தியோகத்தர்கள் மேற்கொள்ளும் அர்ப்பணிப்பான சேவை பாராட்டுக்குரியது. இந்த முதலாம் இடம் வெறுமனே ஒரு போட்டியில் பெற்ற வெற்றியாக பார்க்கப்படக் கூடாது. மாவட்ட மக்களுக்கு நாம் வழங்கும் சேவையின் தரத்திற்கான ஒரு அங்கீகாரமாக இதனைப் பார்க்க வேண்டும். எனவே, எதிர்காலத்திலும் மக்களை மையமாகக் கொண்ட வினைத்திறனான சேவையை வழங்குவதை எமது பிரதான இலக்காகக் கொண்டு செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், இன்றைய நாள் மாவட்டச் செயலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்களையும் மனதாரப் பாராட்டக்கூடிய மகிழ்ச்சியான நாளாக அமைந்துள்ளதாகத் தெரிவித்த அரசாங்க அதிபர், இந்த வெற்றியை ஏற்படுத்துவதற்கு பங்களித்த அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார். மாவட்ட நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு எதிர்காலத்திலும் அனைத்து உத்தியோகத்தர்களினதும் ஒற்றுமையானதும் அர்ப்பணிப்பானதுமான ஒத்துழைப்பு தொடர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
உற்பத்தித்திறன் செயற்பாடுகள் தொடர்பாக உத்தியோகத்தர்களின் அனுபவப் பகிர்வு :
நிகழ்வின் ஒரு பகுதியாக, மேலதிக அரசாங்க அதிபர்(காணி), திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், பிரதம பொறியியலாளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், உதவி மாவட்டச் செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் தமது உற்பத்தித்திறன் செயற்பாடுகள் தொடர்பான பணியனுபவங்கள் மற்றும் கருத்துக்கள் தொடர்பான அனுபவப் பகிர்வுகளை வழங்கினர். இன்றைய நிகழ்வில் உற்பத்தித்திறன் செயற்பாடுகளை ஒருங்கிணைத்த உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்சினி மற்றும் உற்பத்தித்திறன் உத்தியோகத்தர்களான திரு. செ. பிரசாத், திரு. அ. அ. வினிஸ்ரன், திருமதி ந. லதாங்கி, திருமதி சி. சசிதா மற்றும் திருமதி யோ.கிருஷாந்தினி ஆகியோர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி, அரசாங்க அதிபரால் கௌரவிக்கப்பட்டனர்.







