கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தலைவர் திரு. யசஸ் ஹேவகே (Yasas Hewage) அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்று (14.10.2026) மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது, அச்சுவேலியில் அமைந்துள்ள கைத்தொழில் பேட்டையில் கைத்தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் புதிய முதலீட்டாளர்களைக் கைத்தொழில் பேட்டையில் முதலீடுகளை மேற்கொள்ள ஊக்குவிப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் கைத்தொழில் முயற்சிகளை மேம்படுத்துவதற்கான சாத்தியமான வளங்கள், சந்தையில் அதிக கேள்வி காணப்படும் பொருட்களை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் மற்றும் அவற்றை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் கைத்தொழில் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள சேவைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பிலும் சபையின் தலைவர் அரசாங்க அதிபருக்கு விளக்கமளித்தார்.இச்சந்திப்பில், கைத்தொழில் அபிவிருத்தி சபையின் கைத்தொழில் பேட்டை பிரிவின் பணிப்பாளர் திரு. சிறிமால் ஜெயதிலக, சபையின் யாழ்ப்பாண மாவட்டப் பிரதிப் பணிப்பாளர் திரு. கா. சசிகரன் மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தலைமை அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.








