2026ஆம் ஆண்டுக்கான அரச உத்தியோகத்தர்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டிகளில் வெற்றிபெற்ற வீர, வீராங்கனைகளைக் கௌரவிக்கும் விருது வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாண மாவட்ட உதவி அரசாங்க அதிபர் உ. தர்ஷினி அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (15.10.2026) முற்பகல் 10.30 மணிக்கு மாவட்டச் செயலக செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது.
அரசாங்க அதிபர் உரை !
இந் நிகழ்வில் அதிதியாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றுகையில், 2026ஆம் ஆண்டுக்கான அரச உத்தியோகத்தர்களுக்கான தேசிய வலைப்பந்தாட்டப் போட்டிகளில் வெற்றிபெற்ற வீர, வீராங்கனைகளைக் கௌரவிக்கும் நிகழ்வில் உரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், ஆண்கள் பிரிவு, 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பிரிவு மற்றும் கலப்புப் பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளிலும் யாழ்ப்பாண மாவட்டச் செயலக அணி சம்பியன் பட்டங்களை வென்றமை வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை எனத் தெரிவித்தார். பல்வேறு திணைக்களங்கள் மற்றும் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த அணிகள் சிறந்த பயிற்சிகளுடனும் வசதிகளுடனும் போட்டிகளில் பங்கேற்ற நிலையில், அலுவலகக் கடமைகள், குடும்பப் பொறுப்புகள் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் யாழ்ப்பாண மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் பாராட்டத்தக்கவை எனக் குறிப்பிட்டார். குறிப்பாக, 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பிரிவில் சம்பியன் பட்டத்தை வென்றமை, கலப்புப் பிரிவில் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக சம்பியன் பட்டத்தைத் தக்கவைத்தமை மற்றும் ஆண்கள் பிரிவில் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் சம்பியன் பட்டத்தைப் பெற்றமை ஆகியன மாவட்டத்தின் விளையாட்டுத்துறை வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனைகளாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், தேசிய மட்டப் போட்டிகளில் பங்கேற்கும் அரச உத்தியோகத்தர்களுக்கு முறையான பயிற்சிகள், தேவையான வசதிகள் மற்றும் நிதி ஆதரவு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், எதிர்காலப் போட்டிகளுக்கான ஆயத்தப் பணிகளை முன்கூட்டியே ஆரம்பித்து, அதற்கான செலவுகளில் ஒரு பகுதியையாவது மாவட்ட மட்ட நிதியிலிருந்து வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் எனத் தெரிவித்தார். அதேவேளை, மாவட்ட மற்றும் பிரதேச மட்ட அதிகாரிகள் விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு உரிய ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதுடன், அவர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்கும் ஊக்குவிப்பதற்கும் முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். யாழ்ப்பாண மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப் போட்டிகளில் பங்கேற்கும் உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதன் மூலம் எதிர்காலப் போட்டிகளிலும் மாவட்டம் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெறுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார். இறுதியாக, இப்போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளைப் பெற்ற வீர, வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் மற்றும் போட்டிகளின் வெற்றிக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் தனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தார்.
போட்டியின் விபரங்கள் :
செப்டெம்பர் 16ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டித் தொடரில், இலங்கை அரச சேவையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பல்வேறு அரச திணைக்களங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இதன்போது, யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்களும் ஆண்கள், பெண்கள் மற்றும் கலப்புப் பிரிவுகளில் பங்கேற்று தமது திறமைகளை வெளிப்படுத்தினர். இம்முறை முதன்முறையாக யாழ்ப்பாணத்தில் தேசிய மட்டத்திலான அரச உத்தியோகத்தர்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டித் தொடர் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இப்போட்டித் தொடரில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக அணி பல்வேறு பிரிவுகளில் சிறப்பான வெற்றிகளைப் பதிவு செய்தது. ஆண்கள் பிரிவில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக அணி சம்பியன் பட்டத்தை வென்றது. இதன்மூலம், பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் இப்பிரிவில் மீண்டும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான பிரிவில் (Over 40) யாழ்ப்பாண மாவட்டச் செயலக அணி சம்பியன் பட்டத்தைத் தன்வசப்படுத்தியது. கலப்புப் பிரிவில் (Mixed) ஆண்களும் பெண்களும் இணைந்து பங்கேற்ற போட்டியில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக அணி சம்பியன் பட்டத்தை வென்றதுடன், தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் சம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டது. மேலும், B பிரிவு பெண்களுக்கான லீக் சுற்றுப் போட்டியில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. அதே பிரிவின் நாக்-அவுட் சுற்றில் மூன்றாம் இடத்தையும் பெற்றது. C பிரிவு பெண்களுக்கான போட்டியிலும் யாழ்ப்பாண மாவட்டச் செயலக அணி மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. இப்போட்டிகளில் வெற்றிபெற்ற வீர, வீராங்கனைகளுக்கான சான்றிதழ்களும் விருதுகளும் மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்களால் வழங்கி வைக்கப்பட்டன. நிகழ்வில் பங்கு பற்றியவர்கள் விபரங்கள் : இந் நிகழ்வில் பிரதம பொறியியலாளர் கே. திருக்குமரன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ். சிவகுமார், உள்ளகக் கணக்காய்வாளர் எஸ். ரமேஷ்குமார், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் பொ. சிறிவர்ணன், நிர்வாக உத்தியோகத்தர் கே.பி. தனபால, , காணி மேலதிக மாவட்டப் பதிவாளர் மற்றும் பிரதி பதிவாளர், மாவட்டச் செயலகக் கணக்காளர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர், விருதுகளைப் பெற்றுக்கொள்ள வருகைதந்த வீர, வீராங்கனைகள் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.







