கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகள் பயிர்க்காப்புறுதி தொடர்பில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் தேவைகள் குறித்து ஆராய்ந்து, உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலான கலந்துரையாடல், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (21.10.2026) மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தலைமையுரை :
யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகள் பயிர்க்காப்புறுதி தொடர்பில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், அவர்களின் தேவைகள் மற்றும் முன்மொழிவுகளை உரிய தரப்பினரின் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்கும் இக்கலந்துரையாடல் சிறந்த வாய்ப்பாக அமைகின்றது என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெறும் விவசாயக் குழுக் கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கலந்துரையாடல்களில் விவசாயிகள் பயிர்க்காப்புறுதி தொடர்பான தமது பிரச்சினைகள் மற்றும் தேவைகளைத் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றனர். இவ்விடயங்கள் தொடர்பில் விவசாயம் சார்ந்த அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டதன் அடிப்படையில், அமைச்சரின் வழிகாட்டலுக்கு அமைவாகக் கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் பங்கேற்புடன் இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிர்க்காப்புறுதியைப் பெற்றுக்கொள்வதற்கு உரிய நிபந்தனைகள் மற்றும் நடைமுறைகளைப் பூர்த்தி செய்வது அவசியமாகும். கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை சட்டரீதியான ஏற்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுக்கு அமைவாகச் செயற்படுவதால், காப்புறுதிக் கொடுப்பனவுகளை வழங்கும்போதும் அவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகள் முன்வைத்துள்ள காப்புறுதிப் பிரச்சினைகள் தொடர்பில் உரிய அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு முன்னர் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரப்பட்டிருந்த போதிலும், எதிர்பார்க்கப்பட்ட அறிக்கைகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. இதனால், விவசாயிகளின் கோரிக்கைகளை உரிய முறையில் ஆராய்ந்து தீர்மானங்களை மேற்கொள்வதில் சில நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுகின்றன. எனவே, விவசாயிகள் தமது பிரச்சினைகள், தேவைகள் மற்றும் முன்மொழிவுகளை இக்கலந்துரையாடலில் தெளிவாக முன்வைக்க வேண்டும். இதன்மூலம் பயிர்க்காப்புறுதித் திட்டம் தொடர்பான தெளிவான புரிதலைப் பெற்றுக்கொள்வதுடன், மாவட்ட விவசாயிகளின் நலனைக் கருத்திற்கொண்டு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை அடைவதற்கும் வழியேற்படும் என மேலும் தெரிவித்தார். இறுதியாக, இக் கலந்துரையாடலில் பங்கேற்ற கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் அதிகாரிகள், துறைசார் உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.
விரிவாக ஆராய்வு :
யாழ்ப்பாண மாவட்டத்தில் பயிர்க்காப்புறுதித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள், காப்புறுதிப் பயன்களைப் பெற்றுக்கொள்வதில் காணப்படும் நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் விவசாயிகளின் தேவைகள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. மேலும், விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இக் கலந்துரையாடலில் விவசாய மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் தலைவர் திரு. பிறேமசிறி ஜயசிங்காராச்சி, பணிப்பாளர் நாயகம் திரு. கெழும் களுஆராச்சி, விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரின் இணைப்புச் செயலாளர் திரு. ரணில் விமலரத்ன, அபிவிருத்திப் பணிப்பாளர் திரு. சந்தன கொடிப்பிலி, நிதிப் பணிப்பாளர் திரு. சமன் சுபசிங்க, காப்புறுதிப் பணிப்பாளர் திரு. கித்மின், மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் திரு. இ. சுரேந்திரநாதன், பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி ரஞ்சனாதேவி, விவசாய மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் உதவிப் பணிப்பாளர் திரு. டி. கிரிதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பான கருத்துக்களை முன்வைத்து அதற்கான ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டனர்.







