யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (22.10.2026) மு. ப 11.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட விவசாயத்துறையின் முன்னேற்றத்திற்கு ஒருங்கிணைந்த செயற்பாடுகள் அவசியம் எனவும், விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி, யாழ்ப்பாண மாவட்டத்தின் விவசாய உற்பத்தியை மேம்படுத்துவதற்கு விவசாயத்துறை சார்ந்த அனைத்து உத்தியோகத்தர்களும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என வலியுறுத்தினார். மாவட்டத்தின் விவசாயத்துறை சார்ந்த உத்தியோகத்தர்களுடனான கூட்டத்தில் தலைமையுரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், விவசாயிகளின் உற்பத்திச் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதன் ஒரு பகுதியாக, விவசாயக் காப்புறுதி தொடர்பாக நிலவும் பிரச்சினைகள் குறித்து நேற்றைய தினம் கொழும்பிலிருந்து வருகை தந்த விவசாயக் காப்புறுதிச் சபையின் உயர் அதிகாரிகளுடன் விரிவான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் விவசாயக் காப்புறுதி தொடர்பான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் ஆராயப்பட்டன. தற்போதைய காலநிலை மாற்றங்கள் விவசாயத்துறையில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய சூழல் காணப்படுவதால், விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களைக் கருத்திற்கொண்டு உரிய வழிகாட்டல்களையும் ஆதரவையும் வழங்குவது அவசியமாகும். விவசாய உற்பத்தி தொடர்பான புள்ளிவிபரங்களைத் திரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், மாவட்டத்தின் விவசாய உற்பத்தியை மேலும் உயர்த்துவதற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் தொடர்ச்சியான முயற்சிகள் தேவைப்படுகின்றன.
குறிப்பாக, நீர்ப்பாசன வசதிகள் குறைவாகக் காணப்படும் பகுதிகளிலும் விவசாயிகள் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தமது உற்பத்திச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், விவசாயத்துறை சார்ந்த உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் வடக்கு மாகாண விவசாய அமைச்சுடன் தொடர்புடைய அதிகாரிகள் இணைந்து செயற்படுவதன் மூலம் இத்தகைய சவால்களுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க முடியும் எனத் தெரிவித்தார். மேலும், விவசாயக் கூட்டங்களில் அடையாளம் காணப்படும் பிரச்சினைகள், குறிப்பாகப் பயிர்களைத் தாக்கும் கால்நடை கட்டுப்படுத்துதல் தொடர்பான சவால்கள், உரிய முறையில் ஆராயப்பட்டுத் தீர்வுகள் எட்டப்பட வேண்டும். மாவட்டத்தின் விவசாயத்துறை அபிவிருத்தியை நிலையான முறையில் முன்னெடுப்பதற்கு அனைத்துத் தரப்பினரதும் ஒத்துழைப்பும் பங்களிப்பும் இன்றியமையாதவை எனவும் தெரிவித்தார். கடந்த காலங்களில், குறிப்பாக இவ்வாண்டில், விவசாய உற்பத்தி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் நன்றியைத் தெரிவித்த அரசாங்க அதிபர், எதிர்காலத்திலும் அனைவரினதும் அர்ப்பணிப்பான பங்களிப்புடன் யாழ்ப்பாண மாவட்டத்தின் விவசாயத்துறையை மேலும் முன்னேற்ற முடியும் எனத் தெரிவித்தார்.
ஆராயப்பட்டன விடயங்கள் :
யாழ்ப்பாண மாவட்டத்தின் விவசாய துறைசார்ந்த பல்வேறு விடயங்கள் இக் கூட்டத்தில் முன்கொண்டுவரப்பட்டு விரிவாக ஆராயப்பட்டன. குறிப்பாக மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கி வரும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பில் விவசாயிகளால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டன. தொடர்ந்து விவசாய அபிவிருத்திகளை மேற்கொள்வதற்காக வங்கிகளினால் மேற்கொள்ளப்படவுள்ள ஊக்குவிப்பு நடைமுறைகள் தொடர்பில் கலந்து கொண்டிருந்த வங்கி முகாமையாளர்களினால் விளக்கமளிக்கப்பட்டன. மேலும், இலங்கை வங்கியினால் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவோருக்காக விசேட கடன் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. விவசாயக் கடனுக்கு வருடாந்தம் 10% வட்டியிலும், கால்நடை வளர்ப்புக் கடனுக்கு 9% வட்டியிலும் அதிகபட்சமாக 25 மில்லியன் ரூபா வரை கடன் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது. கடன் பெறுவதற்கான தகைமைகள், பிணை நிபந்தனைகள் மற்றும் ஏனைய விபரங்களைச் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு அறிந்துகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இளம் விவசாயத் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க இலகு கடன் திட்டம் :
இளம் விவசாயத் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் கமத்தொழில் அமைச்சினால் புதிய கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 30 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இக்கடன் திட்டத்தின் வட்டி 4% சதவீதமாகும்.
இக்கடனைப் பெற்றுக்கொள்ள விரும்பும் இளம் விவசாயத் தொழில் முயற்சியாளர்கள் தமது பிரதேச செயலாளர் ஊடாக மாவட்டச் செயலாளருக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் எனக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
பயிர்க் காப்புறுதிக் காலம் :
மஹா நெற்பயிர் செய்கைப் பருவத்திற்கான பயிர்க் காப்புறுதிக் காலம் 2026.10.15 முதல் 2027.02.28 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், கமநல அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், மாகாண விவசாயத் திணைக்களம், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், நீர்ப்பாசன பொறியியலாளர்கள், வங்கிகளின் முகாமையாளர்கள், துறைசார் திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.







