யாழ்ப்பாண மாவட்டத்தின் சிறுவர், பெண்கள் மற்றும் உளவளத்துணை அபிவிருத்தி தொடர்பான 2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுக் கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (22.10.2026) முற்பகல் 9.30 மணிக்கு மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அரசாங்க அதிபரின் தலைமையுரை :
மாவட்டத்தில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகப் பிரதேச மட்டத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை மீளாய்வு செய்வதுடன், அவற்றுக்கான தீர்வுகளை ஒருங்கிணைந்த முறையில் முன்னெடுப்பதே இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என குறிப்பிட்டார். சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தயாரிக்கப்படுவதால், அறிக்கையிடப்படாத சம்பவங்கள் முழுமையாகப் புள்ளிவிபரங்களில் பிரதிபலிப்பதில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற பின்னர் அவற்றுக்கான தீர்வுகள் உரிய முறையில் வழங்கப்படுவதையும், சம்பந்தப்பட்ட குடும்பங்கள் தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்வதையும் உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். மேலும், சம்பவ மாநாடுகளை நடத்தித் தீர்மானங்களை எடுப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் அடிப்படைப் பிரச்சினைகளையும் கண்டறிந்து தீர்வுகளை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார். குறிப்பாக, குடும்பங்களின் பொருளாதார நெருக்கடிகள், வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் கல்வி சார்ந்த சவால்கள் சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குக் காரணமாக அமையக்கூடும் என்பதால், பிரதேச செயலாளர்கள் ஏனைய துறைசார் உத்தியோகத்தர்களுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். வாழ்வாதார உதவிகள் தேவைப்படும் குடும்பங்களுக்கு மாவட்ட மட்டத்தில் உரிய ஒருங்கிணைப்பின் ஊடாக உதவிகளை வழங்குவதுடன், கல்வி சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வலயக் கல்விப் பணிப்பாளர்களின் ஒத்துழைப்பையும், உளவளத்துணை தேவைப்படுவோருக்கு உரிய நிபுணத்துவ உதவிகளையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், மாவட்டத்தில் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்துவருவது கவலைக்குரிய விடயமாக உள்ளதாகக் குறிப்பிட்ட அரசாங்க அதிபர் அவர்கள், இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கும், ஆபத்தான நிலைமைகளில் உள்ளவர்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு உரிய உளவளத்துணை மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குவதற்கும் துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகள் அவசியம் எனத் தெரிவித்தார். சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முழுமையாக ஒழிப்பது சவாலானதாக இருந்தாலும், அனைத்துத் துறைசார் உத்தியோகத்தர்களும் ஒருங்கிணைந்து செயற்படுவதன் மூலம் இத்தகைய சம்பவங்களைக் குறைக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். எனவே, சிறுவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அவர்களின் நலனை மேம்படுத்தவும், தற்கொலைகளைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் அனைத்து அதிகாரிகளும் தத்தமது பொறுப்புகளை உணர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.இதன்போது, மாவட்ட மட்டத்திலான சிறுவர் அபிவிருத்தி, பெண்கள் அபிவிருத்தி, உளவளத்துணை வேலைத்திட்டங்கள் மற்றும் ஏனைய தொடர்புடைய விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
அரசாங்க அதிபரால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் :
சிறுவர் இல்லங்களிலிருந்து சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் வலிமையான வாழ்க்கை - “திவியட்ட சவியக்” வீட்டுத்திட்டத்தின் கீழ் இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான வீடுகள் வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். இத்திட்டம் மத்திய மற்றும் மாகாண அமைச்சுக்கள் ஊடாகத் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதால், பிரதேச செயலாளர்கள் தகுதியான பயனாளிகளின் துல்லியமான பட்டியலைத் தயாரித்து வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் சிறுவர் விவகாரங்களைக் கையாள்வதற்கான உத்தியோகத்தர்கள் இல்லாத நிலையை நிவர்த்தி செய்யும் வகையில், 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் உள்ளிட்ட உரிய உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கோ அல்லது சுழற்சி முறையில் பணியமர்த்துவதற்கோ நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுக்கு கடிதம் அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தினார். அனைத்துப் பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சிறுவர், பெண்கள் மற்றும் உளவளத்துணை தொடர்பாகக் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது புதன்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு வழக்குக் கலந்துரையாடல்களை (Case Discussions) நடத்தி, பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறும் தெரிவிக்கப்பட்டது. மாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளரின் கோரிக்கைக்கு அமைவாக, நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஐந்து சிறுவர் பாதுகாப்பு இல்லங்களில் வசிக்கும் சிறுவர்களுக்கு உளஆற்றுப்படுத்தல் மற்றும் வழிகாட்டல் சேவைகளை வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இதற்கமைய, சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் உள்ள சிறுவர்களின் ஆளுமை மற்றும் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், உளவளத்துணை உத்தியோகத்தர், மாவட்ட திறன் விருத்தி உத்தியோகத்தர் மற்றும் மனிதவள மேம்பாட்டு உத்தியோகத்தர் ஆகியோர் இணைந்து மாதத்திற்கு இருமுறை செயலமர்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளலாம் என மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். பெண்களுக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பில், 2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2026 ஆம் ஆண்டில் முறைப்பாடுகளின் எண்ணிக்கை சிறிதளவு அதிகரித்துள்ளதாகவும் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கான நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அத்துடன், வலயக் கல்வி அலுவலகங்களின் கல்விசாரா உத்தியோகத்தர்களுக்கு கல்விச் சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் தொடர்பில் நன்னடத்தை உத்தியோகத்தரின் ஊடாகச் செயலமர்வொன்றை ஏற்பாடு செய்து நடத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.
விழிப்புணர்வு :
அதிகரித்து வரும் தற்கொலைச் சம்பவங்கள், அவற்றுக்கான முக்கிய காரணிகள் மற்றும் அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்திய கலாநிதி எஸ். சிவதாஸ் அவர்கள் சிறப்பு விழிப்புணர்வு கருத்துரை வழங்கப்பட்டது.
பங்குபற்றியவர்கள் :
இக்கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் க. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா. ஜெயகரன், மாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளர் திருமதி எஸ்.சி.என். கமலராஜன், உதவி மாவட்டச் செயலாளர் உ. தர்சினி, பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்டச் செயலக, பிரதேச செயலக மட்டங்களில் பணியாற்றும் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நன்னடத்தை உத்தியோகத்தர்கள், உளவளத்துணை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
 
1 2 3 4 6 7 9 10 11 58