எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஜனவரி 20 மற்றும் 21ஆம் திகதிகளில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெறவுள்ள வடக்கு ஏற்றுமதி மன்றம் (Northern Export Forum 2027) நிகழ்வை முன்னிட்டு, வடமாகாண ஏற்றுமதி ஊக்குவிப்புச் செயலமர்வு இன்று (03.11.2026) காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக செயலமர்வு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொழில் முயற்சியாளர்கள் மற்றும் சிறு வணிகர்களின் ஏற்றுமதித் திறனை மேம்படுத்தும் நோக்கில், இரண்டு நாட்களாக நிகழ்நிலைத் தொழில்நுட்பத்தின் ஊடாக இச் செயலமர்வு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அரசாங்க அதிபர் அவர்களின் தலைமையுரை :
யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு தொழில் முயற்சியாளர்கள் உள்ளூர் உற்பத்திகளை முன்னெடுத்து வருகின்றபோதிலும், அவற்றை நேரடியாக ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளும் அடிப்படை வசதிகளும் போதியளவில் இல்லை எனத் தெரிவித்தார். குறிப்பாக, மீன் மற்றும் கடலுணவுகள் உள்ளிட்ட உற்பத்திகள் யாழ்ப்பாணத்திலிருந்து ஏனைய பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு வகைப்படுத்தப்பட்டு தரப்படுத்தப்பட்ட பின்னரே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால் ஏற்றுமதியின் மூலம் கிடைக்கக்கூடிய பொருளாதாரப் பயன்களை எமது மாவட்டம் முழுமையாகப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது எனக் குறிப்பிட்டார். மேலும், ஒரே வகையான உற்பத்திகளில் பலரும் ஈடுபடுவதற்குப் பதிலாக, புதிய தொழில்துறைகளையும் மாற்று உற்பத்தி வாய்ப்புகளையும் அடையாளம் காண வேண்டும் என வலியுறுத்தினார். தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்திகளின் தரம், பொதியிடல் முறைமை மற்றும் சந்தைத் தேவைகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். உற்பத்திப் பொருட்களை உள்ளூர் சந்தை, இலங்கையின் ஏனைய மாவட்டங்களின் சந்தை மற்றும் சர்வதேசச் சந்தை என மூன்று நிலைகளில் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், அதற்கேற்ப உற்பத்திகளைத் தரமுயர்த்தி ஏற்றுமதிக்குத் தயார்ப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும், எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள ஏற்றுமதியாளர்கள் மன்றத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதில் மாவட்டத்தின் தொழில் முயற்சியாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஏனைய தொடர்புடைய தரப்பினரின் பங்களிப்பு அவசியமானது எனத் தெரிவித்தார். இதற்கான அடுத்தகட்டமாக விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுத்து, ஏற்பாட்டுக் குழுவொன்றை அமைத்து செயற்பாடுகளைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
நோக்கங்கள் :
வடமாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் உள்ளூர் பொருட்களை சர்வதேசச் சந்தைகளுக்கு அறிமுகப்படுத்துதல், ஏற்றுமதி வாய்ப்புகளை அடையாளம் காணுதல், தொழில் முயற்சியாளர்களுக்கு ஏற்றுமதி தொடர்பான அறிவையும் நடைமுறை வழிகாட்டல்களையும் வழங்குதல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வடமாகாணத்தின் உற்பத்திப் பொருட்களுக்கு சர்வதேசச் சந்தையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கி, ஏற்றுமதி சார்ந்த பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான முன்னோடி நடவடிக்கையாக இச்செயலமர்வு அமைந்துள்ளது.
நிகழ்நிலைத் தொழில்நுட்பத்தின் ஊடாகக் கருத்துரைகளை வழங்கியவர்கள் :
இச் செயலமர்வில் இந்தியத் துணைத் தூதுவர் கௌரவ ஸ்ரீ சாய் முரளி, தேசிய ஏற்றுமதியாளர்கள் சபையின் தலைவர் மங்கள விஜயசிங்க, தேசிய தொழில் முயற்சியாளர் மேம்பாட்டு அதிகாரசபையின் தலைவர் லக்ஷ்மன் அபயசேகர, முகாமைத்துவ மன்றத்தின் நிர்வாக அதிகாரியும் 2027 வடமாகாணச் செயற்திட்டத்தின் இணைப்பாளருமான இந்திகா கௌசல் ராஜபக்ஷ, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சியான் மரிக்கான் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சந்தைப்படுத்தல் முகாமைத்துவத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. சிவனேந்திரா ஆகியோர் நிகழ்நிலைத் தொழில்நுட்பத்தின் ஊடாகக் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினர். இதன்போது, வடமாகாணத்தின் சிறு வணிக முயற்சிகளை ஏற்றுமதிக்குத் தயார்ப்படுத்தி வழிநடத்துதல் தொடர்பாக திருமதி சாந்தி பகீரதன் அவர்களும், தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிறு வணிகத் தமிழ் சான்றிதழ் கற்கைநெறி ஒருங்கிணைப்பாளர் திரு. சசிஹரன் அவர்களும் உரையாற்றினர். மேலும், ஏற்றுமதிக்கான ஆவணங்கள், தளவாடங்கள், சரக்குப் போக்குவரத்து மற்றும் சுங்க நடைமுறைகள் தொடர்பாக இலங்கைச் சுங்கத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் திரு. M. ரவீந்திரகுமார், தொடர்பாக விளக்கமளித்தனர். ஏற்றுமதி விலை நிர்ணயம், கட்டண விதிமுறைகள், அந்நியச் செலாவணி மற்றும் வாடிக்கையாளர் கடன் இடர் முகாமைத்துவம் தொடர்பாக வங்கி நிபுணர் திரு. S. P. கோகுலசங்கர் அவர்களும், சர்வதேச விற்பனை மற்றும் விநியோகச் செயற்பாடுகள் தொடர்பாக நோர்வேயின் Global Basket Supermarket நிறுவனத்தின் நிறுவனர் திரு. கலாரூபன் தெய்வேந்திரன் அவர்களும் வளவாளர்களாகக் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.
இந்நிகழ்வில் வடமாகாணச் செயற்திட்டத்தின் தலைவர் திரு. சந்திரகுமார், உப தலைவர் திருமதி சாந்தி பகீரதன், திட்டமிடல் பணிப்பாளர் இ. சுரேந்திரநாதன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் வி. தர்ஷினி, மாவட்டக் கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் பிரதிப் பணிப்பாளர் திரு. கா. சசிகரன், தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகாரசபையின் மாவட்ட இணைப்பாளர், ஏற்றுமதி அபிவிருத்திச் சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பல்வேறு தொழில் முயற்சியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
1 2 3 5 6 9 10 11 12