யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளில் கைத்தொழில் முயற்சியாண்மை வட்டங்களை வலுப்படுத்தும் நோக்கில், ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் பிரதிப் பணிப்பாளர் திரு. கா. சசிகரன் தலைமையில் இன்றைய தினம் (04.11.2026) காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சபாலிங்கம் அரங்கில் நடைபெற்றது. இச் செயலமர்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் அதிதியாகக் கலந்துகொண்டு செயலமர்வை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இச் செயலமர்வில் கைத்தொழில் அபிவிருத்தி சபை தலைவர் திரு. யசாஸ் கெவகே, பிரதிப்பணிப்பாளர் திரு. ஜெயந்த பிறேமகுமார, கிளிநொச்சி உதவிப்பணிப்பாளர் திரு. சி.சடாட்சரன் மற்றும் மாகாண கல்வித் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் திரு,அ,சுபாகரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அரசாங்க அதிபர் உரை :
பாடசாலைப் பருவத்திலேயே தொழில் முயற்சியாண்மைச் சிந்தனையை மாணவர்களிடம் விதைக்க வேண்டும் – அரசாங்க அதிபர் பாடசாலை மாணவர்கள் அனைவரும் மருத்துவர், பொறியியலாளர் அல்லது பட்டதாரி என்ற ஒரே இலக்கை நோக்கிப் பயணிக்காமல், அவர்களது ஆர்வம், திறமை மற்றும் ஆற்றலுக்கு ஏற்ப பல்வேறு தொழில்துறைகளை அடையாளம் கண்டு, எதிர்காலத்தில் சிறந்த தொழில் முயற்சியாளர்களாக உருவாகும் வகையில் வழிப்படுத்த வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.
தொழில் வாய்ப்புகளுக்கும் வேலையற்றோரும் :
எமது மாவட்டத்தில் பல தொழில் முயற்சியாளர்கள் தமது நிறுவனங்களுக்குத் தேவையான தொழிலாளர்களைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அதேவேளை, வேலையற்றவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகக் காணப்படுகின்றது. தொழில் வாய்ப்புகள் இருந்தும் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளும் மனப்பாங்கு இளைஞர்களிடம் போதியளவில் வளர்ச்சியடையவில்லை. இது சமூகத்தில் காணப்படும் முக்கியமான முரண்பாடாகும். அரச உத்தியோகத்தை மட்டுமே எதிர்பார்த்துக் காத்திருக்காமல், இளைஞர்கள் தங்களுக்கான தொழில் வாய்ப்புகளைத் தாங்களே உருவாக்கிக்கொள்ள வேண்டும். அதற்கான சிந்தனையும் தன்னம்பிக்கையும் பாடசாலைப் பருவத்திலிருந்தே வளர்க்கப்பட வேண்டும்.
கல்விக் கொள்கையிலும் பெற்றோர் மனப்பாங்கிலும் மாற்றம் அவசியம் :
ஒரு தொழில் முயற்சியை ஆரம்பிப்பதில் தொழிலாளர்களைப் பெற்றுக்கொள்வது, வங்கிக் கடன்களைப் பெறுவது, வணிகப் பதிவுகளை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு சவால்கள் காணப்படுகின்றன. இத்தகைய சவால்களை எதிர்கொண்டு முயற்சிகளில் ஈடுபடுபவர்களை ஊக்குவிக்கும் மனப்பாங்கு சமூகத்தில் வளர வேண்டும். வெளிநாடுகளில் எட்டாம், ஒன்பதாம் வகுப்புகளிலேயே மாணவர்களின் ஆர்வத்திற்கேற்ப மோட்டார் வாகனத் தொழில்நுட்பம், கட்டட நிர்மாணம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் திறமைகளை வளர்த்துக்கொள்ள வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. எமது கல்வி முறையிலும் இத்தகைய சிந்தனை மாற்றம் ஏற்பட வேண்டும். எமது சமூகத்தில் பெற்றோர்கள் பிள்ளைகள் பல்கலைக்கழகத்திற்குச் சென்று மருத்துவர், பொறியியலாளர் அல்லது பட்டதாரிகளாக வேண்டும் என்பதையே பெரும்பாலும் எதிர்பார்க்கின்றனர். ஆனால், பல்கலைக்கழகக் கல்வியைப் பெறாத பலரும் வெற்றிகரமான தொழில் முயற்சியாளர்களாக உருவாகியுள்ளனர். எனவே, மாணவர்களுக்கு மட்டுமன்றி பெற்றோர்களுக்கும் தொழில் முயற்சியாண்மை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
தொழில் முயற்சியாண்மை வட்டங்கள் செயற்பாட்டு மையங்களாக அமைய வேண்டும் :
ஒவ்வொரு பாடசாலையிலும் உருவாக்கப்படவுள்ள தொழில் முயற்சியாண்மை வட்டங்களில் சுமார் 30 மாணவர்களை இணைத்து, அவர்களுக்குத் தொடர்ச்சியான வழிகாட்டல்களை வழங்க வேண்டும். இவ்வட்டங்கள் பெயரளவிலான அமைப்புகளாக இல்லாமல், மாணவர்களின் படைப்பாற்றல், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் முயற்சித் திறன்களை வளர்க்கும் செயற்பாட்டு மையங்களாக அமைய வேண்டும் எனத் தெரிவித்தார். இதற்காக உள்ளூர் வெற்றிகரமான தொழில் முயற்சியாளர்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும். பல்வேறு சவால்களைக் கடந்து தமது விடாமுயற்சி, அனுபவம் மற்றும் புதுமையான சிந்தனையால் வெற்றிபெற்றுள்ள அவர்களது வாழ்க்கைப் பயணம் மாணவர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக அமையும் என அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
புதுமையான உற்பத்திகளுக்கும் ஏற்றுமதிக்கும் முன்னுரிமை :
தொழில் முயற்சிகளில் அனைவரும் ஒரே துறையைப் பின்பற்றும் மனப்பாங்கிலிருந்து விடுபட வேண்டும். ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் மிக்சர் உற்பத்தி பிரபலமடைந்தபோது பலரும் அதே தொழிலில் ஈடுபட முன்வந்தனர். எதிர்காலத்தில் ஒரே உற்பத்தியைப் பின்பற்றாமல், உள்ளூர் வளங்களை அடிப்படையாகக் கொண்ட புதிய உற்பத்திகள், நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சர்வதேசச் சந்தைக்குப் பொருத்தமான ஏற்றுமதிப் பொருட்களை உருவாக்கும் சிந்தனை இளைஞர்களிடம் வளர்க்கப்பட வேண்டும். இன்றைய மாணவர்களிடம் காணப்படும் தகவல் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் திறன்களைப் பயன்படுத்தி புதிய தொழில் முயற்சிகளை உருவாக்குவதற்கும் உலகளாவிய சந்தை வாய்ப்புகளை அடையாளம் காண்பதற்கும் வழிகாட்ட வேண்டும். தொழில் முயற்சியாண்மை என்பது பொருட்களை உற்பத்தி செய்வது அல்லது வியாபார நிலையங்களை ஆரம்பிப்பது மட்டுமல்ல, புதிய தேவைகளைக் கண்டறிந்து அவற்றுக்கான புதுமையான தீர்வுகளை உருவாக்குவதுமாகும்.
மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியம் :
மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஆசிரியர்களுக்கு மிக முக்கியமான பொறுப்பு உள்ளது. ஒரு மாணவனின் சிந்தனையிலும் வாழ்க்கை இலக்கிலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஆற்றல் ஆசிரியர்களுக்கு உண்டு. எனவே, இச்செயலமர்வில் பெற்றுக்கொள்ளும் அறிவையும் அனுபவங்களையும் பயன்படுத்தி மாணவர்களிடம் தொழில் முயற்சியாண்மை தொடர்பான நேர்மறையான சிந்தனையை வளர்க்க வேண்டும். ஒவ்வொரு பாடசாலையிலும் தெரிவுசெய்யப்படும் 30 மாணவர்களில் குறைந்தபட்சம் 15 மாணவர்களையாவது எதிர்காலத்தில் சிறந்த தொழில் முயற்சியாளர்களாக உருவாக்க வழிப்படுத்த முடிந்தால், அது அவர்களது குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் மாவட்டத்திற்கும் பெரும் பங்களிப்பாக அமையும்.
2030 ஆம் ஆண்டில் இளம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்க இலக்கு :
2026 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும் இத்திட்டத்தின் மூலம் 2030, 2031, 2032 ஆம் ஆண்டுகளில் அறிவு, திறன், தன்னம்பிக்கை மற்றும் புதுமையான சிந்தனை கொண்ட இளம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்க முடியும். அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும் எனத் தெரிவித்தார். பாடசாலை மாணவர்களிடையே தொழில் முயற்சியாண்மை ஆளுமையை வளர்க்கும் இத்தகைய சிறப்பான செயற்றிட்டத்தை முன்னெடுத்துள்ள கைத்தொழில் அபிவிருத்திச் சபைக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஆசிரியர்கள் பங்கேற்பு :
இச் செயலமர்வில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து 110 ஆசிரியர்களும், கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 60 ஆசிரியர்களுமாக மொத்தம் 170 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
செயலமர்வின் நோக்கம் :
பாடசாலை மாணவர்கள் மத்தியில் கைத்தொழில் முயற்சியாண்மைச் சிந்தனையை வளர்த்தல், புதிய தொழில் முயற்சிகள் தொடர்பான ஆர்வத்தை ஏற்படுத்துதல் மற்றும் எதிர்காலத் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்களிப்பை வலுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலம் மாணவர்களின் அறிவு, மனப்பாங்கு, படைப்பாற்றல், புத்தாக்கச் சிந்தனை மற்றும் தொழில் முயற்சித் திறன்களைப் பாடசாலை மட்டத்திலேயே மேம்படுத்துவதற்கான வழிகாட்டல்களும் விழிப்புணர்வும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டன.
வளவாளர்கள் :
வளவாளர்களாக திரு. யசாஸ் ஹேவகே, திரு. அ. சுபாகரன் மற்றும் திரு. தி. தனம் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினர்.
 
1 2 3 4

885544649 1657111705814076 4032209146204485760 n 6 8 9 10 11 12 13 14 15 16 17 19 20 21 22 23 24