தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த 2026ஆம் ஆண்டுக்கான மாணவத் தூதுவர் நிகழ்ச்சித்திட்ட நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் தலைமையில், இன்றைய தினம் (04.11.2026) காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் திட்டமிடல் மற்றும் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் திருமதி சாணிகா மலகொட ஆகியோர் கலந்துகொண்டனர்.
மாணவத் தூதுவர் செயற்திட்ட விளக்கவுரை :
மாணவத் தூதுவர் செயற்திட்டம் தொடர்பான விளக்கவுரையினை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் திட்டமிடல் மற்றும் ஊடகப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் திருமதி லக்சி நிகழ்த்தினார்.
அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் உரை :
இந் நிகழ்வில் உரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், மாணவர்கள் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை பாடசாலையில் கல்வி கற்கின்றனர். அதன் பின்னர் பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை பெரும்பாலான மாணவர்கள் தனியார் வகுப்புகளுக்குச் செல்கின்றனர். அதாவது, மாணவர்களின் நாளாந்த நேரத்தின் பெரும்பகுதி ஆசிரியர்களின் வழிகாட்டலுக்கும் கட்டுப்பாட்டுக்கும் உட்பட்டதாக அமைகின்றது. எனவே, மாணவர்களின் எதிர்காலத்தைச் சிறந்த முறையில் வழிநடத்துவதில் ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பும் கடப்பாடும் காணப்படுகின்றது. அதேவேளை, மாணவர்களும் தங்களுடைய வாழ்க்கையைச் சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான பொறுப்பை உணர வேண்டும். குறிப்பாக, பெற்றோர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூறும் நல்ல ஆலோசனைகளைக் கேட்டு அதற்கேற்ப நடந்துகொள்ளும் பண்பை வளர்த்துக்கொள்ள வேண்டும். இன்றைய இளைய தலைமுறையினரிடம் பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடக்கும் மனப்பாங்கு குறைந்து வருவது ஆரோக்கியமான சூழலாக அமையாது. 'நாங்கள் படித்த காலத்தில் இப்படித்தான் இருந்தோம் இன்றைய காலம் அப்படியில்லை' என்று கூறிக்கொண்டிருப்பதை விடுத்து, இன்றைய காலத்திற்குப் பொருத்தமான நல்ல மாற்றங்களை உருவாக்க வேண்டும். எனது பாடசாலைக் கால அனுபவங்களை நினைவுகூரும்போது, நாம் கல்வி கற்ற காலத்தில் ஆசிரியர்களின் கண்டிப்பும் ஒழுக்க வழிகாட்டலும் எவ்வாறு எங்களை வழிநடத்தியது என்பதை நினைவுகூர முடிகின்றது. அன்றைய காலத்தில் ஆசிரியர்களின் கண்டிப்பை பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டு, கல்வி மற்றும் ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்தனர். அந்த அனுபவங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது ஒழுக்கம், பொறுப்புணர்வு மற்றும் ஆசிரியர்களை மதிக்கும் பண்பாகும். அதேவேளை, மாணவர்களை அன்புடனும் புரிதலுடனும் வழிநடத்த வேண்டியதன் அவசியத்தையும் உணர வேண்டும். யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பாடசாலைகளின் மாணவத் தலைவர்களாக இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ள உங்களிடம் பல்வேறு ஆளுமைத் திறன்கள் உள்ளன. அந்தத் திறன்களைச் சரியான முறையில் பயன்படுத்தி, உங்களை மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும். உங்களுடைய எதிர்காலம் உங்கள் கைகளிலேயே உள்ளது. எனவே, சமூகத்திற்குச் சிறந்த முன்மாதிரியாகவும், திறமைகளையும் ஆளுமைகளையும் கொண்டவர்களாகவும், சமூகத்திற்கு நல்ல செய்திகளையும் சிந்தனைகளையும் எடுத்துச் செல்லக்கூடிய மாணவர்களாகவும் நீங்கள் உருவாக வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பங்கேற்பு :
யாழ்ப்பாண மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களையும் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் சிரேஷ்ட மாணவத் தலைவர்கள் மற்றும் விடயப் பொறுப்பாசிரியர்கள் உள்ளிட்ட சுமார் 200 பேர் இந்நிகழ்ச்சித்திட்டத்தில் பங்கேற்றனர்.
வளவாளர்களின் கருத்துரைகள் :
சிறுவர் துஷ்பிரயோகங்களை அடையாளம் காணுதல் மற்றும் அவற்றைத் தடுப்பதில் பாடசாலைகளின் வகிபாகம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி செ. பிரணவன் கருத்துரை வழங்கினார். மாணவத் தூதுவர் செயற்திட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிமுகத்தை சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆர். ரவிராஜ் வழங்கியதுடன், பாடசாலைகளில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பிள்ளைநேய அணுகுமுறைகள் தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் கே. ரஜீவன் விளக்கமளித்தார். மேலும், கருத்தரங்கின் குழுச் செயற்பாடுகள் மற்றும் செயற்திட்டப் பணிகள் தொடர்பான வழிகாட்டல்களை சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களான ஆர். ரவிராஜ் மற்றும் இளவரசன் ஆகியோர் வழங்கினர்.
நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதான நோக்கம் :
பாடசாலைகளின் சிரேஷ்ட மாணவத் தலைவர்கள் மற்றும் விடயப் பொறுப்பாசிரியர்களை உள்ளடக்கி, சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளில் மாணவர்களை நேரடியாக ஈடுபடுத்துவதன் மூலம் பாதுகாப்பான பாடசாலைச் சூழலை உருவாக்குவதே இம்மாணவத் தூதுவர் நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இதனூடாக,
1. சிறுவர் துஷ்பிரயோகம், வன்முறை, புறக்கணிப்பு மற்றும் சுரண்டல் ஆகியவற்றிலிருந்து சிறுவர்களைப் பாதுகாத்தல்.
2. சிறுவர் உரிமைகள் தொடர்பான அறிவையும் விழிப்புணர்வையும் மாணவர்களிடையே மேம்படுத்துதல்.
3. மாணவர்களின் தலைமைத்துவம், தன்னம்பிக்கை மற்றும் பொறுப்புணர்வை வளர்த்தல்.
4. சிறுவர் பாதுகாப்புச் செய்திகளை சக மாணவர்களுக்கும் பாடசாலைச் சமூகத்திற்கும் கொண்டு சேர்த்தல்.
5. சிறுவர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சூழ்நிலைகளை அடையாளம் கண்டு உரிய தரப்பினருக்கு அறிவிக்கும் திறனை வளர்த்தல்.
6. மாணவர்களின் தொடர்பாடல் திறன், ஒத்துழைப்பு, ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை மேம்படுத்துதல்.
7. பாடசாலைகள், பெற்றோர், அரச நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்.
8. வன்முறை, துன்புறுத்தல் மற்றும் பாகுபாடற்ற சிறுவர் நட்பான பாடசாலைச் சூழலை உருவாக்குதல்.
9. மாணவத் தூதுவர் செயற்பாடுகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து அவற்றின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்தல்.
10. ஒவ்வொரு சிறுவரும் அச்சமின்றி, உரிமைகளுடன் பாதுகாப்பாக வாழக்கூடிய சமூகத்தை உருவாக்குவதில் மாணவர்களைப் பங்காளர்களாக்குதல்.
எனப் பல்வேறு நோக்கங்கள் வலியுறுத்தப்பட்டன. மாணவத் தூதுவர் என்பது ஒரு பதவி மட்டுமல்ல; சிறுவர்களின் பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்துவதற்கான பொறுப்பும் சமூக அர்ப்பணிப்புமாகும்என்ற கருத்தும் இந்நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்ஷினி, மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு. இ. செந்தூரன், பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், பாடசாலைகளின் சிரேஷ்ட மாணவத் தலைவர்கள் மற்றும் விடயப் பொறுப்பாசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
 
1 2 3 5 7 8 9 10 11 12 13 14 15 17 19 20