தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில், சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் இணையவழிக் குற்றங்களைத் தடுப்பது தொடர்பான பயிற்றுவிப்பாளர்களைப் பயிற்றுவிக்கும் செயலமர்வு (TOT), மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க. சிவகரன் அவர்களின் தலைமையில் இன்று(11.11.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலக செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது.
தலைமையுரை :
சிறுவர் பாதுகாப்புடன் தொடர்புடைய கடமைகளை முன்னெடுத்து வரும் உத்தியோகத்தர்களுக்கு சைபர் குற்றங்கள் மற்றும் இணையவழி அச்சுறுத்தல்களிலிருந்து சிறுவர்களைப் பாதுகாப்பது தொடர்பான தெளிவான அறிவையும் விழிப்புணர்வையும் கொண்டிருப்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானதாகும் என மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்தார். தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக ஸ்மார்ட்போன்களும் இணைய வசதிகளும் சிறுவர்களின் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாகிவிட்டன. இதன் மூலம் பல பயனுள்ள தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடிகின்ற அதேவேளை, பொருத்தமற்ற உள்ளடக்கங்கள், இணையவழித் துன்புறுத்தல்கள், மோசடிகள் மற்றும் பல்வேறு சைபர் குற்றங்களுக்கு அவர்கள் ஆளாகும் அபாயமும் அதிகரித்துள்ளது எனத் தெரிவித்தார். குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு(AI) மற்றும் சமூக ஊடகங்களின் வளர்ச்சியால் சிறுவர்கள் எதிர்கொள்ளும் இணையவழி ஆபத்துக்களும் புதிய வடிவங்களைப் பெற்றுள்ளன. எனவே, இத்தகைய ஆபத்துகளை அடையாளம் காண்பது, இணையத்தைப் பொறுப்புடன் பயன்படுத்துவது மற்றும் சிறுவர்களுக்குப் பாதுகாப்பான இணையச் சூழலை உருவாக்குவது தொடர்பில் நாம் தெளிவான அறிவைப் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பொறுப்பை உத்தியோகத்தர்கள் மாத்திரம் தனித்து முன்னெடுக்க முடியாது. பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகத் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஒருங்கிணைந்து செயற்படுவது அவசியமாகும். அதேவேளை, சைபர் குற்றங்கள் தொடர்பாக முறைப்பாடுகள் செய்யப்பட்ட பின்னர் அவற்றைக் கையாளும் நடைமுறைகள், சட்ட நடவடிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் நாம் அறிந்திருக்க வேண்டும். குறிப்பாக, முறைப்பாடுகளுக்குப் பின்னரும் எதிர்பார்த்த தீர்வுகள் கிடைக்காத சந்தர்ப்பங்களில் அடுத்தகட்டமாக எவ்வாறு செயற்படுவது என்பதிலும் தெளிவு அவசியமாகும்.
சிறுவர்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதில் உத்தியோகத்தர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. பாதிப்புகள் ஏற்பட்ட பின்னர் நடவடிக்கை எடுப்பதைவிட, அவை ஏற்படுவதற்கு முன்னரே ஆபத்துகளை அடையாளம் கண்டு தடுப்பதே எமது முதன்மையான பொறுப்பாகும் எனத் தெரிவித்தார். அந்த வகையில், இன்றைய பயிற்சியை வழங்குவதற்காக வருகை தந்துள்ள சைபர் அனலிஸ்ட் திரு. ஏ. எம். மிவ்ராஜ் அவர்கள் தனது அனுபவங்களையும் நிபுணத்துவ அறிவையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ளவுள்ளார். இந்தப் பயிற்சியை ஒரு சாதாரண நிகழ்வாகக் கருதாமல், சிறுவர் பாதுகாப்புப் பணிகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கான முக்கியமான கற்றல் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். உங்களின் சந்தேகங்களைத் தெளிவுபடுத்தி, நடைமுறை அனுபவங்களையும் பகிர்ந்து, பயிற்சியின் முழுமையான பயனைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
நோக்கம் :
இச்செயலமர்வில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைமை அலுவலுத்தின் இணையப் பாதுகாப்புப் பகுப்பாய்வாளர் திரு. ஏ. எம். மிவ்ராஜ் அவர்கள் வளவாளராகக் கலந்துகொண்டு, சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் இணையவழிக் குற்றங்கள் தொடர்பில் விரிவான விளக்கங்களை வழங்கினார். குறிப்பாக, கணினி, இணையம் மற்றும் தனிப்பட்ட தரவுகளை ஊடுருவல்காரர்களிடமிருந்து(Hackers) பாதுகாக்கும் வழிமுறைகள், அதற்குப் பயன்படுத்தப்படும் மென்பொருள்கள், சமூக ஊடகங்கள் ஊடாக இடம்பெறும் குற்றச்சம்பவங்களை இணையவழியில் முறைப்பாடு செய்வதற்கான நடைமுறைகள், முறைப்பாட்டின் பின்னரான நடவடிக்கைகள் மற்றும் சிறுவர்கள் இணையத்தைப் பயன்படுத்துவதற்கான நேர வரையறைகளை நிர்ணயிப்பதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தினார். மேலும், மாவட்ட மற்றும் பிரதேச செயலக மட்டங்களில் தொழில்நுட்ப அறிவுசார் சிறுவர் பாதுகாப்புக் கட்டமைப்புகளை நிறுவனமயப்படுத்துதல், இணையவழி அச்சுறுத்தல்களை ஆரம்பத்திலேயே அடையாளம் காணுதல், டிஜிட்டல் ஆதாரங்களைச் சேகரித்தல் மற்றும் பரிந்துரை நடைமுறைகளைத் தரப்படுத்துதல் போன்ற விடயங்களும் இச் செயலமர்வில் முக்கியத்துவம் பெற்றன. இவ்வாறான நடைமுறைகளைப் பின்பற்றுவதன் ஊடாகச் சிறுவர்களுக்கு எதிரான இணையவழிச் சுரண்டல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களைத் தடுத்து, அவர்களுக்குப் பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உருவாக்குவதற்குத் தொடர்புடைய உத்தியோகத்தர்களின் திறன்களையும் அறிவையும் மேம்படுத்துவதே இப்பயிற்சிச் செயலமர்வின் பிரதான நோக்கமாக அமைந்தது. இச் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் உதவி மாவட்டச் செயலாளர் உ. தர்ஷினி, சிறுவர் பாதுகாப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. இ. செந்தூரன் மற்றும் மாவட்ட, பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.







