யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.மகேசன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (2021.09.13) காலை பத்துமணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இக் கலந்துரையாடலில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் கலந்து கொண்டு, கடந்த வருடத்திலிருந்து கொரோனாத் தொற்றுப் பரவலினால் பல தாக்கங்கள் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக பொருளாதார ரீதியில் பல தாக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இத்தகைய நிலையில் ஒரு சில வர்த்தகர்கள் அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்து அசாதாரண சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்குகின்றார்கள் எனத் தெரிவித்தார். மேலும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் செயற்பாடுகள், திட்டங்கள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு.ம.பிரதீபன் அவர்களும், பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.






