யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு "அனைத்திற்கும் முன்னுரிமை சிறார்கள்" என்ற தொனிப்பொருளில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் பலாமரக்கன்றுகளை நாட்டும் தேசிய நிகழ்ச்சித்திட்டமும், மாவட்ட சிறுவர் சஞ்சிகை வெளியீடு மற்றும் சிறுவர் கழக மாணவர்களுக்கான உபகரணங்களை வழங்கும் நிகழ்வும் இன்றைய தினம் (2021.10.01) காலை பத்துமணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் உரையாற்றும் போது " சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் அவசியம் மற்றும் சிறுவர்கள் எதிர்கொள்கின்ற சவால்களான போதைவஸ்துப் பாவனை, பெற்றோரை இழந்த சிறுவர்களின் நிலைப்பாடு, சிறுவர்களின் தற்கொலை சம்பவங்கள், போருக்கு பிந்திய சிறுவர்களின் உளநிலை பற்றியும் இவற்றிலிருந்து சிறுவர்களை மீட்பதற்கு உளவள ஆலோசனைகள் வழங்குதல் வேண்டும்" எனவும் தெரிவித்தார்.
மேலும் " அனைத்திற்கும் முன்னுரிமை சிறார்கள்" என்ற தொனிப்பொருளுக்கு இணங்க சிறுவர்களின் உரிமைகளிற்கு முக்கியத்துவம் கொடுத்து ஒழுக்கமான சிறுவர்களை உருவாக்க வேண்டும் அத்தோடு பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக நிறுவனங்கள் ஆகியன சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்க செயற்படுதல் வேண்டும்" எனவும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு.ம. பிரதீபன், உதவி மாவட்டச் செயலாளர் திருமதி.எஸ்.சி.என். கமலராஜன் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், சிறுவர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்






