சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களுக்கு உள்ள பிரச்சினைகள் தொடர்பில் அறிந்து தீர்வு காணும் விசேட கலந்துரையாடல் ஒன்று மத்திய வங்கி ஆளுநரின் பங்கேற்புடன் இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்தியக் கிளையின் ஏற்பாட்டில் 21.11.2021 அன்று காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.
வட பிராந்தியத்துடன் தொடர்புடைய பங்குதாரர்களின் ஒத்துழைப்புடன் பிராந்தியத்தின் நிலையான வளர்ச்சியை அடைவதற்கான ஒருங்கிணைந்த பொறிமுறையை உருவாக்குதல் மற்றும் சிக்கல்களை கையாள்வதற்கான சாத்தியமான தீர்வுகள் மற்றும் உத்திகள் வழங்குவதை நோக்காக கொண்டு இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது முதலீட்டாளர்களின் பிரச்சினைகளைக் நேரடியாக கேட்டறிந்து கொண்ட மத்திய வங்கியின் கௌரவ ஆளுநர் அதற்கான தீர்வுகளை வடக்கு மாகாண ஆளுநர், அரச அதிபர்கள் மற்றும் வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடி அதற்கு தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்கள் எதிர்நோக்குகின்ற அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ளலில் உள்ள தாமதங்கள், Covid-19 இடர்நிலையில் உற்பத்தியாளர்கள் வங்கிகளில் பெற்றுக்கொண்ட கடன்களை திரும்ப செலுத்துவதிலுள்ள காலநீடிப்பு சட்டஏற்பாடுகள், சந்தைவாய்ப்பு பிரச்சினைகள், சேதனப் பசளை உற்பத்தியாளர்களது பிரச்சினைகள், முயற்சியாளர்களுக்கான உட்கட்டுமான வசதி ஏற்பாடுகள்,ஏற்றுமதியாளர்களது பிரச்சினைகள் உள்ளிட்ட பலவிடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிட்டதக்கது.
இந்நிகழ்வில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கௌரவ அஜித் நிவாட் கப்ரால், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஜீவன் தியாகராஜா, இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்கள்,வங்கிகளின் பிராந்திய பொதுமுகாமையாளர்கள் ,திணைக்களங்களின் தலைவர்கள்,சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.






