விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் மற்றும் யாழ். மாவட்டச் செயலகத்தினால் நடாத்தப்படும் "நாளைய ஆரோக்கியத்திற்கான தேசிய உடற்தகுதி திட்டம்" தொடர்பான இரண்டு நாள் பயிற்சிப்பட்டறையின் ஆரம்ப நிகழ்வானது கோப்பாய் பிரதேச செயலாளர் திருமதி சுபாஜினி மதியழகன் தலைமையிலும், பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர் உயர்திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் பங்குபற்றுதலுடனும் 2021.11.29 அன்று காலை 9 மணிக்கு கோப்பாய் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கலந்து கொண்டு அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கையில் "தொற்றா நோய்களை தவிர்ப்பதற்காக இத் திட்டமானது நாடுபூராவும் மேற்கொள்ளப்படுகிறது.அந்த வகையில் எமது மாவட்டத்திலும் இன்றைய தினம் நாளைய ஆரோக்கியத்திற்கான தேசிய உடற்த்தகுதி திட்டம் மேற்கொள்படுகிறது. தற்போது உடற்பயிற்சியின்மையால் பல நோய்கள் ஏற்படக்கூடிய நிலைமைகள் ஏற்பட்டுள்ளது. மேலும் சிறுவர் மற்றும் இளைஞர்கள் உடல் வலுவை பயன்படுத்தி விளையாட்டுக்களில் ஈடுபடுவது குறைவடைந்துள்ளது" எனவும் குறிப்பிட்டார்.

மேலும் குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ச.சபானந்த் அவர்களால் "உடற்பயிற்சியின் தேவை ,நோக்கம்" தொடர்பாக விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.

இவ் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்டச் செயலாளர், யாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ச.சபானந்த் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஷ்ட தலைமை விரிவுரையாளர் கலாநிதி கே.கேதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அத்துடன் குறித்த நிகழ்வில் மாவட்ட விளையாட்டு இணைப்பாளர்,

விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர், விளையாட்டு உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் இளைஞர் கழக அமைப்புக்கள் பங்குபற்றியிருந்தனர்.