யாழ். நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வெளி மாவட்டங்களுக்கான பேருந்து நிலையத்தினை அரச பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் இணைந்து பயன்படுத்துவதற்கான பொது இணக்கப்பாட்டினை ஏற்படுத்தும் நோக்கிலான கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் யாழ். மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் 29.12.2021 மாலை 4மணிக்கு நடைபெற்றது. இக்கலந்துரையாடலில்மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்,வடபிராந்திய போக்குவரத்துபொதுமுகாமையாளர் குணபாலச்செல்வம் , பொதுப் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் சு.அமிர்தலிங்கம்,இலங்கை போக்குவரத்துசபை முகாமையாளர்கள், மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.இக்கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த கௌரவ அமைச்சர், மக்களுக்கு பாதிப்புக்கள் அற்ற நிறைவான போக்குவத்து சேவை வழங்கப்பட வேண்டும் எனவும், அதற்கு அரச மற்றும் தனியார் போக்குவரத்து துறையினர் மத்தியில் புரிந்துணர்வுடனான சேவை ஏற்படுத்துவதே இன்றைய கூட்டத்தின் நோக்கம் என்று தெரிவித்தார்.இன்றைய கலந்துரையாடலில், யாழ் மாவட்டத்தில் இருந்து மேற்கொள்ளப்படுகின்ற அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகளை இணைந்த நேர அட்டவணையில் மேற்கொள்வதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள், மற்றும் யாழ் நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தினை மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் செயற்படுத்தவது ,சேவையில் ஈடுபடுபவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இங்கு கருத்துதெரிவித்த மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள்,பெருமளவு பொதுநிதியை செலவு செய்து கட்டப்பட்ட பேருந்து நிலையத்தினை அரச பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் இணைந்த வகையில் மக்களுக்கு அசௌகரியமற்ற வகையில் செயற்படுத்தல் சிறப்பாக அமையுமென தெரிவித்தார். இதன்போது, அனைத்து தரப்பினரதும் கருத்துக்களை கேட்டறிந்த கௌரவ அமைச்சர் அவர்கள் குறித்த விடயங்கள் தொடர்பாக துறைசார் அமைச்சர்களுடன் கலந்துரையாடி விரைவில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






