எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உயர் திருவிழா முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் உற்சவத்தில் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை, நீர் வழங்கல் , சுகாதார ஏற்பாடுகள், தங்குமிட வசதிகள் , உணவு ஏற்பாடுகள், உள்ளக பாதுகாப்பு ஏற்பாடு ,ஒளி ஒலி வழங்கல் ஏற்பாடுகள், போக்குவரத்து வசதி ஏற்பாடுகள்,படகு வசதிகள், தனியார் விற்பனை நிலையங்களின் அனுமதி உள்ளிட்ட பல விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் இவ் உற்சவ நிகழ்வில் Covid-19 மூன்று தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட ஐந்நூறு பக்தர்கள் அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டதுடன் , அனுமதிக்கப்படும் பக்தர்களின் பெயர்ப்பட்டியல் இறுதிப்படுத்தப்பட்டு குறித்த ஒரு நுழைவாயிலினூடாக சுகாதார விதிமுறைகளுக்கு அமைய உற்சவத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.மேலும் அடுத்த கலந்துரையாடலில் மேலதிக தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அனைத்து பங்குதாரர்களின் ஒத்துழைப்புடன் இவ்உற்சவ நிகழ்வை நடாத்த தீர்மானித்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் மேலும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் இந்திய துணைத் தூதர்,கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர், வடபிராந்திய கடற்படைத் தளபதி, கிறிஸ்தவ மத தலைவர்கள், மேலதிக அரசாங்க அதிபர் , மேலதிக அரசாங்க அதிபர் (காணி), உதவிமாவட்டச்செயலாளர், ஊர்காவற்றுறை, வேலணை நெடுந்தீவு பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பிரதம கணக்காளர், சுகாதாரத் துறைசார் பங்குதாரர்கள், கடற்படை உயர் அதிகாரிகள், பொலிஸ் தரப்பினர்,மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் , மற்றும் துறைசார் பங்குதாரர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.






