யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகரித்து செல்லும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தல் மற்றும் சிறந்த போக்குவரத்து கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கான பொறிமுறை பற்றிய கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் தலைமையிலும் அரசாங்க அதிபர், வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் ஆகியோரின் இணைத்தலைமையிலும் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துச் செல்லும் விபத்துக்களினால் உயிரிழப்புகள் ஏற்படுவதுடன் சொத்திழப்புகளும் ஏற்படுகின்றன. வாகனங்களின் அதிகவேகம், கனரக வாகனங்களின் கட்டுப்பாடற்ற பாவனை மற்றும் வேகம், போக்குவரத்து விதிகளினை பின்பற்றாமை உள்ளிட்ட காரணங்களினால் அதிகளவிலான வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றன.
எனவே , அதிகரித்துச் செல்லும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தவும், சிறந்த போக்குவரத்து கலாசாரத்தினை உருவாக்கவும் சகல பங்குதாரர்களையும் உள்ளடக்கி ஒரு பொறிமுறையினை உருவாக்கும் நோக்கம் கருதி ஒழுங்குபடுத்தப்பட்ட இக் கலந்துரையாடலில் வருடாவருடம் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை குறைப்பதற்கும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் , விபத்துக்கான முதன்மைக் காரணிகள் அவற்றுக்கான தீர்வுகள், விழிப்புணர்வுகள் ,விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி, சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குதலில் தொழில்நுட்ப ரீதியாக வெளிநாடுகளில் பின்பற்றுகின்ற நடைமுறைகளை உட்புகுத்துவதனூடாக வீதி விபத்துக்களை குறைத்தல் , பொலிஸ் ரீதியாக காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்தல், வீதி அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்ளும் போது விபத்துக்கள் ஏற்படாமல் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ,யாழ் மாவட்டத்தில் விபத்துகள் அதிகமாக இடம்பெறும் இடங்களை இனங்கண்டு விபத்தை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், புதிய பஸ் பேருந்து நிலையத்தின் போக்குவரத்து சேவைகள் ஆரம்பித்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
மேலும் சகல பங்குதாரர்களையும் உள்ளடக்கி குழு அமைக்கப்பட்டதுடன் இக்குழு குறித்த பொறிமுறையின் ஊடாக தொடர்ச்சியாக சிறந்த போக்குவரத்து கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், உதவி மாவட்டச் செயலாளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்,பிரதேச செயலாளர்கள், சுகாதார துறைசார் பங்குதாரர்கள், போக்குவரத்து துறைசார் பங்குதாரர்கள்,பொலீஸ் தரப்பினர்,ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






