2022 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் தின மாவட்ட நிகழ்வுகள் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 2022.02.22 அன்று தென்மராட்சி கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில், விழிப்புணர்வு துவிச்சக்கரவண்டி பேரணியும், அதன் பின்னர் தேர்தல் விழிப்புணர்வு மற்றும் வாக்குரிமை அளித்தல், வாக்காளராக பதிவு செய்வது தொடர்பாக விழிப்புணர்வு நாடகம், கவிதை ஆகியனவும் இடம்பெற்றது. அத்தோடு வினாடி வினாப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டு மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
மேலும், இங்கு கருத்துத் தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவர்கள் மக்களுடைய பிரதிநிதித்துவத்திற்கும் வாக்காளர் பதிவுக்குமிடையே மிக முக்கியமான தொடர்புண்டு என தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் வாக்காளர் பதிவின் மூலமாகவே பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவதால் மக்கள் அனைவரும் உரிய காலப்பகுதியில் வாக்காளராக பதிவுசெய்வதன் மூலம் தமது வாக்குரிமையை சரியான வகையில் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை தெரிவித்தார்.
பெப்ரவரி 1ம் திகதி வாக்காளர் தினம் அனுஷ்டிக்கப்படும் நிலையில் யாழ். மாவட்டத்தில் வாக்காளராக பதிவு செய்வதற்கான அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பேரணி இன்றைய தினம் மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிட்டத்கது.
இந் நிகழ்வுகளில் மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.முரளிதரன், மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.கி. அமல்ராஜ் மற்றும் பிரதேச செயலாளர்கள், உதவிப்பிரதேச செயலாளர்கள்,மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,கிராம அலுவலர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்






