மத்தியஸ்த திறமைகள் மற்றும் உபாய மார்க்கங்களுக்கான பயிற்சி ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம்(09.03.2022) மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் காலை 9மணிக்கு இடம்பெற்றது.
குறித்த பயிற்சி நெறியில் மத்தியஸ்த சபையில் எதிர் நோக்கும் சவால்கள் தொடர்பாக கேட்டறிந்து கொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் பிணக்குகளை தவிர்க்க அல்லது குறைக்கும் நோக்கில் இப்பாரிய பொறுப்பை மேற்கொண்டுவரும் மத்தியஸ்த சபை உறுப்பினர்கள் இருதரப்பு நியாயங்களையும் சீர்தூக்கி நடுநிலை வகித்து கடமையாற்றுவதற்காக இப்பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் எல்லோரும் இணைந்த வகையில் சமூகத்திற்கு சேவையாற்ற வேண்டுமென தெரிவித்தார்.
மேலும் மத்தியஸ்த சபை உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய காணி மத்தியஸ்த சபைக்குரிய பொதுவான இடம் ஒன்றை ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு குறித்த நிகழ்வின் நோக்கம் தொடர்பாக கருத்து தெரிவித்த மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், சமூக அந்தஸ்துடன் கூடிய இவ்பதவியை வகிக்கும் மத்தியஸ்த சபை உறுப்பினர்கள் சில பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க முடியாவிட்டாலும் கூட அதற்குரிய ஆலோசனைகளை வழங்கி நீதியான சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் சேவை நோக்கில் கடமையாற்றும் இவ் மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கு மாவட்ட செயலகம் சார்பான தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கான நடைமுறைகளும் பிணக்குத் தீர்வு நுட்பங்களும் தொடர்பான பயிற்சிநெறி இடம்பெற்றது. இப்பயிற்சி நெறியில் உதவி மாவட்ட செயலாளர், மத்தியஸ்த சபை யாழ் மாவட்ட இணைப்பாளர், யாழ் மாவட்டத்துக்கான விசேட காணி மத்தியஸ்தர் சபைக்குரிய தவிசாளர், உப தவிசாளர்கள், பிரதேச செயலகங்கள் இயங்கும் சனசமூக மத்தியஸ்த சபைக்குரிய தவிசாளர் உப தவிசாளர்கள், பிரதேச செயலகங்களில் நியமிக்கப்பட்ட மத்தியஸ்த சபை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.






