யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 15.03.2022 அன்று பிற்பகல் இரண்டு மணிக்கு மாவட்டச்செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இவ் விவசாயக் குழுக் கூட்டத்தில் யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் அவர்கள் கலந்துகொண்டார். மேலும் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட விவசாயப் பணிப்பாளர், மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், வங்கி முகாமையாளர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
மேலும், வங்கிகள் விவசாயிகளுக்கு கடனுதவிகளை வழங்குகின்றபோது இறுக்கமாக விதிமுறைகளை பின்பற்றாது பொருத்தமான விவசாயிகளை இனங்கண்டு கடனுதவிகளை வழங்குதல் வேண்டுமென தெரிவிக்கப்பட்டதோடு, யாழ்ப்பாண மாவட்டத்தில் 840042 வீட்டுத் தோட்டப் பயனாளிகளுக்கு தலா 5000 ரூபா பணமாகவும், உள்ளீடாகவும் வழங்கப்படவுள்ளதெனவும் குறிப்பிடப்பட்டது.
சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இளம்முயற்சியாளர்களுக்கு பதினாறு கிலோ மிளகாய் விதைப் பக்கேட் வழங்கப்படவுள்ளதோடு, ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் இரண்டு பேரிற்கு காளான் விதைப் பக்கேட்களும் வழங்கப்படவுள்ளதெனவும் குறிப்பிடப்பட்டது.
மேலும், இக் கூட்டத்தில் வங்கிகளினூடாக விவசாயிகளுக்கு கடன்கள் வழங்குதல்,வழமைக்கு மாறான கூடுதலான மழைவீழ்ச்சியால் விவசாயிகள் எதிர்நோக்கிய பிரச்சனைகள், நெல் கொள்வனவு, இளம் விவசாயிகளை ஊக்குவித்தல், விவசாயிகளுக்கான ஓய்வூதியக் காப்புறுதி, திராட்சை பழச்செய்கை, தென்னைப் பயிர்ச்செய்கை ஆகியவற்றில் ஏற்படும் நோய்த்தாக்கம் அதற்கான தீர்வுகள், பனை மர நடுகைகள், தடுப்பணைகள் அமைத்தல், விவசாயிகளுக்கு எரிபொருட்களை பெற்றுக்கொடுத்தல் என்பன தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.






