விவசாயிகள் தமது உற்பத்திகளை தகுந்த விலையில் விற்பனை செய்வதற்கும், நுகர்வோர் குறைந்த விலையில் மரக்கறிகள் பழங்களை கொள்வனவு செய்வதற்குமான வசதிகளை உருவாக்கும் நோக்கில் 200 மில்லியன் ரூபா செலவில், யாழ்ப்பாணம் மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையம், மாண்புமிகு பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்கள் 20.03.2022 அன்று காலை 10 மணிக்கு உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து வைத்தார்.
கமத்தொழில் இராஜாங்க அமைச்சர் கௌரவ சஷீந்திர ராஜபக்ச அவர்களினதும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களினதும் அழைப்பின்பேரில், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் மாண்புமிகு பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களால் திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையம், குடாநாட்டு விவசாயிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாகும்.
சேதன பசளை உற்பத்தி மேம்பாடு மற்றும் விநியோக ஒழுங்குறுத்துகை மற்றும் நெல், தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்திகள் மற்றும் உயர் தொழில்நுட்ப கமத்தொழில் இராஜாங்க அமைச்சின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட இந்த விசேட பொருளாதார மத்தியநிலையத்திற்கு பதுளை பொருளாதார மத்திய நிலையம் மற்றும் யாழ் சந்தையிலிருந்து அத்தியாவசிய மரக்கறிகள் மற்றும் பழங்கள் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன், இராமநாதன், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் , மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் துறைசார் உயர் அதிகாரிகள், பிரதேச மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்





